ட்விட்டரின் லோகோ & நேமை மாற்றினார் எலான் மஸ்க்!
உலக அளவில் பிரபல சோசியல் மீடியா பிளாட்பார்மான ட்விட்டரை எலான்மஸ்க் வாங்கியதில் இருந்து பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அதன்படி, ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தது, கட்டாயம் 12 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும், ட்விட்டர் இலச்சினையை (Logo) குருவியிலிருந்து நாய் குட்டியாக மாற்றியது, மீண்டும் நாயை அகற்றி பழைய இலச்சினையான குருவியை மாற்றியது, ட்விட்டர் அலுவலக பொருட்கள் விற்பனை, தடை செய்யப்பட்டவர்களை மீண்டும் ட்விட்டர் தளத்தில் இயங்க அனுமதித்தது, அங்கீகரிக்கப்பட்ட பயனர்களிடத்தில் சந்தா கட்டணம் என அது நீள்கிறது. ட்விட்டருக்கு போட்டியாளர்கள் ஏராளமாக உருவானாலும் அதை கண்டும் காணாமல் மஸ்க் இதனை முன்னெடுத்துள்ளார். இந்நிலையில், ட்விட்டர் தளத்தின் ட்ரேட்மார்க் அடையாளமாக இருந்த நீலக்குருவி லோகோவை தற்போது ‘எக்ஸ்’ (X) என மாற்றியுள்ளார் மஸ்க்.
கடந்த ஏப்ரல் மாதம் டோஜ்காயின் கிரிப்டோ கரன்சியின் நாய் படத்தை ட்விட்டர் தளத்தின் லோகோவாக மஸ்க் மாற்றி இருந்தார். பின்னர் மீண்டும் நீலக் குருவியாக அதனை மாற்றினார். இந்தச் சூழலில் ட்விட்டரின் லோகோவை நிரந்தரமாக மாற்ற மஸ்க் முடிவு செய்தார். அது குறித்து ட்வீட்டும் செய்திருந்தார். நீலக் குருவிக்கு விடை கொடுப்போம் எனவும் அதில் சொல்லி இருந்தார். இது விரைவில் நடக்கும் என தெரிவித்திருந்த சூழலில் தற்போது லோகோவை ‘X’ என மாற்றியுள்ளார். ‘X’ மீது கொண்ட அன்பின் காரணமாக மஸ்க் இந்த மாற்றத்தை மேற்கொண்டுள்ளார் என தெரிகிறது.
வரும் நாட்களில் ட்விட்டரின் (twitter.com) டொமைனை x.com என மாற்ற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.
ட்விட்டரின் லோகோவை X என மாற்றியதன் பின்னணியில் பலமான வர்த்தக ஐடியாவை மஸ்க் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதில், தனது வியாபார மூளையை மஸ்க் தெளிவாக பயன்படுத்தி திட்டமிட்டுள்ளாராம். இதன்மூலம் தனது X கார்ப்பரேஷன் சேவைகளை மஸ்க் இணைக்கவும் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக ட்விட்டர், பேபால் (நிதி சேவை) மற்றும் இன்னும் பிற விஷயங்களை ஒரே செயலியில் கொண்டு வருவதுதான் அவரது திட்டம் என சொல்லப்படுகிறது