தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் எடப்பாடியார் பேசிய்து இதுதான்!

அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்கும் போதெல்லாம், தமிழ் அறிஞர்களை பெருமைப்படுத்தும் விதமாக, அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விருதுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வந்துள்ளது. அந்த வகையில், தமிழ் வளர்ச்சித் துறையில், 5ஆக இருந்த விருதாளர்களின் எண்ணிக்கை, தற்போது 72 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருது கள் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழ் மொழி சார்ந்து செயல்படும் இலக்கியவாதிகள், புலவர் கள், தமிழ் மொழியியல் அறிஞர்கள் மற்றும் முனைவர்கள் முதலியோரை ஊக்கப்படுத்தும் வகை யில் தமிழக அரசால் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், உலகப் பொதுமறை எனப் பார் போற்றும் திருக்குறளை தந்த தெய்வப் புலவர் திருவள்ளுவரை மேன்மைப்படுத்தும் நோக்கிலும் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2019ம் ஆண்டுக்கான விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிஞர்களுக்கு வழங்கி கௌரவப்படுத்தினார்.
விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆற்றிய உரையில், ” அறிஞர் பெருமக்கள் ஆற்றிய அரும் பணிகளுக்காக இன்று விருதுகள் பெறுகிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்து களையும், மனமார்ந்த பாராட்டுகளையும் இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
உயிரினங்களில் மொழி பேசும் வாய்ப்பு பெற்றது மனிதகுலம் மட்டும் தான். ஒவ்வொருவரது உள்ளத்திலும் ஊற்றெடுக்கும் எண்ணங்களை பிறரிடம் வெளிப்படுத்தி மொழிவதால் ‘மொழி’ என்னும் பெயர் வழங்கப் பெற்றது. உலகெங்கிலும் பரவியுள்ள மனிதகுலம், சுமார் ஏழாயிரம் மொழிகள் பேசுவதாக, மொழி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இவற்றில் எழுத்து வடிவம் பெற்ற மொழிகள் குறைந்த அளவிலேயே உள்ளன.
வாழ்வின் பயனை மக்கள் அடைவதற்கு வழிகாட்டிகளாக உலகின் பல்வேறு மொழிகளில் பல நூல்கள் உள்ளன. அவற்றில் மூன்று நூல்கள், அதை இயற்றியவர்களின் அறிவுத் திறத்தையும், ஆராய்ச்சி நுணுக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. முதலாவது, கௌதம புத்தருடைய நல்லுரைகளான ‘திரிபீடங்கள்’. இரண்டாவது, புத்தருடைய காலத்துக்கு ஏறக்குறைய ஒத்த காலத்தில் சீனாவில் வாழ்ந்த கன்பூசியஸின் ‘அனலெக்ட்ஸ்’ என்னும் அறிவுரை நூல். மூன்றாவதாக, தமிழ்நாட்டில் வாழ்ந்த திருவள்ளுவரின் ‘திருக்குறள்’ ஆகும்.
உலகப் பொதுமறையான திருக்குறள் மற்றும் அதனை உலகுக்கு அருளிய திருவள்ளுவரின் பெருமையை உலகறியச் செய்யவும், தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் சிலவற்றை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். திருவள்ளுவரின் பெருமையினை உலகறியச் செய்யும் வகையில், ஆண்டுதோறும் தைத்திங்கள் 2ஆம் நாளை திருவள்ளுவர் தினமாக தமிழ்நாடு அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது. அந்நாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப் படத்திற்கு மலர் தூவியும் சிறப்பு செய்யப்பட்டு வருகிறது.
தமிழுக்கு பெருமை சேர்த்திடும் வகையில், தம் வாழ்நாளில் தமிழ்ப் பணியாற்றி வருவதையே உயிர் மூச்சாகக் கொண்டுள்ள தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.
