குட் டே – விமர்சனம்!
சமீபகாலமாக போதைக்கு அடிமையான அல்லது போதைப் பொருள் பற்றிய கதைகள் கொண்ட படங்கள் அதிகமாக வர ஆரம்பித்துள்ளது. கோலிவுட் சினிமாக்களில் ஒரு காலத்தில் பீடி, சிகரெட் பிடிக்கும் காட்சிகள் அதிகம் இருந்தது. அதன்பிறகு சாராயம், கள்ளு குடிப்பது போன்ற காட்சிகள் வர ஆரம்பித்தது. தற்போது அரசே நடத்தும் ‘டாஸ்மாக்’ காட்சிகள் இல்லாத படங்களைப் பார்க்கவே முடியாது என்ற நிலை உருவாகிவிட்ட் நிலையில் அந்த பட்டியலில் இன்னொரு படமாக வந்துள்ளது ‘குட் டே’ என்ற டைட்டிலில் ஒரு சினிமா. இதில் குடிகாரன் திருந்த வேண்டும் என்ற கருத்தை சொல்ல வந்துவிட்டு ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை நாயகனை குடிகாரனாகவே காட்டிவிட்டு அந்த குடிமூலம் ஒரு நல்ல காரியத்தையும் அவர் செய்தார் என்று முடிக்கிறார்கள். இதன் மூலம் குடிப்பழக்கம் நல்லது என்று சொல்ல வருகிறாரா அல்லது குடிக்காதே என்று சொல்ல வருகிறாரா என்ற குழப்பத்துடன் தியேட்டரை விட்டு வெளியேற வைப்பதுதான் சோகம்.
அதாவது பனியன் ஃபேக்டரி ஒன்றில் வேலை செய்யும் பிரித்விராஜ் ராமலிங்கம் தன்னுடன் பணிபுரியும் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் செய்யும் கம்பெனியில் முதலாளி மற்றும் மேனேஜரை கண்டிப்பதால் அவர்களின் கோபத்துக்கு ஆளாகி அடுத்தடுத்து பல பிரச்னைக்கு ஆளாகிறான்.குறிப்பாக மாத ஊதியத்தை கொடுக்காமல் இழுத்தடித்து பாடாய்படுத்தி டென்ஷன் ஏறிய பின்னர் கொடுக்கிறார்கள். அந்த சம்பளம் கிரெடிட் ஆனவுடன் அதை எடுத்து மனைவிக்கும் அம்மாவுக்கும் அனுப்புகிறார். உடனே அம்மாவுக்கு பணம் அனுப்பியது தொடர்பாக போனில் மனைவி கேள்விக் கேட்டு குடைந்து டார்ச்சர் செய்கிறார். இப்படியாக ஏற்பட்ட டிப்ரஸனை குறைக்க நாட்டு வழக்கப்படி ‘சரக்கு’ வாங்கிக்கொண்டு, பேச்சலருடன் தானும் பங்கு போட்டு தங்கியிருக்கும் வாடகையறைக்கு அந்த இரவில் வந்து குடிக்கிறார். அச்சமயம் ஹவுஸ் ஓனர் வாடகைக்கான ரசீதைக் கொண்டு வந்து கொடுக்க, முழு மப்பில் இருக்கும் சாந்தகுமார், “முறைவாசல் முன்னூறு ரூவான்னு போட்டிருக்கே! உன் வீட்டுவாசலை கூட்டி, தெளிச்சு, கோலம் போடுறதுக்கு நான் ஏன் பணம் தரணும்?” என்று கேடக், வாக்குவாதம் முற்ரிய சூழலில் ஒரு கல்லை எடுத்து வீசி விடுகிறார். அந்த கல் ஹவுஸ் ஓனரின் மண்டையைப் பிளந்து விடுகிறது. உடனே ஓனர் அலறியடித்து போலீஸூக்கு போன் செய்ய நாயக் அங்கிருந்து நழுவிச் சென்றுவிடுகிறார்.வழியில் கல்லூரியில் உடன்படித்த தோழி வீட்டுக்கு இரவில் மெழுகுவர்த்தியுடன் போய் கணவன் முன்னிலையில் வம்பு செய்கிறார். இதனால் குய்யோ முறையோ என்று கத்தும் கணவன் குரலைக் கேட்டு மிரண்டு ஓடும் வழியில் அவரைப் போலவே முழு போதையில் இருக்கும் ஆட்டோவில் ஏறி போகும் வழியில் ஏடிஎம் இயந்திரத்தை அடித்து உடைக்கிறார். இத்தனையும் செய்த நிலையில் கொஞ்சம் போதை குறைந்ததால் தன் மீதே கழிவிரக்கம் கொள்ளும் நாயன் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் மேம்பாலத்தின் மீது ஏறி நிற்கும் போலீஸிடம் சிக்குகிறார். ஸ்டேசனில் அப்போது 4 வயது பெண்குழந்தை காணாமல் போனதாக புகார் வர அது குறித்து விசாரிக்க போலீஸ் நிலையமே பரபரப்பாஅகிறது. அச்சமயம் நாயகன் இன்ஸ்பெக்டரின் காக்கிச்சட்டையை அணிந்துகொண்டு அவரது வாக்கி-டாக்கியை எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆகிறார். அதன் பிறகு நடந்தது என்ன என்று சொல்வதுதான் குட் டே படக் கதை.
