உங்கள் பழைய / புதிய போட்டோக்களை ஸ்கேன் செய்து டிஜிட்டலாக மாற்ற உதவும் ஆப்!
புகைப்படம் என்பது ஒரு கலை. அதற்கு மிகப்பெரிய வலிமை உள்ளது. உலக வரலாற்றை மாற்றும் சக்தி புகைப்படத்திற்கு உண்டு. புகைப்படம் ஒவ்வொருவரின் வாழ்க்கையோடு ஒன்றி இணைந்துள்ளது. வரலாற்று நிகழ்வுகள், இன்பம், துன்பம், பொதுக்கூட்டம், தலைவர்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள் என அனைத்தையும் நம் கண்முன் கொண்டுவந்து காட்டுகிறது. ஒரு தலைமுறையின் சாதனைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டும் ஒரு வழிகாட்டியாக புகைப்படம் விளங்குகிறது.

நமது வீட்டில் நடந்த ஒரு விழாவினை பல ஆண்டுகள் கழித்து, மீண்டும் அதனைப் பார்த்து மகிழ்வதற்கு நமக்கு உதவுவது புகைப்படங்களே. நமது குழந்தைப் பருவம், வாலிபப் பருவம், திருமணம் உள்பட பல மறக்க முடியாத காலக்கட்டங்களை திரும்பிப் பார்க்க உதவுகிறது. நமது பழைய புகைப்படங்களை பார்க்கும் போது நமது மூளை அந்த இளமைக் காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இளமையில் நாம் இப்படி இருந்தோம். இன்றைக்கு எப்படி முகம், உடல் மாறிவிட்டது என்பதை ஒப்பிட்டுப் பார்க்க புகைப்படங்கள் உதவுகின்றன. நமது தாத்தா, முன்னோர்களின் புகைப்படங்கள் இருந்தால் அவர்கள் எப்படி இருந்தார்கள், எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது.
இதனிடையே தற்போது ஸ்மார்ட்போன் யுகத்தில் ஒளிப்படங்களை எடுப்பதும், பகிர்ந்துகொள்வதும் எளிதாக இருக்கிறது. எல்லாம் சரி, பழைய காலத்தில் எடுத்த ஒளிப்படங்களை என்ன செய்வது? அவற்றை டிஜிட்டல் வடிவில் பாதுகாப்பதுதானே சரியாக இருக்கும். இதற்காகப் பழைய ஒளிப்படங்களை ஸ்கேன் செய்து டிஜிட்டல் வடிவுக்கு மாற்றலாம். ஆனால் இதற்குக் கொஞ்சம் மெனக்கெட வேண்டும். இந்தப் பணியை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள கூகுள் புதிதாக ஒரு செயலியை அறிமுகம் செய்துள்ளது.
‘போட்டோஸ்கேன்’ எனும் அந்தச் செயலி மூலம் ஒருவர் தன்னிடம் உள்ள ஒளிப்படங்களை எளிதாக ஸ்கேன் செய்துகொள்ளலாம். இந்தச் செயலியைத் திறந்து, வீட்டில் ஆல்பத்தில் உள்ள ஒளிப்படங்களைப் படம் பிடிக்க வேண்டும். உடனே போன் திரையில் நான்கு வட்டங்கள் தோன்றும். நடுவே ஒரு வட்டம் இருக்கும். நான்கு வட்டங்களும் நடு வட்டத்தில் வரும் வகையில் செய்ய வேண்டும். அதன் பிறகு அந்தப் படம் முழுவதும் ஸ்கேன் ஆகிவிடும். அவற்றில் உங்களுக்குத் தேவையான படத்தைச் சேமித்துக்கொள்ளலாம். இதன் மூலம் பழைய படங்களை எளிதாக டிஜிட்டல்மயமாக்கி விடலாம். இது ஆண்ட்ராய்டு, ஐபோன் இரண்டிலும் செயல்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு: ஆந்தை டெக்னாலஜி என்ற லிங்க்-கை க்ளிக் செய்யவும்
சைபர்சிம்ஹன்


