அரிசி சாதம் அதிக அளவில் சாப்பிடுவதால் அதிகரிக்கும் சர்க்கரை நோய்!- ஷாக் ரிப்போர்ட்!
மனிதர்களைப் பாதித்து மெல்ல மெல்ல முடமாக்கும் வியாதிகளில் நீரிழிவு நோய் பிரதான இடத்தை வகிக்கிறது. உடல் பருமன், சரியான உணவுப் பழக்கவழக்கத்தைப் பேணாதது, உடற் பயிற்சியின்மை, பரம்பரையாகத் தொடர்வது, வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றம், அதிக மன அழுத்தமான வாழ்க்கை போன்றவற்றால் நீரிழிவு நோய் மனிதர்களை தாக்குகிறது. முன்னர் வயோதிகர்களுக்கும், பணம் படைத்தவர்களுக்கும் வந்த நீரிழிவு நோய் தற்போது மத்தியதர வர்க்க மனிதர்களைத் தாக்குகின்றது. அதிலும் 14 ஆண்டுகளுக்கு முன்பு 4.9 சதவீதமாக மட்டுமே இருந்த நீரிழிவு நோய் இப்போது 13.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. அரிசி சாதத்தை அதிக அளவில் சாப்பிடுவதே நீரிழிவு நோய் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நீரிழிவு என்றும் சர்க்கரை நோய் எனவும் அழைக்கப்படும் நீரிழிவு நோய் ஒரு காலத்தில் வசதியானவர்களுக்கு மட்டுமே வரும் நோய் என்றே அறியப்பட்டிருந்தது. நகர்ப்புறங்களில் வசிக்கும் உடல் உழைப்பு இல்லாதவர்களை மட்டுமே அதிகம் பாதித்து வந்த இந்த நோய் இப்போது கிராமப்புற மக்களையும் பதம் பார்த்து வருகிறது. 50 வயதை தாண்டியவர்களை மட்டுமே நீரிழிவு நோய் தாக்கும் என்கிற நிலை மாறி இளம் வயதினரையும் இந்த நோய் அதிக பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது.நாடு முழுவதும் நீரிழிவு நோயால் கணக்கில் அடங்காதவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக கிராமப்புறங்களிலும் நோயின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த 14 ஆண்டுகளாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் நீரிழிவு நோயின் பாதிப்பு 4 சதவீதத்தில் இருந்து 13.5 சதவீதமாக உயர்ந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.செங்கல்பட்டு மாவட்டம் சூணாம்பேடு கிராமத்தை சுற்றியுள்ள சுமார் 25 கிராமங்களில் வீடு வீடாக சென்று நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் ஸ்காட்லாந்தை சேர்ந்த டண்டீ பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆய்வில் அரிசி சாதத்தை அதிக அளவில் சாப்பிடுவதே நீரிழிவு நோய் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நீரிழிவு சிறப்பு மருத்துவர்கள், “கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.ஆரம்ப கட்ட நீரிழிவு நோயின் பாதிப்பு 18.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. 14 ஆண்டுகளுக்கு முன்பு 4.9 சதவீதமாக மட்டுமே இருந்த நீரிழிவு நோய் இப்போது 13.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிடாததும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாததும் நீரிழிவு நோயின் தாக்கத்துக்கு முக்கிய காரணங்களாகும். நீரிழிவு நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால் குணப்படுத்தி விடலாம்.டாக்டர்களின் வழிகாட்டுதலின்படி உரிய சிகிச்சையை தொடர்ந்து மேற்கொண்டால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 100 ஆண்டுகள் வரையில் வாழலாம்.
இதற்கு டாக்டர்களின் ஆலோசனைபடியே உணவு பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி பரிசோதனை செய்துகொண்டு சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கிறதா? என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமானதாகும்.”என்று தெரிவித்தனர்