பிரிதிவிராஜ் ராமலிங்கம் என்பவர் இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆகியிருப்பத்துடன் படத்தையும் தயாரித்து இருக்கிறார். நடிப்புதான் என்றாலும் குடித்துவிட்டு அலப்பறை செய்யும் அவரது சீங்கள் ஒவ்வொன்றும் எல்லை மீறி செல்கிறது. குரிப்பாக கல்லூரியில் உடன்படித்தார் என்பதற்காக திருமணமாகி குழந்தையுடன் இருக்கும் தோழியின் வீட்டுக்குச் சென்று அவரது கணவர் கண் எதிரிலேயே தோழியை கேக் வெட்ட சொல்லி செய்யும் அட்ராசிட்டி யாராக இருந்தாலும் கோபத்தைத்தான் வரவழைக்கும். அந்த வகையில் இவரின் அட்டூழியம் கடுப்பேற்ற தவறவில்லை.
நாயகனின் கல்லூரி தோழியாக நடித்திருக்கும் மைனா நந்தினி ஒரு சில காட்சிகள் வந்தாலும் நடிப்பில் அசத்துகிறார். எதிர்பார்க்காத அதிர்ச்சி மற்றும் ஏக்கத்தை தனது முகத்தில் காட்டி அந்த ஒரு காட்சியிலேயே ஒட்டு மொத்த திரையரங்கையும் சிரிக்க வைத்துவிடுகிறார்.
இன்ஸ்பெக்டர் தயாளனாக கலை இயக்குநர் விஜய் முருகனின் விறைப்பான உடம்பும், கனமான குரலும் கதாபாத்திரத்துக்குப் பத்து பொருத்தத்துடன் அமைந்திருக்கிறது. கருமமே கண்ணாக பணியில் வேகம் காட்டும் பெண் சப்-இன்ஸ்பெக்டராக வரும் ஜீவா சுப்பிரமணியம் கவனிக்க வைக்கிறார். ஆட்டோ டிரைவர் நேருவாக வரும் காளி வெங்கட், சுல்தான் பேட்டையாக வரும் பக்ஸ் (எ) பகவதி பெருமாள், பஸ் கண்டக்டராக வரும் போஸ் வெங்கட், வெட்டியான் தவவேலுவாக வரும் வேல.ராம்மூர்த்தி, மாடர்ன் சாமியாக வரும் கார்த்திக் நேத்தா, மற்றும் பாரத் நெல்லையப்பன் உள்ளிட்டோர் தங்களுக்கு கிடைத்த ரோலுக்கு தேவையானதை சரியாக வழங்கியுள்ளனர்.
அன்றாட வாழ்க்கையில் நாம் சாலையோரம், பேருந்து, தியேட்டர், கடைத் தெரு… ஏன்… சக நண்பர்களிடம் கூட இப்படிப்பட்ட மனிதர்களை அனுதினமும் பார்த்திருப்போம். சில சமயம் வேடிக்கையாக; சில சமயம் கோபமாக! அப்படி வேடிக்கையாகவோ, அல்லது ஆத்திரமூட்டும் வகையிலோ தோற்றமளித்து, “மதுபானத்துக்கு நாங்க கொடுக்கிற பணத்தில் தான் இந்த அரசாங்கமே நடக்குது! போவியா…” என்று சலம்பித் திரியும் சுவாரஸ்யமான மனிதர்களின் பிரதிபலிப்பு தான் இப்படம் என்றாலும் ட்ரீம் வாரியார்ஸ் நிறுவனதுக்கென்று சில கருத்துகளில் ஒன்று – நல்ல படங்களை தேர்வு செய்து வெளியிடுவார்கள் என்ற கருத்துண்டு . அவர்களது தேர்வும் இப்போதெல்லாம் தவறாகி விடுகிறது என்பதையும் உணர வைத்த படமிது.
மொத்தத்தில் குட் டே – காலி பாட்டில்
மார்க் 2/5


