இறையன்பு அவர்களே..இப்போது கூட இல்லையெனில் பின் எப்போது..?

இறையன்பு அவர்களே..இப்போது கூட இல்லையெனில் பின் எப்போது..?

வ்வொரு மாநில அரசிலும் ஆளும் கட்சி இருந்தால் அத்துடன்… அடுத்து ஆளப்போகக் கூடும் என எதிர்பார்க்கப்படும் கட்சி என்று மற்றொன்றும் உண்டு. அதேபோல ஆளும் கட்சிக்கு வேண்டிய சிவில் சர்வீஸ் அதிகாரிகள் என்று ஒரு கூட்டத்தார் உள்ளனர். அவர்களுடன் ஆளும் கட்சியின் பரிவுப் பார்வை எல்லைக்கு அப்பால் இருக்கும் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் என மற்றுமொரு தரப்பினரும் இருக்கத்தான் செய்கின்றனர். இவ்விரு வேறு நிலைப்பாடுகளுக்குக் காரணம் என்ன? இந்த மாறுபாடுகளை மாற்றி அனைவருமே ஓரணியினராகி, அரசு இயந்திரத்தினை அச்சு பிசகாமல் செலுத்திட என்ன செய்வது? இதைப் பற்றிய என் எண்ணத்தை எழுதுகிறேன்.

கடந்த 45 ஆண்டு காலமாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற சிவில் சர்வீஸ் அலுவலர்கள் எனும் குடிமைப் பணிகள் தகுதி கொண்ட அதிகாரிகளுடன் பழகி வந்துள்ளேன். தலைமை ஆளுமைக்கு வேண்டியவராக ஒரு ஐ.ஏ.எஸ். அல்லது ஐ.பி.எஸ். அதிகாரி நெருக்கம் பெற்றுவிட்டால் போதும், அவரின் பின்னால் மற்ற சக அலுவலர்கள் அணிதிரளத் தொடங்கி விடுவர். இந்த நட்பு வட்டத்தில் ஒருவருக்கொருவர் அரசு நிர்வாக ரீதியாக ஒத்துழைத்துக் கொள்வர். தலைமைச் செயலகத்தில் “லஞ்ச் டேபிள் டீம்” என்று குழுக்கள் உண்டு. இக்குழுவினர் மதிய வேளையின் போது ஓரணியினராக அமர்ந்து உணவு உட்கொள்வர். அப்போது “ஈட்டிங் கம் மீட்டிங்” என்ற நிலைதான் நிலவும்.

பல முக்கிய முடிவுகள் இந்த கூட்டங்களின் போது எடுக்கப்படும். அரசு முறை அந்தரங்கத் தகவல்கள் கூட அந்த சந்திப்புகளின் போது அலசப்படும். சில திட்டங்களின் தொடக்கப் புள்ளியும் அதுவே. இந்த குழுவில் இருந்து யார் ஆளும் தரப்பின் உச்சத்துக்கு நெருக்கமானாலும் அவர் தன் குழுவின் மற்ற சிவில் அதிகாரிகளுக்கும் வசந்த வாசலைத் திறந்துவிடுவார். இதனால் இக்குழுவினர் பசையான துறைகளைப் பெற்று வளமான வசதிகளை வளைத்து எடுத்துக் கொள்வர். இவ்வாறாக தலைமைச் செயலகத்தில் பல குழுக்கள் உண்டு. ஆளும் கட்சியின் அதிகார வர்க்கத்து நிராகரிப்புகளால் அபலைகளாக்கப்படும் சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்குத் தண்ணி இல்லா காடு தான். வறுமை வாலாட்டும் வாட்டமிக்கத் துறைகள் தான் கிடைக்கும்.

ஒரு உதாரணம் கூறலாம். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் திமுக ஆட்சிக் காலத்தில் அசோக் வரதன் ஷெட்டி என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி இருந்தார். மிகுந்த திறனாளர். அவர் முதல்வரின் நேரடி நெருக்கத்தில் இருந்தார். கூடவே அப்போதைய துணை முதல்வரும் இப்போதைய முதல்வருமானவருக்கு அவர் நேசநெருக்க நெஞ்சினர். எனவே தலைமைச் செயலகத்தில் கொடிகட்டிப் பறந்தார். அவரைச் சுற்றியே ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வளைய வளைய வந்து, வாய்ப்புகளை வாரிச் சுருட்டிக் கொண்டோர் அனேகர்.திமுக ஆட்சி மாறி அதிமுக ஆட்சி 2011ல் வந்ததும் அசோக் வரதன் ஷெட்டியைத் தலைமைச் செயலகத்தில் இருந்து தூக்கி அடித்தனர். அதிகபட்ச அவதியை அவர் சந்திக்க வேண்டியதாயிற்று.

சேலம் மாநகரில் சேகோசர் நிறுவன மேனேஜிங் டைரக்டர் என்று ஒரு பதவி உண்டு. அதுவோ டெபுடி டைரக்டர் தகுதி அதிகாரியின் மூலமாக நிரப்பப்பட வேண்டியதாக இருந்தது. அதனை உயர் அந்தஸ்துக்கு உரியதாக, அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதில் அசோக் வரதன் ஷெட்டி நியமிக்கப்பட்டார். என்னிடமே அவர், “என்னை எந்த அளவுக்கான சிறு பதவியில் வேண்டுமானாலும் அமர்த்தட்டும். நான் ஏற்றுக் கொள்கிறேன். என் குடும்ப அவசியம் கருதி என்னை சென்னையில் ஏதேனும் ஒரு பதவியில் அமர்த்த உதவுங்கள்… போதும்” என்று வேண்டினார். சேகோசர் நிறுவனப் பதவியில் அமர்ந்த அவருக்கு 4 ரேங்க் கீழே உள்ள சிவில் சர்வீஸ் அதிகாரியை அவரின் ‘பாஸ்’ எனும் தகுதியில் அமர்த்தி அசோக் வரதன் ஷெட்டியை அவமதித்தனர்.

