📰சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் முதல் பொதுக்குழு கூட்டம்: காரசார விவாதம், தீர்மானங்கள் தோல்வி!

📰சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் முதல் பொதுக்குழு கூட்டம்: காரசார விவாதம், தீர்மானங்கள் தோல்வி!

சென்னை பத்திரிகையாளர் மன்றம் (Chennai Press Club) என்பது தமிழ்நாட்டில், குறிப்பாகச் சென்னையில் உள்ள பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினரின் நலன் காக்கும் ஒரு முதன்மையான அமைப்பாகும். இது ஊடகவியலாளர்களின் தொழில்முறை வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பு, மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றுக்காகப் பாடுபடுகிறது. இப்பேர்பட்டசென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தலில், ஆசிப் தலைமையிலான ‘நீதிக்கான அணி’ பெரும் எழுச்சியுடன் 99% வாக்குப்பதிவில் வெற்றி பெற்று, நிர்வாகப் பொறுப்பை ஏற்றது. புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற உள்ள நிலையில், முதல் பொதுக்குழு கூட்டம் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

  • அறிவிப்பு: டிசம்பருடன் ஓராண்டு நிறைவு பெற உள்ள நிலையில், பிரஸ்கிளப் விதிமுறைப்படி 24 நாட்களுக்கு முன்பு (அக்டோபர் 24) பொதுக்குழு கூட்டம் நவம்பர் 16ஆம் தேதி நடைபெறும் என்று முறையாக அறிவிக்கப்பட்டது.

  • இடத்தின் ரகசியம்: முதல் அறிவிப்பில் பொதுக்குழு நடைபெறும் இடம் குறித்துத் தகவல் தெரிவிக்கப்படவில்லை. உறுப்பினர்களிடையே மகிழ்ச்சி மற்றும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், நிர்வாகிகளுக்கு மட்டும் இக்கூட்டத்தை நல்லபடியாக நடத்தி முடித்துவிட வேண்டும் என்ற பதட்டம் இருந்தது.

  • சர்ச்சைகளும் அச்சமும்: இதற்கு முக்கியக் காரணம், ஆசிப் தரப்பு மீது இருந்த இரண்டு முக்கியச் சர்ச்சைகள்:

    1. ‘மாற்றத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பு’ என்ற சங்கத்தைச் சேர்ந்த 11 பேருக்கு, பொதுச்செயலாளர் ஆசிப் அரசு வீடு வாங்கி கொடுத்த விவகாரம்.

    2. யூடியூபர் கரிகாலன், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மூத்த பத்திரிகையாளர் சுப்பையாவிடம் மன்றத்தின் உறுப்பினர் அட்டையைக் காட்டி மிரட்டிய விவகாரம். இந்தக் கேள்விகள் பொதுக்குழுவில் எழுப்பப்படும் என்ற அச்சம் நிர்வாகிகளுக்கு இருந்தது.

  • திசைதிருப்பல் முயற்சி?: இந்தச் சர்ச்சைகளிலிருந்து திசை திருப்பவே, தமிழக அரசும் அப்போலோ மருத்துவமனையும் இணைந்து நடத்திய பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ முகாமில், சென்னை பத்திரிகையாளர் மன்றமும் இணைந்து ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

  • நிர்வாகிகள் விடுமுறை: சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நவம்பர் 8ஆம் தேதி நடைபெற்ற மருத்துவ முகாமில், பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் உட்பட அவர்கள் சார்ந்த அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் கலந்துகொள்ளாமல், மசனகுடியில் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

  • இடம் அறிவிப்பு: நவம்பர் 13ஆம் தேதிதான், பொதுக்குழு கூட்டம் அடையாறில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலைக் கல்லூரியில் நடைபெறும் என்று முறையாக அறிவிக்கப்பட்டது.

    • இடம் கிடைத்தது எப்படி: மன்றத்தின் துணைத் தலைவரான சுந்தர பாரதி, தேர்தலில் போட்டியிடும்போது புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணியாற்றினார். ஆட்குறைப்பு காரணமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்ட அவர், தற்போது எம்ஜிஆர் ஜானகி கல்லூரி நடத்தி வரும் ஒரு யூடியூப் தளத்தில் பணியாற்றி வருகிறார். அவரது ஏற்பாட்டிலேயே கல்லூரி அரங்கம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

II. பொதுக்குழுவின் நிகழ்வுகள் (நவம்பர் 16)

1. கோரம் மற்றும் ஆரம்ப நிகழ்வுகள்

  • ஆரம்ப வருகை: ஆயிரம் பேருக்கு மேல் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் நடத்திய முதல் கூட்டத்திற்கு, காலை 11:45 மணி வரை வெறும் 193 பேர் மட்டுமே வந்திருந்தனர்.

  • கோரமின்மை: 500க்கும் மேற்பட்டோர் வருவார்கள் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக, போதிய அளவில் கோரம் இல்லாததால், கூட்டம் ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. இது நிர்வாகிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

  • கூட்டம் தொடக்கம்: 12 மணிக்கு மேல் சுமார் 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வருகை தந்ததால், தலைவர் சுரேஷ் வேதநாயகம் தலைமையில் கூட்டம் தொடங்கியது.

