தமிழ் சினிமாவில் தனது அசாத்தியமான காந்தக் குரலாலும், மிரட்டலான வில்லன் மற்றும் குணச்சித்திர நடிப்புகளாலும் குறுகிய காலத்திலேயே தனக்கெனத் தனி சிம்மாசனம் அமைத்தவர் நடிகர் அர்ஜுன் தாஸ். கைதி, மாஸ்டர் படங்களின் இருண்ட கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, இப்போது ஒரு பக்கா ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகியுள்ள “கான் சிட்டி” திரைப்படம் மூலம் ரசிகர்களை மகிழ்விக்கத் தயாராகியுள்ளார்.
ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் எமோஷனல் எனப் பல அடுக்குகள் கொண்ட இந்த “கான் சிட்டி” படத்தின் ரிலீஸை முன்னிட்டு, சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் அர்ஜுன் தாஸ். தனது ஆரம்பகால சினிமா போராட்டம், பரவி வரும் திருமண வதந்திகள், ஃபேவரிட் வில்லன் கதாபாத்திரங்கள் மற்றும் தனது எதிர்கால சினிமா திட்டங்கள் குறித்து அவர் மனம் திறந்து பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யமான தகவல்கள் இதோ:

“பத்திரிகையாளர்களின் விமர்சனமே என் வழிகாட்டி!”
சந்திப்பின் தொடக்கத்திலேயே ஊடகங்களுக்கும் ரசிகர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார் அர்ஜுன் தாஸ்.
“நான் நடித்த ஒவ்வொரு படம் முடியும்போதும், பத்திரிகையாளர்கள் பலர் தனிப்பட்ட முறையில் என்னிடம் வந்து தங்களது நேர்மையான விமர்சனங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொள்வார்கள். அந்த வார்த்தைகள் வெறும் பாராட்டுக்கள் மட்டுமல்ல, எனது அடுத்தடுத்த படத் தேர்வுகளிலும், நடிப்பை மெருகேற்றுவதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ரசிகர்கள் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை உங்கள் மூலமாகவே நான் கற்றுக்கொள்கிறேன்.”
மேலும், படம் ரிலீஸான பிறகு மீடியாக்கள் என்ன எழுதுகிறார்கள் என்பதைத் தனது பெற்றோர்கள் மிகவும் ஆர்வமாகக் கேட்பார்கள் என்றும், பாசிட்டிவ் விமர்சனங்களை அவர்களிடம் பகிர்ந்து மகிழ்வதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
“இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்!”
தனது புதிய படமான ‘கான் சிட்டி’ குறித்து அர்ஜுன் தாஸ் பேசுகையில், இது தியேட்டருக்கு வரும் குடும்ப ரசிகர்களுக்கு ஒரு செம்ம ட்ரீட்டாக இருக்கும் என்றார்.
“கதையைப் பற்றி இப்போது அதிகமாகச் சொல்லி சஸ்பென்ஸை உடைக்க விரும்பவில்லை. ஆனால், இது ஒரு நடுத்தரக் குடும்பம், அவர்களது எதார்த்தமான வாழ்க்கை, அதில் நடக்கும் எமோஷனல் மற்றும் ஃபன்னான தருணங்களை மையமாகக் கொண்ட ஒரு அழகான, மகிழ்ச்சியான திரைப்படம். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகக் குடும்பத்துடன் தியேட்டரில் ஜாலியாக, நிம்மதியாக ரசித்துச் சிரிப்பதற்கான கேரண்டி இந்தப் படத்தில் இருக்கிறது.”
இப்படத்தில் தான் ஏற்றிருக்கும் கேரக்டர் பற்றிப் பகிர்ந்தவர், “இது கடன்கள், குடும்பப் பொறுப்புகள், அன்றாட வாழ்க்கைச் சவால்கள் என நம்மைச் சுற்றி வாழும் ஒரு சாமான்ய நடுத்தர வர்க்கத்து இளைஞனின் கதை. பலரும் தங்களோடு கனெக்ட் செய்துகொள்ளும் வேடம் என்பதால் எனக்கு உடனே பிடித்துவிட்டது” என்றார். உடன் நடித்த சக கலைஞர்களின் அர்ப்பணிப்பும், ஒழுக்கமும் தனக்கு ஒரு சிறந்த பாடம் என்றும் பாராட்டினார்.
“ஃபேமிலி ஆடியன்ஸுக்காகத்தான் இப்போது கதைகளைத் தேர்வு செய்கிறேன்!”
தொடர்ந்து ரஃப் அண்ட் டஃப் ரோல்களிலேயே பார்க்கப்பட்ட அர்ஜுன் தாஸிடம், திடீரென இந்த ரூட் மாற்றத்திற்கான காரணம் குறித்துக் கேட்கப்பட்டது.
