நல்ல பத்திரிகை என்றால் என்றால் கலைமகள், கல்கி- மாலன்!

நல்ல பத்திரிகை என்றால் என்றால்  கலைமகள், கல்கி- மாலன்!

லைமகள் என்பது வெறும் பத்திரிகையல்ல, அது ஓர் அறிவியக்கமாகத் தோன்றியது. கலைமகளின் தொடக்க கால ஆசிரியர் உ.வே.சா. அவரது முயற்சிகள் இல்லை என்றால், இன்று, நாம் தமிழ் உலகின் தொன்மையான மொழி என்று ஊரெல்லாம் முழக்கித் திரிவதற்கு முகாந்திரமே இல்லாமல் போயிருக்கும். அதன் ஆரம்பகாலத்தில் கலைமகளுக்கு ஓர் ஆசிர்யர் குழு இருந்தது. அதில் இடம் பெற்றவர்கள் எல்லோரும் தத்தம் துறைகளில் பேராளுமை கொண்ட அறிஞர்கள். விவரங்களைச் சொல்லப் போவதில்லை. பெயர்களை மாத்திரம் சொல்கிறேன். கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, வையாபுரிப் பிள்ளை, ராகவய்யங்கார், பெ.நா. அப்புசாமி, பிஸ்ரீ, கா.ஸ்ரீ ஸ்ரீ. இதில் எனக்கு ஒரு சொல்ப சந்தோஷம், அல்ப சந்தோஷமல்ல, சின்ன சந்தோஷம் உண்டு. இவர்களில் பெரும்பாலானோர் திருநெல்வேலிக்காரர்கள். அவர்கள் தங்களது எழுத்துக்களால் தாங்கள் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, அதற்கு அடுத்து வந்த தலைமுறைகளிலும் தாக்கம் செலுத்தினார்கள்.

கே. ஏ. நீலகண்டசாஸ்திரியில் உள்ள கே கல்லிடைக்குறிச்சியைக் குறிக்கிறது. அவர் தாமிரபரணி தந்த தனயன். ஆனால் அவர் இல்லை என்றால் பொன்னியின் செல்வன் இல்லை. அவரது இம்பீரியல் சோழாஸ் மற்றும் சதாசிவப் பண்டாரத்தார் நூல்களை அடிப்படையாகக் கொண்டே கல்கி தனது பாத்திரங்களை உருவாக்கினார். அண்மையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்ரி பதிப்பித்த நூல் வெளியிட்டு விழாவில் தனக்கு திருப்பாவை அறிமுகமானது பிஸ்ரீயின் நூலின் மூலமாக எனச் சொன்னார்.

அறிவியக்கமாக மலர்ந்த இதழில் இலக்கிய மணத்தைச் சேர்த்தவர் கி.வா.ஜ. அப்பாவின் நண்பராக அவர் சிறிய வயதில் எனக்கு அறிமுகமானார். 1960 களின் தொடக்கமாக இருக்கலாம். மதுரையில் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு ஒன்று நடந்தது. அதற்கு கி.வா.ஜ. ஆர்.வி. தி,ஜ.ர, அகிலன், சுகி சுப்ரமணியம் எல்லோரும் வந்திருந்தார்கள். அப்பா கி.வா.ஜவை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார். அவர்கள் வரும் நேரம் எனக்கும் என் சகோதரனுக்கும் இடையே வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. என் சகோதரன் எப்போதுமே வாதத்தில் மல்லுக்கட்டமாட்டார். நானோ பிடித்த முயலுக்கு மூணே கால் அல்ல முணேகால் கால் என விடாக் கண்டன். அவர்கள் இருவரும் வந்ததும் என் பேச்சு நின்று விட்டது. ஆனால் என் குரல் உயர்ந்ததை கி.வா.ஜ கேட்டிருந்திருக்க வேண்டும். அருகில் வந்து முதுகில் வாஞ்சையோடு சாந்தப்படுத்துவது போலத் தடவிக் கொடுத்தார். அப்பா ஆட்டோகிராஃப் வாங்கிக்கோடா என்றார். நான் என் ஆட்டோகிராப் புத்தகத்தை நீட்டினேன். “இன்சொல்லால் உலகத்தை வெல்லலாம்” என்று எழுதிக் கையெழுத்திட்டார். எனக்கு அது ஒரு திறப்பு. வாதத்தில் வெல்ல வேண்டுமானால் குரலை உயர்த்த வேண்டியதில்லை என அன்று புரிந்தது.

கலைமகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் கடினமான பணியை கீழாம்பூர் செய்து வருகிறார். விழுமியங்கள், ரசனை, வாசிப்பு என்பது மாறிவிட்ட காலத்தில் தரத்தைக் கைவிடாமல் பத்திரிகை நடத்துவது அத்தனை எளிதல்ல. அது ஒற்றைச் சக்கர சைக்கிள் ஓட்டுவது போன்றது. அதை அவர் 27 வருடங்களாகச் செய்து வருகிறார்!

எனக்கு சர்வதேச விருது, இந்திய அளவிலான விருது , இலக்கிய அமைப்புகளின் விருது எனச் சில விருதுகள் கிடைத்திருக்கின்றன. ஆனால் இந்த விருதை ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த விருதாகக் கருதுகிறேன். காரணங்கள் மூன்று எனக்கு ஆசான், நண்பன், விமர்சகன் எல்லாம் பாரதிதான். பாரதியினுடைய அதுவரை வெளிவராத கவிதைகளை முதலில் வெளியிட்ட பெருமை கலைமகளினுடையது. 1966 கலைமகள் தீபாவளி மலரில் பாரதியின் சகோதரர் விஸ்வநாதன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் அதில் அதுவரை வெளிவராத பாரதியின் காதலும் துறவும் என்ற கவிதையை வெளியிட்டிருந்தார். பெ.தூரன் பாரதியின் படைப்புக்களை நூலாகக் கொண்டு வந்த போது சிலவற்றை ‘கலைமகளில் பிரத்யேகமாக வெளியானது’ எனக் குறிப்பிட்டிருந்தார்

என் முதல் சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரை எழுதியவர் தி.ஜானகிராமன். தி.ஜா. தனது ஐம்பதாண்டுக்கும் மேற்பட்ட இலக்கியப் பயணத்தில் ஐந்து பேருக்குத்தான் முன்னுரை எழுதியிருக்கிறார். இருவர் அவரது நெருங்கிய நண்பர்கள். எம்.வி.வி, ஆர்.வி. இருவர் அவரது சக தில்லி வாசிகள். இ.பா, ஆதவன். ஐந்தாவதாக இது எதிலும் இல்லாத நான். அந்த முன்னுரையில் தி.ஜா. என்னுடைய ஒரு கதையைப் படித்துவிட்டு சிலிர்த்துப் போய் சில வரிகள் எழுதியிருந்தார். “இது சென்டிமெண்டாலிட்டி என்று எள்ளப்படுகிற பேதைத்தனமல்ல. உண்மையை அழகை தரிசிக்கும் போது ஆளையே வேரோடு ஆட்டுகிற ஒளியாட்டம். நல்ல சங்கீதத்தைக் கேட்கும் போது ஊழிக்கூத்தைப் பாரதியார் பார்க்கும் போது, நந்திதேவனை, கவச குண்டலங்களைப் பிய்த்துக் கொடுத்த கர்ணனைப் பார்க்கும் போது ஏற்படும் தரிசனம் ஒளி உதயம்” என்று எழுதியிருந்தார். என்னுடைய முதல் நாவல் வெளியான போது வெளியான மறுநாள் தில்லியிலிருந்து, ‘ அருமையாக வந்திருக்கிறது. ஞாபகத்தை தூங்க அடிக்காமல் இருப்பதுதான் நல்ல எழுத்து. அதனால்தான் இது நல்ல படைப்பு” என்று கடிதம் எழுதினார். அந்த தி.ஜா தன் வாழ்நாளில் மொத்தம் 122 கதைகள் எழுதினார். அவர் அதிகம் கதைகள் எழுதிய பத்திரிகை கலைமகள். கலைமகளில் 25 கதைகள் எழுதினார். அதற்கு அடுத்தபடியாக கல்கியில் 22. ஆனந்த விகடனில் 20.