திருவள்ளுவர் பெயரில் திருவள்ளுவர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. திருக் குறளை கற்றுத் தெளிவதை விட, காட்சியில் கண்டால் எளிதில் மனதில் பதியும் என்பதால், அரசு நிதி உதவியில் திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடம் சென்னை, தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை நாள்தோறும் மாணாக்கர்கள் மற்றும் வெளிநாட்டினர் கண்டு பயனடைந்து வருகின்றனர்.
திருவள்ளுவர் கால எழுத்தில் மீண்டும் திருக்குறளைப் பார்த்தல் வேண்டும் என்ற அவாவை நிறை வேற்ற, திருக்குறளை வள்ளுவர் வாழ்ந்த கால வரிவடிவில் எழுதிட, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன் முயற்சியின் விளைவாக “திருவள்ளுவர் கால எழுத்தில் திருக்குறள்” என்னும் நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் தமிழின் தொன்மையான வரிவடிவான தமிழியில் (தமிழ்-பிராமி) எழுதப்பட்டுள்ளது என்பதை உலக மக்கள் அறிந்திடச் செய்தல் மட்டுமின்றி, காலத் தொன்மையையும் உலகிற்கு உணர்த்திட வழி செய்யும் இந்த நூல் 11.12.2018 அன்று என்னால் வெளியிடப்பட்டது.
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர், தமிழ் மூதாட்டி ஒளவையார், கவிச்சக்கரவர்த்தி கம்பர், இளங்கோ அடிகளார், தமிழ் அறிஞர் ராபர்ட் கால்டுவெல், தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகளார் மற்றும் தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் மாலை அணிவித்தும், அவர்தம் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவியும், அவர்தம் தமிழ்த் தொண்டினையும், படைப்பாற்றல் களையும் மனதில் தாங்கி வணக்கம் செலுத்தும் அற்புத நிகழ்வு தொடர்ந்து அரசால் நடத்தப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (20.01.2020) நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் தமிழறிஞர்கள் உள்ளிட்ட 52 பேருக்கு விருதுகள் வழங்கி கெளரவித்தார். #TNGovtAwards pic.twitter.com/UT8AlOEhO7
— CMOTamilNadu (@CMOTamilnadu) January 20, 2020
பேறிஞர் அண்ணா இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டையும், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டையும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டையும் நடத்தி தமிழுக்கு பெருமை சேர்த்தார்கள். தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக் கழகம் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் 1981 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
தமிழ் மொழியின் வளம் பற்றி உலக மக்கள் அறிவதற்கு ஏதுவாக, திருக்குறள் தவிர மீதமுள்ள பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை உலக மொழிகளான பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளிலும், இந்திய மொழிகளான இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு, 19.12.2019 அன்று என்னால் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த தொல்காப்பியரின் சிலை 10.3.2019 அன்று திறந்து வைக்கப்பட்டது.
தமிழ் மொழிக்கு பெருமை சேர்ப்பது அதன் சொல் வளமே ஆகும். தமிழ் மொழியின் சொல் வளத்தை காப்பது, சொல் வளத்தை பெருக்குவது, பிற மொழிக் கலப்பை தவிர்க்க துணை நிற்பது போன்ற நோக்கங்களின் அடிப்படையில் ‘சொற்குவை’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று என்னால் சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழில் உள்ள அனைத்துச் சொற்களையும் ஒரே தளத்தில் நிரல்படுத்தி வழங்குவதற்காக பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்களின் ஆலோசனைகளைப் பெற்று சொற்குவை திட்டம் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழ்நாடு அரசின் சார்பில் 