வான்வழி ஏகபோகத்திற்கு எண்ட் கார்டு? களமிறங்கும் 3 புதிய விமான நிறுவனங்கள்!

வான்வழி ஏகபோகத்திற்கு எண்ட் கார்டு? களமிறங்கும் 3 புதிய விமான நிறுவனங்கள்!

ந்திய வான்வெளியில் ‘இண்டிகோ’ (IndiGo) நிறுவனத்தின் கொடிதான் இப்போது உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறது. ஆனால், சமீபகாலமாகத் தொழில்நுட்பக் கோளாறுகளால் விமானங்கள் தரையிறக்கப்படுவதும், கடைசி நேர ரத்துகளும் பயணிகளைப் பாடாய்படுத்தி வருகின்றன. இந்த ஏகபோக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், போட்டியை உருவாக்கி விலையைக் குறைக்கவும் மத்திய அரசு தற்போது மூன்று புதிய விமான நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. 2026-ல் இந்த நிறுவனங்கள் முழுவீச்சில் களமிறங்கும்போது, இந்திய விமானப் போக்குவரத்துத் துறை ஒரு புதிய பரிமாணத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சத்தமில்லாமல் சரித்திரம் படைத்த நீல நிற விமானங்கள்!

2007-ல் வெறும் 7 விமானங்களுடன், 9 சதவீத சந்தைப் பங்களிப்புடன் சத்தமில்லாமல் நுழைந்தது இண்டிகோ. ஆனால் இன்று, இந்திய வான்வெளியின் 60 சதவீதத்தை ஆக்கிரமித்து ‘ஒற்றை ராஜாங்கம்’ நடத்தி வருகிறது. இந்த வளர்ச்சி வெறும் அதிர்ஷ்டத்தால் வந்ததல்ல; மற்ற நிறுவனங்கள் சறுக்கிய இடத்தில் இண்டிகோ போட்ட கச்சிதமான ‘பிசினஸ் ஸ்கெட்ச்’. ஆனால், இப்போது அந்த வேகமே வினையாகி, இண்டிகோவைச் சுற்றியும், இந்திய விமானத் துறையைச் சுற்றியும் ‘நெருக்கடி’ மேகங்கள் சூழ்ந்துள்ளன.

இண்டிகோவின் ‘மாஸ்டர் பிளான்’: அசுர வளர்ச்சி எப்படி?

இண்டிகோ எப்போதுமே “காஸ்ட் கட்டிங்” விஷயத்தில் கில்லி.

  • சிங்கிள் டைப் பிளீட்: ஒரே மாதிரியான விமானங்களைப் பயன்படுத்தியதால், ஊழியர்களுக்கான பயிற்சி மற்றும் பராமரிப்புச் செலவு மிச்சமானது.

  • அதிவேக டேர்ன் அரவுண்ட்: ஒரு விமானம் தரை இறங்கிய சில நிமிடங்களிலேயே அடுத்த பயணத்திற்குத் தயார் செய்வதில் இண்டிகோ உலகத்தரம் காட்டியது.

  • ஜேட்ஸ் அண்ட் ஸ்பைஸ் சறுக்கல்: ஜெட் ஏர்வேஸ் மற்றும் கிங்ஃபிஷர் போன்ற ஜாம்பவான்கள் கொள்கை முடிவுகளால் வீழ்ந்தபோது, அந்த வெற்றிடத்தை இண்டிகோ மின்னல் வேகத்தில் நிரப்பியது.

நெருக்கடியில் வான்வெளி: தயார் நிலையில் இல்லாத ‘ஈகோ’?

விமானிகளின் பணி நேரம் தொடர்பான புதிய விதிமுறைகளை (FDTL) அமல்படுத்த போதுமான கால அவகாசம் இருந்தும், இண்டிகோ உள்ளிட்ட நிறுவனங்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்யவில்லை.

“விமர்சனம் வரும்போது மட்டும் விளக்கம் அளிக்கும் நிறுவனங்கள், ஒழுங்குமுறை மாற்றங்களுக்குத் தயாராவதில் ஏன் இவ்வளவு மெத்தனமாக இருக்கின்றன?” – இதுதான் இன்று ஏவியேஷன் துறையின் மில்லியன் டாலர் கேள்வி.

இப்போது சிக்கல் இண்டிகோவின் வருவாய்க்கே வரப்போகிறது. போட்டி ஆணையம் (CCI) விசாரணையில் இண்டிகோ ஆதிக்கத்தைத் துஷ்பிரயோகம் செய்தது நிரூபிக்கப்பட்டால், அதன் மொத்த வருவாயில் 10% வரை அபராதம் விதிக்கப்படலாம்.

