முருகனை வைத்து அரசியல் செய்யாதீர்கள்!

முருகனை வைத்து அரசியல் செய்யாதீர்கள்!

குறிஞ்சிக் கடவுளான முருகனைப் பற்றி, புதுப்புது மகாபண்டிதர்களெல்லாம், அவன் உள்ளூர்க் கடவுளா, உலகக் கடவுளா என்று ஆய்வு செய்யப புறப்பட்டு விட்டார்கள். பதிவு செய்து கொண்ட ஆய்வாளர்கள் என்றால், அவர்களுக்கு நிச்சயம் உதவித்தொகை (stipend) கிடைக்குமென்றும் நம்பலாம். சரி, இதுவரை முருகன் யாருக்கான கடவுள்? அவன் குறப்பெண் வள்ளியை மணந்த குறிஞ்சிக் கடவுள்தான். மலைக் கடவுள்தான். தமிழர் கடவுள்தான். அதனால்தான் இன்றுவரை, தமிழர்கள் மட்டுமே முருகனுக்கு விரதமிருந்து, அலகு குத்திக் கொண்டு காவடி எடுக்கிறார்கள். இப்படி, முருகக் கடவுளுக்காகத் தங்களை வருத்திக் கொள்பவர்கள் தமிழர்கள் மட்டுமே. தமிழரன்றி வேறு யாரேனும் இப்படிச் செய்கிறார்களா? செய்தால் சொல்லுங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

பிற்பாடுதான், முருகனைக் கொண்டு தங்கள் எதிரியான சூரபத்மனை வதம் செய்ய வைத்து, அதற்குப் பரிசாக, இந்திரனுடைய மகள் தெய்வானையைக் கட்டிவைத்து, முருகனைத் தங்கள் வீட்டு மாப்பிள்ளையாக்கிக் கொண்டார்கள்; தங்கள் குலவழக்கத்திற்கு ஏற்றபடி ‘சுப்ரமண்யன்’ என்று புதுப் பெயரும் சூட்டினார்கள். சாமர்த்தியமாக, ஒரு மலைவாசியான முருகனைத் தங்களவனாக்கிக் கொண்டார்கள். தமிழர்களைப் பொறுத்தவரை ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதுதான்.

அதனால் முருகனை யாரும் வந்து வணங்கத் தடையில்லை. வாருங்கள், வரவேற்கிறோம். ஆனால், அதை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என்பதுதான் எங்கள் வேண்டுகோள். மணிப்பூர் சென்று பிரச்னைகளைத் தீர்க்க வேண்டிய நேரத்தில், திருப்பரங்குன்ற ஆராய்ச்சிகள் செய்து, பிரச்னைகளை உருவாக்கிவிட வேண்டாம் என்கிறோம். அனைவரும் நீராடித் தூய்மையும் ஆரோக்கியமும் பெற்று மகிழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தூய்மையான பொதுக்குளத்தில், ஒரு முதலையைக் கொண்டுவந்து விட்டுவிடாதீர்கள் என்பதுதான் எங்கள் பணிவான வேண்டுகோள்.

வேண்டுகோளை வைத்துவிட்டோமே என்னும் நம்பிக்கையில் நாம் தூங்கிவிடக் கூடாது. நாம் விழித்திருக்கும்போதே நம் கண்களைத் திருடுவோர் திரிந்து கொண்டிருக்கும் காலம் இது. ஆகவே, அனைவரும் இருபத்து நான்கு மணி நேரமும் விழிப்போடு இருக்க வேண்டிய காலமும் இதுதான்.

செ.இளங்கோவன்

error: Content is protected !!