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் பங்குத் தொகையாக 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்கும் போதெல்லாம், தமிழ் அறிஞர்களை பெருமைப்படுத்தும் விதமாக, அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விருதுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வந்துள்ளது. அந்த வகையில், தமிழ் வளர்ச்சித் துறையில், 5ஆக இருந்த விருதாளர்களின் எண்ணிக்கை, தற்போது 72 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இது போன்று எண்ணற்ற சாதனைகள் தமிழக அரசால் நிகழ்த்தப்பட்டு வருகின்றன என்பதை பெருமையுடன் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
இன்று விருதுகள் பெற்ற தமிழ் அறிஞர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது பாராட்டு களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பல தமிழ் அறிஞர்கள் தொடர்ந்து தமிழ்ப் பணியாற்றி அவர்களும் விருதுகள் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். இதைக் கூறும் போது எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
சோலையூர் என்ற ஒரு ஊரில் மழை பெய்யாமல், மக்கள் பசியாலும், பட்டினியாலும் வாடி வந்தார் கள். அந்த நிலையில், ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி, அந்த ஊரில் உள்ள ஒரு செல்வந்தரிடம் வந்தார்கள். அவரிடம், “நம் ஊர் பசி, பஞ்சத்தில் சிக்கித் தவிப்பது தங்களுக்குத் தெரியும். பெரியவர் கள் பசியை பொறுத்துக் கொள்வார்கள். ஆனால், சிறுவர்கள் என்ன செய்வார்கள், பாவம் அவர் களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும்” என்று கூறினார்கள். அதற்கு, அந்த செல்வந்தர், “கண்டிப்பாக உதவி செய்கிறேன். நம் ஊரில் எத்தனை சிறுவர், சிறுமியர் உள்ளனர்” எனக் கேட்டார். அப்போது ஊர் பெரியவர் ஒருவர், “40 சிறுவர், சிறுமியர் உள்ளனர்” என்றார்.
உடனே செல்வந்தர், “அவர்களை நாள்தோறும் காலையில் என் வீட்டிற்கு வரச் சொல்லுங்கள், ஒரு கூடையில் 40 ரொட்டிகளை வைக்கச் சொல்கிறேன். அவர்கள் ஆளுக்கு ஒன்று எடுத்து பசி ஆறட்டும்” என்றார். அவ்வாறே தினமும் சிறுவர்கள் வந்து ஆளுக்கு ஒரு ரொட்டி எடுத்து தங்கள் பசியை போக்கிக் கொண்டனர். அவ்வாறு ரொட்டி எடுக்கும் போது பெரிய ரொட்டித் துண்டை எடுக்க அவர்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டனர். ஆனால் ஒரு சிறுமி மட்டும் ஒதுங்கி இருந்து, அனைவரும் எடுத்துக் கொண்ட பின் தனக்கான ரொட்டியை எடுத்துச் சென்றாள்.
சில நாட்கள் கழித்து, அதே போன்று ஒரு நாள் தனக்குக் கிடைத்த சிறிய ரொட்டியுடன் அச்சிறுமி தன் வீட்டிற்குச் சென்றாள். ரொட்டியை பிய்த்துப் பார்த்தபோது, அதற்குள்ளே ஒரு தங்கக் காசு இருந்தது. உடனே அச்சிறுமியின் தாயார், “இது செல்வந்தர் வீட்டு தங்கக் காசு, தவறுதலாக ரொட்டிக்குள் வந்துவிட்டது. அதனை அந்த செல்வந்தரிடமே திருப்பிக் கொடுத்து விடு” என்று கூறி அச்சிறுமியை செல்வந்தரிடம் அனுப்பினார். அவ்வாறே அச்சிறுமி தங்கச் காசை எடுத்துக் கொண்டு அந்த செல்வந்தரிடம் நடந்ததைக் கூறி திருப்பிக் கொடுத்தாள். அதற்கு செல்வந்தர், “சிறுமியே உன் பொறுமைக்கு நான் கொடுத்த பரிசு இது, இதை நீயே வைத்துக் கொள்” என்று கூறி, அந்த தங்கக் காசை சிறுமியிடமே திருப்பிக் கொடுத்தார்.
சிறுமியும் மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து தன் வீட்டிற்குச் சென்றாள். இது போன்று வளர்ந்து வரும் தமிழ் அறிஞர்களும் பொறுமையுடன் காத்திருந்து, தங்களது திறமையை நிரூபித்தால், அந்த சிறுமியைப் போல் உரிய நேரத்தில் உங்களுக்கும் விருது கிடைக்கும் என வாழ்த்தி, இந்த நிகழ்ச்சியினை நல்ல முறையில் ஏற்பாடு செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.