June 1, 2023

மரங்களில் விளம்பரத் தட்டி/ கேபிள் ஒயர்கள் இருந்தால் அபராதம் + சிறை = சென்னை கார்ப்பரேசன் அறிவிப்பு!

தமிழகத்தில் சுவர் விளம்பரம், தட்டி மற்ரும் பேனர் விளம்பரங்கள் வைக்க அரசு தடை விதித்து இருந்தாலும் ஆங்காங்கே இந்த விதியை கண்டு கொள்ளாமல் ஆங்காங்கே உள்ள மரம் உள்ளிட்ட வைகளில் விளம்பரம் செய்வது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் சென்னை மாநகரில் இனிமேல் மரங்களில் விளம்பரத் தட்டிகள் மற்றும் கம்பிகள் போன்றவற்றை அமைத்தால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

அதாவது இந்த சிங்காரச் சென்னை மாநகராட்சி, கடந்த 2011-ம் ஆண்டு விரிவாக்கப்பட்ட பிறகு அதன் பரப்பு மொத்தம் 426 சதுர கிலோ மீட்டராக விரிவடைந்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச் சகம் அறிவுறுத்தலின்படி, மக்களுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்க வேண்டும் என்றால், மொத்த நிலப்பரப்பில் குறைந்த பட்சம் 144 சதுர கிலோ மீட்டர் (33.3 சதவீதம்) பரப்பளவு பசுமைப் போர்வை இருக்க வேண்டும். ஆனால் சென்னையில் உள்ள மரங் களின் எண்ணிக்கை தொடர்பாக முறையான கணக்கெடுப்பு மாந கராட்சியால் இதுவரை நடத்தப்பட வில்லை. இருப்பினும் செயற்கை கோள் புகைப்படத்தின் அடிப்படை யில், கடந்த 2016-ம் ஆண்டு ஏற்பட்ட வார்தா புயலுக்கு முன்பு 26 சதுர கிலோ மீட்டர் (6.25 சதவீதம்) பரப்பளவு பசுமைப் போர்வை இருந்ததாகத் தெரிகிறது. வார்தா புயலின்போது லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்த நிலையில், சென்னை மாநகரின் பசுமைப் போர்வை மேலும் குறைந்தது.

எஞ்சிய மரங்களில் ஆணிகள் அடித்தும், கம்பிகளைக் கொண்டு கட்டியும் விளம்பர தட்டிகள், விளம்பர அட்டைகள் ஆகியவை தொங்க விடப்பட்டு வருகின்றன. பல இடங்களில், மரங்களின் மீது மின் விளக்கு களும் பொருத்தப்பட்டுள்ளன. இவ் வாறு செய்வதன் மூலம் மரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், மரங்கள் அழிந்து போகவும் வாய்ப்புகள் உள்ளதாக மரம் வளர்ப்பு ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.இதுபோன்ற விளம்பரங்களை அகற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சில, அங்கொன்றும் இங்கொன்றுமாக மரங்களில் உள்ள விளம்பர பலகைகளை அகற்றி வருகின்றன. இருப்பினும் இது போன்ற விதிமீறல்களைத் தடுக்க முடியவில்லை. இந்நிலையில், மரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் விளம்பரத் தட்டிகள், கேபிள் ஒயர்கள் போன்றவற்றை அமைத்து இருப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சென்னை மாநகராட்சிக்கு உட் பட்ட பகுதிகளில் பசுமை பரப் பளவை அதிகரிக்கும் வகையில் பிரதான சாலைகள் மற்றும் உட் புறத் தெருக்களில் பல்வேறு உள் நாட்டு வகை மரங்கள் நடப்பட்டு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.இம்மரங்கள் அனைத்தும் நல்ல முறையில் வளர்வதற்கு வளமான மண், தண்ணீர், சூரிய ஒளி ஆகியவை முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. எனினும், இயற்கைக்கு மாறாக மரங்களில் எவ்வித சேதாரமும் இன்றி பாது காக்கப்பட வேண்டியது பொது மக்களின் கடமை ஆகும்.

இந்நிலையில், சில தனியார்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அவற்றின் விளம்பரங்களை அட்டை மற்றும் பலகைகள் போன்ற வற்றை மரங்களில் ஆணி அடித்து அல்லது கம்பி மற்றும் கயிற்றால் கட்டி விளம்பரம் செய்து வருகிறார்கள்.மேலும் மரங்களில் பெயின்ட் அடித்தல், மின்சார அலங்கார விளக்குகள் அமைத்தல், கம்பிகள், கேபிள் ஒயர்கள், மற்றும் இதர பொருட்கள் மரங் களில் அமைக்கப் பட்டுள்ளன. இதுபோன்ற தேவையற்ற இயற்கைக்கு மாறான நடவடிக்கைகளால், மரங்கள் பட்டுப்போவதுடன் அவற்றின் வாழ்நாள் குறைந்துவிடுகிறது.

எனவே, மரங்களில் அமைக்கப் பட்டுள்ள தேவையற்ற விளம்பர பலகைகள், மின்சார அலங்கார விளக்குகள், கேபிள் ஒயர்கள் மற்றும் இதர பொருட்களை 10 தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் அல்லது வர்த்தக நிறுவனங்கள் அவர் களாகவே அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில், சம்பந்தப் பட்டவர்கள் மீது சென்னை மாநக ராட்சி முனிசிபில் சட்டம்- 1919-ல் 326-வது விதியின்படி, ரூ.25 ஆயிரம் வரை அதிகபட்ச அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இதுகுறித்த புகார்களை பொது மக்கள் 1913 என்ற இலவச தொலைபேசி எண் வாயிலாக தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்”என்று மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.