இதுபோன்று சுமார் நூறு துறைகள் தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளன. தலைமைச் செயலராக இருந்து தமிழகத்தையே நிர்வகிக்கும் திறமையுள்ள இறையன்பு… சாதாரண பேராசிரியர் போல் அண்ணா மேலாண்மை நிறுவனத்தில் இருந்தார் அல்லவா? இதுபோன்று பல துறைகள் உண்டு. ஆளும் கட்சியினருக்கு வேண்டாதவர் களுக்கென்றே தண்ணி தெளித்து விடப்பட்ட துறைகள் இவை. மக்கள் வரிப்பணம் இவற்றால் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் ஆண்டுதோறும் அவசியமின்றியே அழிந்து வருகிறது. துறைகள் இணைப்புத் திட்டத்தால் பணமும் மிச்சம். உயர் அதிகாரிகளிடையே இருந்துவரும் ஈகோ கூட துச்சம்.

மிகப்பெரும் துறையை நிர்வகிக்கும் தகுதியும் திறமையும் கொண்ட ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். போன்ற அந்தஸ்துள்ள அதிகாரிகள் டம்மி துறைக்குத் தூக்கி அடிக்கப்படுவதில் அரசியல் வாதிகளின் அரிப்பு வேண்டுமானால் தீர்க்கப்படலாம். ஆனால் அவரின் உழைப்பு, திறமை, அனுபவம் போன்றவற்றை வீணடிக்கலாமா? இது தேசிய இழப்பன்றோ! அரசின் பணம் கோடிக்கணக்கில் ஒவ்வொருவருக்கும் செலவழிக்கப்பட்டு இருக்கிறது. இது மக்களின் வரிப்பணம். இதை ஆத்திரத் தீர்வுக்கா பயன்படுத்திக் கொள்வது?

எம்ஜிஆர் ஆட்சிக் காலத்திலும் அதற்கு முன்னரும் உதவி ஆணையர் தகுதியில் இருந்த அதிகாரி நிர்வகித்துவந்த ஒரு சாதாரண பிரிவு அலுவலகமே தற்போது தனித்துறையாகி, அதற்கு டி.ஜி.பி. அந்தஸ்து கொண்ட அதிகாரியை நியமிக்கிறார்கள். இதுபோல ஏராள நிலைப்பாடுகள் உண்டு. எனவே தான் இத்தகு தண்டனைப் பதவிகளில் இருந்து தப்பிக்க அதிகாரிகள் அல்லாடிக் கொண்டு இருக்கின்றனர்.

இதற்கு ஒரு தீர்வு உண்டு. அதிகாரம் இல்லாத…வலுவான நிலையற்ற சாதாரணத் துறைகள் அனைத்தையும் அதனதன் தொடர்புத் துறைகளில் ஒன்றிணைத்துவிட வேண்டும். பின்னர் பெரிய துறையின் ஒரு பிரிவு அலுவலகமாகவே அது மாறிவிடும். அதற்குத் தாழ்நிலை அதிகாரிகளே போதும். உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் இந்த அலுவலகங்கள் இயங்கும். இதன் மூலமாக எல்லா துறைகளுமே வலுவானவையாக வலிமைமிக்கதாக… அதிகாரிகளின் ஆர்வத்தை ஈர்க்கக் கூடியவையாக மாறிவிடும். ஆளும் தலைமையை நெருங்கி, கம்பீரமானத் துறையைப் பெறத் துடிக்கும் உணர்வு சிவில் சர்வீஸ் அதிகாரிகளிடையே குன்றிப் போகும். அனைத்து உயர் அதிகாரிகளின் அனுபவங்களும் ஆற்றலும் வீணே விரயம் ஆகாமல் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கே பயன்படும்.

தலைமைச் செயலர் தகுதியில் இருக்கும் இறையன்புவுடன் நான் கால் நூற்றாண்டுக்கும் அதிகமாகப் பழகியுள்ளேன். அவரின் குடும்பத்தாருடன் நான் 50 ஆண்டுகாலப் பழக்கம் உள்ளவன். எனவே அவரின் நேர்மையும் நிர்வாகத் திறனும் அப்பழுக்கற்றது என்பதையும் உணர்வேன். அவர் எத்தனையோ சீர்திருத்தங்களைச் செய்ய முடியும். ஆனால் அவரின் அத்தகு புதிய பயனுள்ள முயற்சிகளுக்குத் தமிழக அரசின் தலைமை ஆளுமை அனுசரணையாக இருத்தல் அவசியம். பத்தாண்டு காலம் வனவாசம் அனுபவித்த இறையன்புவுக்கு தற்போதுதான் ஜனவாசம்.

இப்போது கூட நிர்வாகச் சீர்திருத்தம் நிகழவில்லை எனில் பின் எப்போது…? 💐

நூருல்லா ஆர். ஊடகன்
18-05-2021

 

error: Content is protected !!