“நான் தியேட்டர்களுக்குச் சென்று ரசிகர்களை நேரடியாகச் சந்திக்கும்போது, குறிப்பாகக் குடும்ப ரசிகர்களும், மூத்த பெண்மணிகளும் ‘தம்பி, நாங்க எல்லாரும் குடும்பத்தோட ஒண்ணா உட்கார்ந்து பார்க்குற மாதிரியான படங்கள்ல நடிப்பா’ என்று அன்போடு கேட்பார்கள். அவர்களின் அந்த வேண்டுகோளுக்காகவே, தற்போது குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையிலான கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தேர்வு செய்து வருகிறேன்.”
இப்போது நெகட்டிவ் ரோல்கள் மட்டுமின்றி காமெடி, எமோஷனல், ஃபேமிலி டிராமா எனப் புதிய இயக்குநர்களின் மாறுபட்ட கதைகளில் பயணிப்பது பெரும் திருப்தியைத் தருவதாகக் கூறினார்.
சோஷியல் மீடியா திருமண வதந்திக்குச் சிரிப்பலை விளக்கம்!
சமீபகாலமாகச் சமூக வலைத்தளங்களில் அர்ஜுன் தாஸுக்குத் திருமணம் முடிந்துவிட்டது அல்லது நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது எனப் பரவி வரும் வதந்திகளுக்குப் புன்னகையுடன் முற்றுப்புள்ளி வைத்தார்.
“எங்கிருந்துதான் அந்த நியூஸ் வருதுன்னே தெரியலை. சோஷியல் மீடியால பார்த்த Header-ஐ வச்சுட்டு, வீட்டிலேயும் சொந்தக்காரங்க மத்தியிலேயும் ‘என்ன விசேஷம்?’னு தொடர்ந்து கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா, உண்மையிலேயே அப்படி எந்தவொரு நிச்சயதார்த்தமோ அல்லது திருமண ஏற்பாடுகளோ நடக்கவில்லை. எல்லாமே வெறும் வதந்திதான்” என்று சிரித்தபடி தெளிவுபடுத்தினார்.
“ஹீத் லெட்ஜரின் ஜோக்கர் தான் என் ஃபேவரிட் வில்லன்!”
வில்லன் கதாபாத்திரங்கள் குறித்தும், தனக்குப் பிடித்த வில்லன்கள் குறித்தும் அர்ஜுன் தாஸ் சுவாரஸ்யமான பல பார்வைகளைப் பகிர்ந்துகொண்டார்.
“நான் நடித்த வில்லன் கதாபாத்திரங்களை மக்கள் வெறுக்காமல் ஏற்றுக்கொண்டதற்குக் காரணம், அவர்களின் செயலுக்குப் பின்னால் இருக்கும் எமோஷனல் பின்னணிதான். ஒரு கேரக்டர் தம்பி மேல இருக்குற பாசத்தால தப்பு பண்ணுது, இன்னொன்னு கடந்த காலக் காயங்களால அந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்குது. வில்லனுக்கும் ஒரு வலுவான பேக்-ஸ்டோரி இருக்கும்போதுதான் அது மக்கள் மனதில் நிற்கும்.”
உலக சினிமாவிலேயே தனக்கு மிகவும் பிடித்த வில்லன் கேரக்டர் ‘தி டார்க் நைட்’ படத்தில் ஹீத் லெட்ஜர் நடித்த ‘ஜோக்கர்’ கதாபாத்திரம் என்று கண் விளிம்புகள் விரியக் குறிப்பிட்டார். அதேபோல், தமிழ் சினிமாவில் தனக்கு மிகவும் பிடித்த, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட வில்லன் கேரக்டர் ‘தனி ஒருவன்’ படத்தில் அரவிந்த் சுவாமி நடித்த ‘சித்தார்த் அபிமன்யு’ தான் என்றார். எதிர்காலத்திலும் ஒரு வெயிட்டான, ஆழமான நெகட்டிவ் ரோல் வந்தால் கண்டிப்பாக மீண்டும் வில்லனாக மிரட்டத் தயார் என்றும் அறிவித்தார்.
‘ஒன்ஸ் மோர்’ படத்தின் சஸ்பென்ஸ் தலைப்பு!
தன் கைவசம் இருக்கும் அடுத்தடுத்த படங்கள் குறித்துப் பேசும்போது, தற்போது உருவாகி வரும் ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படத்தின் டைட்டில் கார்டு ரகசியத்தை லேசாகத் தட்டிவிட்டார். “அந்தப் படத்திற்கு ‘ஒன்ஸ் மோர்’ என்று தலைப்பு வைத்ததற்குப் பின்னால் ஒரு மிக முக்கியமான, சுவாரஸ்யமான காரணம் இருக்கிறது. அதை இப்போது சொன்னால் சுவாரஸ்யம் கெட்டுவிடும், படம் தியேட்டருக்கு வரும்போது ரசிகர்களுக்கு அந்த சஸ்பென்ஸ் தானாகவே புரியும்” என்று ஒரு மர்மப் புன்னகையோடு பிரஸ் மீட்டை நிறைவு செய்தார் அர்ஜுன் தாஸ்!

