முகக் கணினி வந்தாச்சு!

தகவல் தொழில்நுட்பத் துறையில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு சொல், “ஃபார்ம் ஃபேக்டர்” (Form-Factor). வடிவக் காரணி. தொழில்நுட்பம் ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவிற்கு மாறும்போது அதன் பயன்பாடு பன்மடங்கு அதிகரிக்கின்றது. தொடக்கத்தில் நாமெல்லாம் டெக்ஸ்டாப் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தினோம். ஒரு மேஜையின் மேல் ஜம்மென்று அமர்ந்திருக்கும். தேவையான போது நாம் அதன் முன் உட்கார்ந்து இயக்கினோம். லேப்டாப்கள் வந்த பின், கைக்குழந்தை போலப் போகும் இடமெல்லாம் தூக்கிச் சென்றோம். அதன் பின் ஸ்மார்ட்ஃபோன்கள் வந்தன. எனக்காக பாரம் சுமக்காதீர்கள் எனத் தொழில்நுட்பம் தன் எடையைக் குறைத்துக்கொண்டது. இது நமக்கு இலகுவானது. டெக்ஸ்டாப் ஒரு ஃபார்ம் ஃபேக்டர். அது போலவே லேப்டாப்பும், ஸ்மார்ட்ஃபோன்களும். வடிவங்கள் மாறும் போது அவற்றின் பண்பும் பயனும் மெருகேறுகின்றன.“ஸ்மார்ட்ஃபோனே ஈஸியாத் தான இருக்கு… அதோட நிப்பாட்டிக்கலாமே…?” என்றால் இல்லை. வடிவங்கள் மாறிக்கொண்டே இருப்பது தான் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் இயல்பு.கையில் வைத்துப் பயன்படுத்தும் வடிவிலிருந்து, முகத்திலேயே மாட்டிக்கொள்ளும் வடிவிற்கு முன்னேறி இருக்கின்றது தொழில்நுட்பம். இதனால் இன்னமும் நமக்கு நெருக்கமாகியிருக்கின்றது. டிஜிட்டல் கருவிகளின் இந்த அவதாரத்தை “முகக் கணினிகள்” என்கின்றனர். ஃபேஸ் கம்ப்யூட்டர்ஸ்.

இந்தக் கண்ணாடியிலேயே கேமரா வைத்திருக்கின்றனர். இதன் மூலம் நீங்கள் பார்ப்பதை அப்படி ரெக்கார்ட் செய்யலாம். கண்களின் அருகில் கேமரா இருப்பதால், இது எடுக்கும் படங்களும், வீடியோக்களும், பாய்ண்ட் ஆப் வ்யூ (POV: Point of View ) கோணத்தில் இருக்கும். இதனால் நேரில் அங்கு நின்று பார்ப்பதுபோன்றதொரு உணர்வு ஏற்படும். அதோடு நில்லாமல், நீங்கள் பார்ப்பதை அப்படியே உங்கள் நண்பருக்கும் வாட்ஸ்-ஆப் வீடியோ காலாகக் காண்பிக்க இயலும். நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்.. டும்…டும்… என்று பாடித் திரியலாம். நண்பருக்கு மட்டும் தானா? நானெல்லாம் பொதுநலவாதி என்போர் அப்படியே இன்ஸ்டாவிலும் காட்ட இயலும்.என்னென்ன செய்யப் போறாங்களோ…!
நீங்கள் ஒரு கட்டடத்தின் முன் நிற்கின்றீர்கள். அதைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்கள். இந்தக் கண்ணாடி அணிந்து, அந்தக் கட்டடத்தை ஒரு பார்வை பார்த்தாலே போதும். அதைப் பற்றி நீங்கள் அறிய முற்படும் அனைத்தையுமே மெட்டா க்ளாஸ் உங்கள் காதுக்குள் ஓதிவிடும். காதுகளுக்கு அருகிலேயே ஸ்பீக்கர் வைத்துள்ளனர். சூழலுக்கேற்பத் தெளிவாகக் கேட்கும் வண்ணம் இதன் ஒலி அளவை மாற்றிக்கொள்ள முடியும்.கட்டடம் தான் என்றில்லை. நம்மைச் சுற்றியிருக்கும் எது குறித்து வேண்டுமானாலும் கேட்கலாம். தகவல்கள் தரும். “இதத் தான் நான் கூகுள் லென்ஸ் ஆப்லயே செய்வேனே…” என்றால் இங்கு தான் ஃபார்ம் ஃபேக்டர் வேலை செய்கிறது.
நீங்கள் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். தட்டில் உள்ள உணவு குறித்து மேலும் அறிய விரும்புகிறீர்கள். இப்போது ஃபோனை எடுத்து, அன்லாக் செய்து, ஆப் ஓப்பன் செய்து, திரையில் தொட்டுக் க்ளிக் செய்து…. இதெல்லாம் சிரமம். “இதிலென்ன சிரமம்…?” என்னும் கேள்வி எழுந்தால் உங்களுக்கு வயது முப்பத்தைந்துக்கு மேல் ஆகிவிட்டது என்று அர்த்தம். 2K கிட்ஸ்களின் உலகில் இது பெருஞ்சிரமமான செயல். இதே மெட்டா கண்ணாடி என்றால் பார்த்தாலே போதும். நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லும். கண்ணாடி என்றால் ஸ்டைலாக இருக்க வேண்டாமா? அதிலும் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். மூக்குக் கண்ணாடிகள் தயாரிக்கும் பிரபல ப்ராண்டான “ரே பான்” உடன் கைகோர்த்திருக்கின்றது மெட்டா. விதவிதமான ஃப்ரேம் ஆப்ஷன்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
ஒரு முறை சார்ஜ் போட்டால் முப்பத்தாறு மணிநேரம் வேலை செய்யுமாம். இந்தக் கண்ணாடி மூலம் நீங்கள் ரெக்கார்ட் செய்யும் போது, ஒரு சிறிய எல்.ஈ.டி எரிகின்றது. இதன்மூலம் உங்கள் அருகிலிருப்போர்க்கு நீங்கு ரெக்கார்ட் செய்கிறீர்கள் என்று தெரிய வரும். “லைவ் ட்ரான்ஸ்லேஷன்” என்றொரு வசதியும் உள்ளது. நம் முன்னிருக்கும் நபர் பேசுவதை நமக்குப் புரியும் மொழிக்கு மாற்றும் வசதி இது. இணைய இணைப்பு இல்லாமலேயே மொழிமாற்ற முடியும் என்கிறார்கள். இப்போதைக்கு ஐரோப்பிய மொழிகளுக்கு மட்டுமே இந்த வசதி வந்துள்ளது. கூடிய விரைவில் நம்மூரிலும் இது கிடைக்கத் தொடங்கும். நாம் பேசுவது போலத் தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்துகட்டிப் பேசினால் என்ன செய்யும்? மெட்டா ஏஐயிடமே கேட்டுப்பாருங்கள்.