ஃபேஸ்புக்-கில் அரசியல் விளமபரம் கொடுக்க புதியக் கட்டுப்பாடுகள்!

ஃபேஸ்புக்-கில் அரசியல் விளமபரம் கொடுக்க புதியக் கட்டுப்பாடுகள்!

பெரும்பான்மை ஊடகங்கள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டதால் சமூக வலைத் தளங்களை  மக்கள் பெரிதும் நம்பும் நிலையில் அரசியல் விளம்பரங்களை கொடுப்பதற்கு ஃபேஸ் புக் நிறுவனம் உள்ளிட்ட பல சோஷியல் மீடியாக்கள் இந்தியாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், இந்தியாவில்  சமூக வலைத் தளங் களில் குறிப்பாக  ஃபேஸ்புக்கில் வரும் அரசியல் விளம்பரங்கள் குறித்த வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க ஃபேஸ்புக் நிறுவனம் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக, ஒரு அரசியல் விளம்பரத்தை யார் கொடுத்தது, அதற்காக அவர் எவ்வளவு செலவிட்டுள்ளார் என்பது உள்ளிட்ட விவரங்களை மற்ற ஃபேஸ்புக் பயனர்கள் தெரிந்துகொள்ள முடியும். இன்று (பிப்ரவரி 7) முதலே இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இதன்படி  அரசியல் விளம்பரத்தை கொடுக்கும் ஒரு நபர் அவரது பெயரையும் சேர்த்து வெளியிட வேண்டும். அனுமதி வழங்கப்பட்ட விளம்பரதாரர்கள் அவர்களது பெயரையோ, அவர்களது பக்கத்தின் பெயரையோ, அவர் சார்ந்த அரசியல் கட்சி, அமைப்பின் பெயரையோ குறிப்பிடலாம்.

மற்ற அமைப்புகள் அல்லது கட்சிகளின் பெயர்களை வழங்கினால் மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, ஊடக சான்றிதழ், இந்திய தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்புக் குழு சான்றிதழ் போன்றவற்றை ஃபேஸ்புக் கேட்கிறது. இந்த நடவடிக்கை குறித்து ஃபேஸ்புக் இந்தியாவின் பொதுக் கொள்கை இயக்குநரான ஷிவ்நாத் துக்ரல் பேசுகையில், “விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புகளின் பெயர்கள் உண்மையானவையா என்பதை உறுதி செய்யவே இது போன்ற விவரங்கள் கேட்கப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

அரசியல் விளம்பரங்களுக்கு அருகே உள்ள டிஸ்கிளைமரை கிளிக் செய்தால் விளம்பரத்தின் தொடக்க, இறுதி தேதிகள், எவ்வளவு பேர் விளம்பரத்தை பார்த்துள்ளனர், எந்தெந்த மாநிலங்களில் பார்த்துள்ளனர், பார்த்தவர்களின் வயது வரம்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை தெரிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..

error: Content is protected !!