June 2, 2023

பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவு!

யக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வணங்கான்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்து விட்டதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

தொடக்கத்தில் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகி அவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. ஆனால், அண்மையில் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகினார். இதையடுத்து ‘வணங்கான்’ படத்தில் நடிக்க அருண் விஜய் ஒப்பந்தமானதைத் தொடர்ந்து படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் கன்னியாகுமரியில் தொடங்கியது. இதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. தற்போது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் ஏப்ரல் 17-ஆம் தேதி தொடங்குகிறது.

அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ​​ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, சில்வா இந்தப் படத்திற்கு ஆக்‌ஷன் காட்சிகளைக் கையாண்டுள்ளார்.