சோற்றுப் பானையில் வாக்குத் தேடும் தேமுதிக: வரலாற்றில் எஞ்சுமா கேப்டன் புகழ்?
தமிழக அரசியல் களத்தில் ‘வள்ளல்’ என்ற தகுதி, அதிகார நாற்காலியை எட்டுவதற்கான ஒரு படிக்கட்டாகவே பலரால் பார்க்கப்படுகிறது. ஆனால், வரலாற்றின் பக்கங்களில் நிலைத்திருப்பவர்கள், கைமாறு கருதாது கொடுத்தவர்களே. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் முதல் எம்.ஜி.ஆர் வரை, அவர்கள் செய்த தர்மம் என்பது அவர்களின் ஆன்மாவிலிருந்து பிறந்தது; அரசியல் லாபத்திற்காகத் திட்டமிட்டுத் தைக்கப்பட்டதல்ல. ஆனால், இன்று விஜயகாந்த் எனும் ஆளுமை கட்டியெழுப்பிய ‘வள்ளல் பிம்பம்’ கேள்விக் குறியாக்கப்படுவதற்குக் காரணம், அவரது குடும்பத்தினர் நடத்தும் ‘அரசியல் அறுவடை’ ஆகும். ஆம்.. தமிழக அரசியல் களம் உணர்ச்சிவசப்படுபவர்களால் நிறைந்தது என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், மக்கள் முட்டாள்கள் அல்ல. ஆடு, மாடு, கோழிகளிடம் கூட வாக்குக் கேட்கும் நிலைக்கு அரசியல்வாதிகள் இறங்கி வந்தாலும், ‘கொடை’ என்பதையே ‘முதலீடு’ என்று மாற்ற முயலும் தந்திரத்தை மக்கள் எளிதில் கண்டுகொள்வார்கள். விஜயகாந்த் ஒரு ஆளுமையாகத் தோன்றியிருக்கலாம், ஆனால் அவரது குடும்பத்தின் தற்போதைய போக்கு, அவரை ஒரு வரலாற்றுத் தலைவனாக அல்லாமல், ஒரு தோல்வியுற்ற முதலீட்டாளராகவே மாற்றிக் கொண்டிருக்கிறது.

உதவியும்… உள்நோக்கமும்!
விஜயகாந்த் ஒரு காலத்தில் செய்த உதவிகள், இன்று அவரது குடும்பத்தின் அரசியல் பிழைப்புக்காக மீண்டும் மீண்டும் நினைவூட்டப்படுகின்றன. இதுவே ஒரு அடிப்படை ஐயத்தை மக்களிடம் விதைக்கிறது: அன்று அவர் அள்ளிக் கொடுத்தது மக்களின் பசி தீர்க்கவா? அல்லது பிற்காலத்தில் தனது வாரிசுகள் அந்தப் பசியைச் சொல்லி வாக்கு சேகரிக்கவா?
-
எம்.ஜி.ஆர் எனும் முன்மாதிரி: எம்.ஜி.ஆர் அள்ளிக் கொடுத்தார், ஆனால் தனது சொந்த பந்தங்களை அதிகார மையத்திற்கு அருகிலும் அண்டவிடவில்லை. சொத்துக்களைக் கூட மக்களுக்கே உயில் எழுதி வைத்தார். அதுதான் உண்மையான தியாகம்.
-
வள்ளல் மரபு: பாண்டித்துரை தேவரும், அழகப்ப செட்டியாரும் கல்வியையும் தமிழையும் வளர்க்கச் சொத்துக்களைத் தந்தனர். அவர்கள் எப்போதுமே அதற்கான ‘விலையை’ மக்களிடம் கேட்கவில்லை.
தேமுதிக எனும் உடைந்த குமிழி
ஆனால் விஜயகாந்தின் பெயரைச் சொல்லி இன்று பிரேமலதா விஜயகாந்த் முன்னெடுக்கும் அரசியல், கேப்டனின் எஞ்சியிருக்கும் நற்பெயரையும் அரித்து வருகிறது. “வாக்கு கேட்பதற்காகவா சோறு போட்டார்?” என்ற விமர்சனம் எழும்போது, விஜயகாந்த் எனும் ஆளுமை வரலாற்றின் குப்பை மேட்டில் வீசப்படும் அபாயம் உருவாகிறது. குடும்ப நலனுக்காக ஒரு தலைவனின் தியாகத்தைப் பணயம் வைக்கும் போக்கு, தேமுதிக என்ற அரசியல் குமிழியை முற்றிலுமாக உடைத்துவிட்டது.

தமிழகத்தின் தீர்ப்பு
உள்நோக்கத்தோடு செய்யப்படும் உதவிகள் ஒருபோதும் நீடித்த வெற்றியைத் தராது என்பதற்கு விஜயகாந்த் கட்சியான தேமுதிக வீழ்ச்சியே சாட்சி. தமிழக மக்கள் உணர்ச்சிவசப்படுபவர்கள் தான், ஆனால் அவர்கள் ஏமாளிகள் அல்ல முன்னரே சொன்ன வள்ளல் பாண்டித்துரை தேவரும், அழகப்ப செட்டியாரும் செய்த உதவிகள் சமூக முன்னேற்றத்திற்கானவை. அதில் ஒருபோதும் “வாக்கு” என்ற உள்நோக்கம் கலந்திருக்கவில்லை. ஆனால், விஜயகாந்த் கட்டியமைத்த ‘வள்ளல்’ பிம்பம் இன்று அவரது குடும்பத்தினரின் அதிகாரப் பசிக்கான கருவியாக மாற்றப்பட்டிருப்பது பரிதாபத்திற்குரியது. ஆட்டுப்பட்டியிலும், மாட்டுத் தொழுவத்திலும் உருண்டு புரண்டு வாக்குச் சேகரிக்கும் அரசியல் தந்திரங்களை விட, ஒரு தலைவனின் நேர்மையையே மக்கள் உற்று நோக்குகிறார்கள்.
முடிவாக தனது கொடையைச் சுயநலத்திற்காகப் பயன்படுத்தாத என்.எஸ்.கிருஷ்ணனும், எம்.ஜி.ஆரும் என்றும் நிலைத்திருப்பார்கள். ஆனால், குடும்ப வாரிசுகளின் அதிகாரப் பசிக்கு ‘வள்ளல்’ பிம்பத்தை இரையாக்கும் விஜயகாந்த், வரலாற்றில் ஒரு “தோற்றுப்போன முதலீட்டாளராக” மட்டுமே எஞ்சியிருப்பார்.
நிலவளம் ரெங்கராஜன்


