டிஸ்னி யின் ‘வார்னிங்’..திணறிய பைட் டான்ஸ்:ஹாலிவுட் மிரட்டலுக்குப் பணிந்த ஏஐ ‘சீடன்ஸ்’!
தொழில்நுட்ப உலகில் இன்று ‘சீடன்ஸ் 2.0’ (Seedance 2.0) தான் மிகப்பெரிய ஹாட் டாபிக். வெறும் இரண்டு வரிகளில் ஹாலிவுட் தரத்திற்கு வீடியோக்களை உருவாக்கும் இந்த ஏஐ கருவி, இப்போது சட்டச் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. டிஸ்னி மற்றும் பாரமவுண்ட் போன்ற ஜாம்பவான்கள் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, தனது மென்பொருளில் அதிரடி மாற்றங்களைச் செய்ய பைட் டான்ஸ் நிறுவனம் இறங்கியுள்ளது.
என்ன நடந்தது? – அந்த ‘வர்ச்சுவல் கொள்ளை’
கடந்த வாரம் வெளியான சீடன்ஸ் 2.0 மூலம் பயனர்கள் ஸ்பைடர் மேன், டார்த் வேடர் போன்ற உலகப்புகழ் பெற்ற கேரக்டர்களை வைத்து தங்களுக்குப் பிடித்தபடி வீடியோக்களை உருவாக்கினர். குறிப்பாக டாம் குரூஸ் மற்றும் பிராட் பிட் மோதுவது போன்ற வீடியோக்கள் வைரலானதும் ஹாலிவுட் கொந்தளித்தது. “எங்கள் பல ஆண்டுகால உழைப்பை ஒரு சீன நிறுவனம் ‘திருட்டு லைப்ரரி’ (Pirated Library) மூலம் பொதுச்சொத்து போலப் பயன்படுத்துகிறது” என்று டிஸ்னி குற்றம் சாட்டியது. இது ஒரு ‘வர்ச்சுவல் கொள்ளை’ (Virtual Smash-and-Grab) என்று வர்ணித்த டிஸ்னி, உடனடியாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது.

பைட் டான்ஸின் அதிரடி பின்வாங்கல்
ஆரம்பத்தில் அமைதி காத்த பைட் டான்ஸ், இப்போது ஹாலிவுட்டின் சட்ட வலிமையைப் பார்த்து பணிந்துவிட்டது. பிப்ரவரி 16, 2026 அன்று அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாங்கள் அறிவுசார் சொத்துரிமையை மதிக்கிறோம். சீடன்ஸ் 2.0 தொடர்பான கவலைகளைக் கேட்டுக்கொண்டோம். இனி வரும் காலங்களில் காப்புரிமை பெற்ற கதாபாத்திரங்களையோ அல்லது திரை நட்சத்திரங்களின் உருவத்தையோ அனுமதியின்றிப் பயன்படுத்துவதைத் தடுக்க வலுவான பாதுகாப்பு அரண்களை (Safeguards) உருவாக்கி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
மாற்றங்கள் என்னென்ன?
-
கேரக்டர் பிளாக்கிங் (Character Blocking): இனி ‘ஸ்பைடர் மேன்’ அல்லது ‘சூப்பர் மேன்’ போன்ற பெயர்களைப் பயன்படுத்தி வீடியோக்களை உருவாக்க முடியாதபடி தற்காலிகத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
-
அடையாளச் சரிபார்ப்பு: சீனாவில் டிஜிட்டல் அவதார்களை உருவாக்குபவர்களுக்குக் கடுமையான அடையாளச் சரிபார்ப்பு முறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
-
உருவப்படக் கட்டுப்பாடு: நிஜ மனிதர்களின் புகைப்படங்களை அப்லோட் செய்து வீடியோவாக்கும் வசதி சில பகுதிகளில் முடக்கப்பட்டுள்ளது.
நிபுணர்களின் பார்வை
டிஸ்னி நிறுவனம் ஏற்கனவே ‘OpenAI’ உடன் அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் செய்து, தனது கேரக்டர்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. அப்படி இருக்கையில், பைட் டான்ஸ் இலவசமாக இதைப் பயன்படுத்துவதை அவர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இது வெறும் காப்புரிமைப் போர் மட்டுமல்ல, எதிர்கால ஏஐ சந்தையில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்பதற்கான அதிகாரப் போட்டியாகவும் பார்க்கப்படுகிறது.


