வானளாவிய அதிகாரம் படைத்தவர் என்று பிரகடனப்படுத்திய பி.ஹெச், பாண்டியன் மரணம்!

வானளாவிய அதிகாரம் படைத்தவர் என்று பிரகடனப்படுத்திய பி.ஹெச், பாண்டியன் மரணம்!

அதிமுகவை சேர்ந்தவர் முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சில  தினங்களுக்கு பிறகு சென்னையில் உள்ள போரூரில் ஒரு தனியார் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். அங்கு இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.  ஆளும் கட்சியான அதிமுகவின் முக்கியப் புள்ளியான பி.எச்.பாண்டியன் மறைவு, அதிமுகவுக்கு பெரிய இழப்பாகவே பார்க்கப்படுகிறது.

பி.ஹெச்.பாண்டியன், நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள கோவிந்தபேரியில் 1945-ம் ஆண்டு பிறந்தார். சட்டப் படிப்பில் முனைவர் பட்டம் பெற்ற பி.ஹெச்.பாண்டியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1960களின் இறுதியில், வழக்கறிஞராக பணியை தொடங்கிய பி.எச்.பாண்டியன், அன்றைய காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட ஆளவந்தார் கொலை வழக்கை நடத்திய அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜே.எஸ்.அதனேஷியஸிடம் ஜூனியராக பணியில் சேர்ந்தார்.

பின்னர் அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர்களாக இருந்த ஆர்.கோகுலகிருஷ்ணன், வி.ராமசாமி ஆகியோரிடமும் ஜூனியராக பணியாற்றினார்.

இதன் பின்னர் அதிமுக- வில் சேர்ந்து 1977 – 1989 வரை 3 முறை சட்டசபை உறுப்பினர்.

1985 – 1989 வரை சட்டசபை சபாநாயகர் -ஆக இருந்தார்

இந்நிலையில் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு, அதிமுக ஜா., அணி , ஜெ., அணி என்று இரண்டாவது பிரிந்தது. அதாவது, ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாகப் பிரிந்தபோது, பி.எச். பாண்டியன் ஜானகி அணியில் அங்கம் வகித்தார். ஜானகி அணி சார்பாகப் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினராகப் பொறுப்பேற்ற ஒரே ஒரு நபரும் இவர்தான். பிறகு. ஜெ., அணியில் பி.எச். பாண்டியன் இணைந்தார்.

தொடர்ந்து இவர் 1999ல் நெல்லை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

இவர் மகன் மனோஜ் பாண்டியன் அதிமுகவின் முக்கியப் புள்ளியாக வலம் வருபவர். சசிகலா அதிமுகவைக் கைப்பற்றியபோது எதிர்க் குரல் எழுப்பியவர்.

சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம்
‘சட்டசபை நடவடிக்கைகளில் சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது…’ 1980-களின் மத்தியில் பிரபலமான இந்த வாசகங்களுக்கு சொந்தக்காரர் அப்போது சபாநாயகராக இருந்த பி.எச்.பாண்டியன். அவர் சபாநாயகராக இருந்தபோது எடுத்த முடிவுகள் நாடு முழுவதும் பரவலான கவனத்தையும் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் பெற்றவை. சபாநாயகராக சில முன்மாதிரி தீர்ப்புகளையும் அளித்தவர்.

1987-ல் ஆனந்த விகடன் அட்டையில் சட்டசபையை விமர்சிக்கும் வகையில் அட்டைப்பட கார்ட்டூன் இடம்பெற்றிருந்து. இதனை கண்டித்து, சபாநாயகர் பி.எச்.பாண்டியன் விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியனுக்கு சம்மன் அனுப்பினார்.

சட்டசபைக்கு வரவழைக்கப்பட்ட பாலசுப்பிரமணியனை கூண்டில் ஏற்றிய பி.எச்.பாண்டியன், அவரை மன்னிப்பு கேட்க உத்தரவிட்டார். இதற்கு பாலசுப்பிரமணியன் மறுக்க, அவரை 3 மாதம் சிறையில் அடைக்க பி.எச்.பாண்டியன் உத்தரவிட்டார். அவரின் இந்த உத்தரவு, நாடு முழுவதும் ஹைலைட்டானது.

உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் தமக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுப்பிய சம்மனை பெற முடியாது என்ற பி.எச்.பாண்டியன், “தாம் சட்டசபைக்கு சபாநாயகர்; நீதிமன்றத்தை விட வானளாவிய அதிகாரம் தமக்கு இருக்கிறது” என பிரகடனம் செய்தார்

பி.எச்.பாண்டியன் சபாநாயகராக இருந்தபோது அரசியல் சாசன நகலை எரித்ததற்காக திமுக எம்எல்ஏக்கள் 10 பேரை தகுதி நீக்கம் செய்தார். அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றார்கள். நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், அப்போதும் அவர் சம்மனை வாங்கவே இல்லை. மேலும், வழக்கு விசாரணையில் தகுதி நீக்கம் செல்லும் என்றுதான் தீர்ப்பு வந்தது.

சபாநாயகரின் அதிகாரம் குறித்து பி.எச்.பாண்டியன் ஒரு முறை, “சட்டப்பேரவை நடவடிக்கை களைப் பொறுத்தவரையில் நீதிமன்றத்துக்கு சபாநாயகர் பதில் சொல்லக் கடமைப்பட்டவர் அல்ல. பேரவையில் அவரது முடிவுதான் இறுதியானது. நீதிமன்றத் தடை சபாநாயகரை எப்போதும் கட்டுப் படுத்தாது. அரசியல் சாசனப்படி பேரவையில் சபாநாயகருக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து யாருக்கும் அதிகம் தெரியவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

பல்வேறு சட்டசபை வழக்குகளில் சபாநாயகரின் அதிகாரம் குறித்த பி.எச்.பாண்டியனின் முழக்கங்கள் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது.

Related Posts

error: Content is protected !!