களமிறங்கும் புதிய ‘ஏர்’ ஜாம்பவான்கள்!

புதிய நிறுவனங்கள் வெறும் பெயரளவிற்கு வராமல், குறிப்பிட்ட சில மண்டலங்களைக் குறிவைத்து (Niche Markets) களம் காண்கின்றன:

  1. ஷாங்க் ஏர் (Shankh Air): உத்தரப் பிரதேசத்தை மையமாகக் கொண்டு செயல்படவுள்ள முதல் நிறுவனம் இது. மாநிலத்தின் முக்கிய நகரங்களை இணைப்பதோடு, வடமாநிலப் போக்குவரத்தில் ஒரு புதிய வேகத்தை இது கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  2. அல்ஹிந்த் ஏர் (alHind Air): கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம், தென்னிந்தியப் பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதம். குறிப்பாக, பெரிய விமானங்கள் செல்ல முடியாத சிறிய நகரங்களுக்கு (Tier-2 & Tier-3 cities) ‘ATR டர்போப்’ ரக விமானங்களைக் கொண்டு தடையற்ற சேவையை வழங்கத் திட்டமிட்டுள்ளது.

  3. ஃப்ளை எக்ஸ்பிரஸ் (FlyExpress): ஹைதராபாத்தைத் தளமாகக் கொண்ட நிறுவனம். இது ஏற்கனவே சரக்குப் போக்குவரத்தில் (Cargo) அனுபவம் வாய்ந்தது என்பதால், பயணியர் சேவையிலும் இவர்களின் வருகை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெருக்கடியும் பின்னணியும்: ஏன் இந்த அவசரம்?

இந்தியாவில் தற்போது இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா ஆகிய இரண்டு பெரிய குழுமங்கள் மட்டுமே சுமார் 90% சந்தையை வைத்துள்ளன. இந்தப் போட்டி இல்லாத சூழல் (Duopoly) பயணிகளுக்குப் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது:

  • கட்டண உயர்வு: பண்டிகைக் காலங்களில் கட்டணம் தாறுமாறாக உயர்வதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

  • சேவை குறைபாடு: மாற்று வழி இல்லாததால், நிறுவனங்கள் வழங்கும் சேவையையே பயணிகள் சகித்துக்கொள்ள வேண்டியுள்ளது.

இதற்குத் தீர்வாகவே, மாநில ரீதியான அல்லது மண்டல ரீதியான (Regional) விமானச் சேவைகளை ஊக்குவிக்க அரசு இந்த அனுமதிகளை வழங்கியுள்ளது.

சவால்கள் மற்றும் நடைமுறைச் சாத்தியங்கள்

2026-ல் இந்த நிறுவனங்கள் தரை இறங்கினாலும், இவர்களின் பாதை மலர் படுக்கையல்ல:

  • விமானங்கள் கிடைப்பதில் சிக்கல்: சர்வதேச அளவில் விமான இன்ஜின்கள் மற்றும் பாகங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. இண்டிகோவே இதனால் தவித்துக் கொண்டிருக்கும்போது, புதிய நிறுவனங்கள் எப்படி விமானங்களைக் குத்தகைக்கு (Lease) எடுப்பார்கள் என்பது பெரிய கேள்விக்குறி.

  • பார்க்கிங் மற்றும் ஸ்லாட் (Slots): டெல்லி, மும்பை போன்ற பெரிய விமான நிலையங்களில் புதிய விமானங்களை நிறுத்த ‘ஸ்லாட்’ கிடைப்பது மிகவும் கடினம்.

ஆந்தை ரிப்போர்ட்டர் பார்வை:

புதிய நிறுவனங்களின் வருகை என்பது வெறும் வணிகப் போட்டி மட்டுமல்ல, இது சாமானிய பயணிகளுக்குக் கிடைக்கும் சுதந்திரம். 2026-ல் இந்த மூன்று நிறுவனங்களும் முறையாகச் செயல்படத் தொடங்கினால், ‘டிக்கெட் கட்டணம்’ குறைய வாய்ப்புள்ளது. அதே சமயம், ஜெட் ஏர்வேஸ் மற்றும் கோ ஃபர்ஸ்ட் போன்ற பழைய நிறுவனங்கள் சந்தித்த வீழ்ச்சியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, நிதி மேலாண்மையில் இவை கவனமாக இருக்க வேண்டும்.

தனுஜா

Related Posts

error: Content is protected !!