பத்திரிகைகளில் பெரிய பத்திரிகை சிறிய பத்திரிகை என்றெல்லாம் கிடையாது. நல்ல பத்திரிகை மோசமான பத்திரிகைதான் உண்டு என்று திஜா சொல்வார். நான் எழுத ஆரம்பித்த காலத்தில் இலக்கியச் சிற்றேடுகள் தபாலில் வரும். அவற்றில் சட்டென்று புரியாத மார்டன் ஆர்ட் அட்டையிலும் உள்ளும் இடம் பெற்றிருக்கும். அட்டையை நோட்டுப்புத்தகத்திற்குப் போடுகிற பிரவுன் காகிதத்தில் அச்சடித்திருப்பார்கள். அதைப் பார்த்த அம்மா, ஏண்டா, எழுதறதுதான் எழுதற, நல்ல பத்திரிகையில் எழுதக் கூடாதோ என்பார். நல்ல பத்திரிகை என்றால் என்னம்மா என்றால் கலைமகள், கல்கி என்பார்.

இந்த விருதை இந்த மூவரும் சேர்ந்து அளிக்கும் ஆசிர்வாதமாகக் கருதி நெகிழ்கிறேன். நான் எனக்கு கிடைத்த விருதுகள் எல்லாம், எனக்கு அளிக்கப்பட்டவை அல்ல, , அருளப்பட்டவை எனக் கருதுவது வழக்கம். அவை என் மொழிக்கு, அதன் மரபிற்கு, அதைச் செழுமைப்படுத்திய என் முன்னோடிகளுக்கு அளிக்கப்பட்டவை, அவர்கள் சார்பில் அதை நான் பெற்றுக் கொள்கிறேன் என்று கருதுகிறவன். அதனால் அவற்றை அவர்களுக்கு சமர்பிப்பது வழக்கம். எனக்கு பாரதிய பாஷா விருது அளிக்கப்பட்ட போது, அதை தங்கள்து மொழியில் எழுதிய போதிலும் பிற இந்திய மொழிகளில் தாக்கம் ஏற்படுத்தியவர்கள் என்று தாகூருக்கும், பங்கிம் சந்திரருக்கும் அர்ப்பணித்தேன். சாகித்ய அகாதெமி பரிசை மொழிபெயர்ப்பு மொழியாக்க முன்னோடிகள் கம்பன், பாரதி, த.நா. குமாரசாமி, கா.ஸ்ரீஸ்ரீ உள்ளிட்டவர்களுக்கு அர்ப்பணித்தேன். ‘உரத்த சிந்தனை’ வாழ்நாள் சாதனை விருது அளித்த போது வாழ்நாள் முழுதும் எனக்கு உறுதுணையாக இருந்து வரும் என் சகோதரருக்கு அர்பணித்தேன்.

இலக்கியம் பத்திரிகை என இரு குதிரைகளில் பயணித்த என் முன்னோடிகளின் பட்டியல் பாரதி, திரு.வி.க, எனத் தொடங்கி, கல்கி, சி.சு..செல்லப்பா, பி.எஸ்.ராமய்யா, க.நா.சு, கஸ்தூரிரங்கன், நா.பா என விரிந்து இன்று வரை கீழாம்பூர் ,திருப்பூர் கிருஷ்ணன் எனத் தொடர்கிறது. இந்த விருது அவர்களுக்கு உரியது. இதை அந்த முன்னோடிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்.

error: Content is protected !!