சென்னை வில்லிவாக்கம் ஏரியில் கண்ணாடி பாலம்- வீடியோ & முழு விபரம்!

சென்னை வில்லிவாக்கம் ஏரியில் கண்ணாடி பாலம்- வீடியோ & முழு விபரம்!

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் அமைந்துள்ள வில்லிவாக்கம் ஏரி 39 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்நிலை, முறையான பராமரிப்பின்றி கிடந்தது. எனவே, இந்த ஏரியை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்பேரில், மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.16 கோடியில் இந்த ஏரியை பசுமை பூங்காவாக மாற்றும் பணி கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் திட்ட மதிப்பீடு ரூ.45 கோடியாக உயர்ந்தது. இந்த சீரமைப்பு பணிக்காக சென்னை குடிநீர் வாரியம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 11.50 ஏக்கர் பரப்பை மட்டும் வைத்துக்கொண்டு, மீதம் உள்ள 27.50 ஏக்கர் பரப்பை மாநகராட்சி வசம் ஒப்படைத்தது.

அப்போது அந்த ஏரியின் ஆழம் ஒரு மீட்டராக மட்டுமே இருந்தது. சீரமைப்பு பணியில் சுமார் 5 மீட்டர் ஆழம் வரை ஏரி தூர்வாரப்பட்டது. அதன் மூலம் நீர் கொள்திறன் 70 ஆயிரம் கன மீட்டர் அளவுக்கு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஏரிக்கு கரைகள் அமைப்பது, டிவிஎஸ் கால்வாயை ஒட்டி ஒரு சாலை அமைப்பது, குழந்தைகள் பூங்கா, பெரியவர்களுக்கான உடற்பயிற்சி மையம், நடைபயிற்சி பாதை, ஆவின் விற்பனை நிலையம், நுழைவாயில், பல்நோக்கு தாழ்வாரம், வாகன நிறுத்துமிடங்கள், விளையாடும் இடங்கள், தடுப்பு வேலி, 12டி திரையரங்கம் ஆகியவற்றை அமைப்பது, இருக்கைகள் அமைத்தல், குடிநீர் வசதி ஏற்படுத்துதல், எல்.இ.டி. விளக்குகள் பொருத்துதல், குப்பைத் தொட்டிகள் அமைத்தல், ஏரிக் கரையை பாதுகாக்க நவீன முறைகளை பின்பற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்ள 2019ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, பல்வேறு பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில், முக்கிய அம்சமாக ஏரியின் நடுவில் கண்ணாடி தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 820 மீட்டர் நீளம், 3 அடி அகலத்தில், ரூ.8 கோடி செலவில் இது அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் நடந்துகொண்டே ஏரியின் அழகை கண்டு ரசிக்கலாம். ஒரே நேரத்தில் 250 பேர் வரை இந்த பாலத்தின் மீது நடக்கலாம் என்பதால், இது பொதுமக்களை அதிகம் கவரும். இந்த சேவை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘தமிழ்நாட்டிலேயே கண்ணாடி பாலத்துடன் கூடிய பூங்கா அமைக்கப்படவிருப்பது, இதுவே முதன்முறை. இதனால், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும். குழந்தைகளுக்கு நல்ல பொழுதுபோக்காக இருக்கும். அதற்கேற்ப பாதுகாப்பு அம்சங்களும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இங்கு, படகு சவாரியும் அமைய உள்ளது. விரைவில் இதற்கான பணிகள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்,’’ என்றனர்.

நீர் நிலைக்கு அருகே உள்ள 9 ஏக்கர் பரப்பில் குழந்தைகளுக்கான உள்ளரங்க விளையாட்டுகளும், உணவு திடலும் அமைக்கப்பட உள்ளன. சுமார் 100 கோடி மதிப்பில் பொழுதுபோக்கு பூங்கா அமைகிறது. குழந்தைகள் விளையாடக்கூடிய 70 புதிய உள்ளரங்க விளையாட்டுகளுக்கான மேடைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மெய் நிகர் திரையரங்கமும், செயற்கை பனி அரங்கமும் அமைக்கப்பட உள்ளன. நீர்நிலைப் பகுதிகளில் பறவைகள் வந்து அமர்வதற்கான திடலும் சூழலும் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் 50 படகுகள் மூலம் வில்லிவாக்கம் ஏரியில் பார்வையாளர்கள் சவாரி செய்யும் வகையில் வசதிகள் செய்யப்பட உள்ளது. மேலும் வரும் பார்வையாளர்களுக்கு மீன் பிடிக்கும் அனுபவத்தை தரும் வகையில் மீன்பிடி திடல்களும் அமைக்கப்பட உள்ளது. ஏரியில் நாட்டு மீன் வகைகள் மட்டுமே வளர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட பொழுதுபோக்கு பூங்கா கட்டுமானத்தில் உள்ளரங்க விளையாட்டுகள் உள்ள நிலையில் அடுத்த கட்ட பணியின் போது பெரிய விளையாட்டுகளும் பொழுது போக்கு அம்சங்களும் கூடுதலாக இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக வில்லிவாக்கம் ஏரிக்கு அருகே உள்ள 120 குடிசைப் பகுதிகளில் உள்ள மக்கள் மறுகுடியிருப்பு செய்யப்பட்டுள்ளனர். அனைத்து தரப்பு மக்களும் வந்து கண்டு களிக்கும் வகையில் குறைவான கட்டணங்களோடு மிகுந்த பாதுகாப்பு வசதிகளோடும் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

வில்லிவாக்கம் ஏரியின் ஒரு பகுதி பொழுதுபோக்கு பூங்காவாகவும், மற்றொன்று குடிநீர் சுத்திகரிப்பு நிலையமாக மாற்றப்பட உள்ளது. முதற்கட்டப் பணிகள் முடிவடைந்து அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் பொழுதுபோக்கு பூங்காவின் ஒரு பகுதி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் மற்ற பகுதிகளில் ராட்சத ராட்டினங்கள் அமைக்கும் பணிகள் அடுத்தடுத்த கட்டங்களாக தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.

error: Content is protected !!