ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.ஆனார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்!.

ஈரோடு கிழக்குத் தொகுதி  எம்.எல்.ஏ.ஆனார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்!.

ரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடைசிச் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 58,939 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் 97,729 வாக்குகள் பெற்று வெற்றி பெரும் நிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 38,790 வாக்குகளை பெற்றுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்.27ம் தேதி நடந்தது. இத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளராக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

238 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்களில், 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர். இது 74.79 சதவீதமாகும். இதுதவிர வாக்குப்பதிவுக்கு முன்பே 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டுகள் பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 27ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 15 சுற்றுகளாக நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையில், தொடக்கம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை பெற்று வந்தார். நான்கு முனைப் போட்டியாக தொடங்கிய இத்தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், 15வது சுற்றின் முடிவில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகளும் பெற்றனர். இதன்மூலம் சுமார் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

டெயில் பீஸ்:

பெரியாரின் பேரன், ஈ.வெ.கி.சம்பத்தின் மகன் என்ற அடையாளங்களுடன் அரசியலுக்குள் நுழைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் 1984ல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிப்படையில் நடிகர் சிவாஜி கணேசனின் ரசிகரான இளங்கோவன், தனது அரசியல் குருவாகவும் சிவாஜி கணேசனையே ஏற்றிருந்தார். அந்த அடிப்படையில், 1984 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சிவாஜி கணேசனின் பரிந்துரையால் சத்தியமங்கலம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், திமுக வேட்பாளரைவிட இருமடங்கு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

எம்ஜிஆரின் மரணத்தைத் தொடந்து, அவரது மனைவி ஜானகி முதலமைச்சரானார். அவரது தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலில், காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்க மறுத்தது. குறிப்பாக, பிரதமரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவருமான ராஜீவ் காந்தி ஒருங்கிணைந்த அதிமுகவையே ஆதரிப்போம் என்று தெரிவித்தார். இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் முளைத்தன.

குறிப்பாக, ஜானகி அரசுக்கு ஆதரவாக காங்கிரஸ் வாக்களிக்க வேண்டுமென்று கோரினார் நடிகர் சிவாஜி. ஆனால், அதற்கு காங்கிரஸ் தலைமை சம்மதிக்காத நிலையில், சிவாஜி ஆதரவு எம்.எல்.ஏக்கள் பதவி விலகுவதாக அறிவித்தனர். அப்படி அறிவித்த சிவாஜி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுள் ஈவிகேஎஸ் இளங்கோவன் முக்கியமானவர்.

பிறகு காங்கிரஸிலிருந்து விலகி , தமிழக முன்னேற்ற முன்னணியைத் தொடங்கிய சிவாஜி அதிமுக ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்து 1989 சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தார். அப்போது, தமிழக முன்னேற்ற முன்னணி வேட்பாளராக பவானிசாகர் தொகுதியில் போட்டியிட்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன். அந்தத் தேர்தலில் இளங்கோவனுக்கு நான்காம் இடமே கிடைத்தது. அதன்பிறகு பலமுறை மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, வெற்றி தோல்விகளைப் பெற்றிருந்தபோதும், எந்தவொரு சட்டமன்றத் தேர்தலிலும் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டதில்லை.

சட்டமன்ற உறுப்பினராக இருந்த தனது மகன் திருமகன் ஈவெராவின் அகால மரணத்தால் அந்த வாய்ப்பு அவருக்கு வந்திருப்பது வருத்தத்துக்குரியது. என்றாலும், பொதுவாழ்க்கையில் எல்லாவற்றையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்ற அடிப்படையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களம் கண்டு வாகை சூடி மீண்டும் சட்டசபை செல்கிறார்.

Related Posts

error: Content is protected !!