தொட்டு விடும் தூரம் – விமர்சனம்!

தொட்டு விடும் தூரம் – விமர்சனம்!

இதுநாள்வரை வெளியான சினிமாக்களில் அதிகமான படங்கள் காதலை மையமாக கொண்டு வந்தவைகள்தான். காரணம்.. இந்த ஹைடெக் உலகத்தில் கூட நாம் எதிர்பாராமலே நம்மில் தோன்றும் அபூர்வமான ஒரு விஷயம் தான் காதல். அந்த உணர்வுக்கு மயங்காதவர் எவருமிலர். அதனை விரும்பாதவர் யாரும் இல்லை. அன்பு, பாசம் போன்றவைகளுடன் அந்நியப்பட்டு நிற்பது தான் காதல். ஆணுக்கு ஒரு பெண். பெண்ணுக்கு ஒரு ஆண். பெற்றோரிடம் நாம் செலுத்தும் காதல் என்பது குடிநீரும், கண்ணீரும் போல… இரண்டும் ஒன்று போல் இருந்தாலும், அவை வேறுவேறு தான். ஆனால், ஆணுக்கும் – பெண்ணுக்கும் இடையே உள்ள காதல் என்பது தாகமும் குடிநீரும் போல…ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. இதனால்தான் இந்த காதலை மையமாகக் கொண்டு அடுத்தடுத்து சினிமாக்கள் வருகின்றன். அந்த வரிசையில் வந்திருப்பதுதான் தொட்டு விடும் தூரம் படம். ஆனால் இந்த காதல் (கோட்டை) கதையும் காண்போரை கொஞ்சமாவது கவரும் என்பது தான் ஸ்பெஷல்.

காதலுக்கு கண் ஏது என்பது போல் கதையும் தேவையில்லை என்று கண்டமேனிக்கி படம் எடுக்கும் காலத்தில் இப்படத்துக்காக இயக்குநர் கதை கூட உருப்படியாகவே யோசித்திருக்கிறார். அதாவது தமிழகத்தின் கடைகோடியில் உள்ள கிராமத்தில் மெடிக்கர் ரெப் ஆக இருப்பவர் விவேக் ராஜ். அந்த கிராமத்திற்கு சென்னையிலிருந்து என்எஸ்எஸ் கேம்ப் வந்துள்ள கல்லூரி மாணவிகளில் ஒருவர் மோனி. சேவை செய்ய வந்த இடத்தில் விவேக்-கைப் பார்த்து இம்புட்டு நல்லவரா? என்று வியந்து காதலில் விழுந்து விடுகிறார் மோனிகா. டூயட் எல்லாம் பாடிவிட்டு மீண்டும் ஊருக்குத் திரும்பும் போது நாயகனிடம் சொல்லிக்கொண்டு வர முடியாத சூழலில் பிரிந்து விடுகிறார்கள். அந்த நாயகியைதேடி நாயகன் சென்னைக்கு நாயகன் வருகிறான். ஆனால் மொபைல் தொலைந்து போனதால் தொடர்புக்கு வழியில்லாமல் போய், அருகருகே இருந்தும் சந்தித்துக் கொள்ள முடியாமல் போய் கடைசியில் எப்படிதான் சந்தித்தார்கள் என்பதை புதுசாகச் சொல்லிபார்ப்போர் மனத்தைக் கவர்ந்து விடுகிறார் இயக்குநர்.

நாயகன் விவேக்ராஜ் தன் ரோலுக்கு தேவையானதைக் கச்சிதமாக செய்து பாஸ் மார்க் வாங்குகிறார். குறிப்பாக காதலியைப் பார்க்க முடியாமல் தவிக்கும் தவிப்பை ரசிகருக்கு வெளிப்படுத்தி இருக்கிறார். சண்டைக் காட்சிகளில் அவரை ஆக்ஷனிலும் அபாரப் பாய்ச்சல் காட்டுகிறார். ஜோடி சேர்ந்திருக்கும் நாயகி மோனிகா பணக்கார வீட்டுப் பெண்ணாக இருந்தாலும் நல்ல குணம் படைத்த கல்லூரி மாணவியாக மட்டுமின்றி படம் முழுக்க கவர்ச்சி டிரெஸ்சில் வந்து அட்ராக்ட் செய்து விடுகிறார்.

நாயகன் விவேக்கின் அம்மாவாக சீதா, ரொம்பப் பாசமானவராக காட்ட முஅய்ன்றிருக்கிறார்கள். சிங்கம்புலி நகைச்சுவை படத்தில் எடுபடவில்லை. ராஜசிம்மன் வில்லனாம்.. ஹூம்..அறிமுக இசையமைப்பாளர் நோவா இசையை தியேட்டரில் கேட்கும் போது புன்னகைக்க வைக்கிறார்

பலக் காட்சிகள் முன்னொருக் காலத்தில் வந்த காதல் கோட்டையை தட்டிச் சென்றாலும் இந்த தொட்டு விடும் தூரம் கிளைமாக்ஸை வித்தியாசமாக வடிமைத்த இயக்குநருக்கு ஒரு பெரிய பூங்கொத்து கொடுத்து பாராட்டு தெரிவித்தே ஆக வேண்டும்..

மொத்தத்தில் காதலை காதலிப்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமிது!

மார்க் 3 / 5

error: Content is protected !!