கொல்கத்தா அணியின் ஆலோசகரானார் டுவைன் பிராவோ!

கொல்கத்தா அணியின் ஆலோசகரானார் டுவைன் பிராவோ!

வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் அணியின் ஜம்பவனான டுவைன் பிராவோ ஐபிஎல் தொடரில் முதலில் மும்பை அணிக்காக விளையாடி வந்தார். அதன்பின், 2011-ம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்ற டுவைன் பிராவோ தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். பவுலிங்கில் ஒரு விக்கெட் எடுத்தால் நடமாடுவது, மேலும் விக்கெட் எடுத்தால் புது புது நடனம் மூலம் கொண்டாடுவது என அவர் செய்யும் சுவாரஸ்யமான விஷயம் எதிராணியினரயுமே கவரும் வகையில் அமையும். சென்னை அணியில் 2011-ம் ஆண்டு சேர்ந்த பிராவோ, 3 ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளார். அதன்பிறகு, 2022-ம் ஆண்டு பிராவோ சென்னை அணியில் இருந்து ஓய்வு பெற்று, சென்னை அணிக்கே பந்து வீச்சு பயிற்சியாளராக சேர்ந்தார்.

அவரது பயிற்சியிலும் சென்னை அணி 2023-ஆண்டு ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் தொடரில் ஓய்வு பெற்ற பிராவோ வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வந்த கரேபியன் தொடரில் மட்டும் விளையாடி வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் அந்த தொடர் உட்பட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியிலிருந்தும் அவர் ஓய்வை அறிவித்தார்.

அதே நேரம் இன்று ஐபிஎல் நட்சத்திர அணியாக திகழும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆலோசகராக நியமனம் ஆகியுள்ளார். இந்த செய்தி சென்னை அணியின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்வை கொடுத்து உள்ளது. அதற்கு காரணம் அவருக்கும் சிஎஸ்கே ரசிகர்களுக்கும் இடையே உள்ள உறவு தான். ஆனால், கிரிக்கெட் தொடரில் இது போன்ற மாற்றங்கள் வரவேற்க வேண்டுமென ஒரு தரப்பு ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும், பிராவோ கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்களை எப்படி உருவாக்குவார் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், இந்த மாற்றம் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

error: Content is protected !!