  • கௌரவிப்பு: தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, மறைந்த பத்திரிகையாளர்களுக்கு இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    • 40 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர்கள் சால்வை அணிவித்து, ஒரு பேனா பரிசாக அளித்துக் கௌரவிக்கப்பட்டனர்.

    • தேர்தலைச் சிறப்பாக நடத்த(?) உறுதுணையாக இருந்ததாகக் கூறப்படும் ‘கருங்காலி ஊடகவாசி’ உள்ளிட்ட வழிக்காட்டு குழுவினரும் கௌரவிக்கப்பட்டனர்.

2. நிர்வாகிகளின் அறிக்கை மற்றும் நிதி விவாதம்

  • ஆசிப் அறிக்கை: பொதுச்செயலாளர் ஆசிப், ஓராண்டு காலச் சாதனைகள் குறித்துப் பேசினார்.

  • நிதி அறிக்கை: பொருளாளர் மணிகண்டன் வரவு-செலவு கணக்குகளைச் சமர்ப்பித்தார். இருப்பினும், கிளப்பிற்கு வரவான மொத்த தொகை மற்றும் செலவு செய்த தொகை குறித்த வெளிப்படையான தகவல்கள் முழுமையாக இல்லை என்று உறுப்பினர்கள் மத்தியில் சலசலப்பு எழுந்தது. மார்ச் மாதத்தில் முறையாகத் தணிக்கை (Auditing) முடித்த பிறகு தாக்கல் செய்வதாக மணிகண்டன் உறுதியளித்தார்.

  • பதவிக்காலம் நீட்டிப்பு: மூத்த பத்திரிகையாளர் ஜேம்ஸ், நிர்வாகிகளின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாக மாற்றம் செய்யப் போகிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். இதற்கான எண்ணம் இல்லை என்று ஆசிப் பதிலளித்தார்.

3. கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள்

  • பழைய நிர்வாகிகள் மீது நடவடிக்கை: அரசு வீடு பெற்ற உறுப்பினர் தேவேந்திரன், பழைய நிர்வாகிகள் மீது ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? தவறும் பட்சத்தில் தான் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்திற்குச் செல்வேன் என்றார்.

  • தலைவர் சுரேஷ் குற்றச்சாட்டுகள்: இதற்குப் பதிலளித்த தலைவர் சுரேஷ், மன்றத்தின் முன் பகுதியில் உள்ள இரண்டு கிரில் கேட்டில் ஒன்றை நன்கொடையாகப் பெற்றதாகவும், மற்றொன்றைப் பணம் கொடுத்து வாங்கியதாக செக் போட்டுப் பணம் எடுத்துள்ளதாகவும் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறினார். மேலும், 25 ரூபாய் தண்ணீர் கேனை 40 ரூபாய்க்கு வாங்கியுள்ளனர் என்றும் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தெரிவித்தார்.

    • நக்கீரன் பிரகாஷ் போன்றோர், இதுபோன்ற ஊழல் நிர்வாகிகளை மன்றத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆக்ரோஷமாகப் பேசினர்.

4. முக்கியச் சர்ச்சைகளும் கைகலப்பும்

  • யூடியூபர் சேர்க்கை: உறுப்பினர் விக்னேஷ் பேசும்போது, பைலாவில் திருத்தம் கொண்டு வரப் போவதாகக் கூறிவிட்டு, அதற்கு முன்பே யூடியூபர் கரிகாலன் உட்படப் பல யூடியூபர்களை உறுப்பினராகச் சேர்த்தது எந்த அடிப்படையில் எனக் கேள்வி எழுப்பினார்.

  • வீடு ஒதுக்கீடு சலசலப்பு: உறுப்பினர் ஷபீர் பேசும்போது, மன்றத்தின் பொதுச் செயலாளராக இருந்துகொண்டு, ‘மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கத்தின்’ உறுப்பினர்களுக்கு மட்டும் அரசு வீடு ஒதுக்கீடு பெற்றுக்கொடுத்தது எந்த அடிப்படையில் என்று கேள்வி எழுப்பினார்.

    • சலசலப்பு: இதற்கு ஆசிப்பின் தீவிர ஆதரவாளரும், வீடு பெற்றவருமான நித்தியானந்தம் துள்ளிக் குதித்து எழுந்து, “அதற்கும் பொதுக்குழுவிற்கும் என்ன தொடர்பு, இங்கு ஏன் கேள்வி எழுப்புகிறீர்கள்?” என்று ஆவேசமாகக் கேட்டார்.

    • மோதல்: இதனால் பூகம்பம் வெடித்தது போல் சலசலப்பு ஏற்பட்டு, சிறிது நேரத்திற்குப் பின்னர் இருக்கைகள் சிதறிக் கிடந்தன. கைகலப்பு எதுவும் நடக்காமல் தள்ளுமுள்ளு நடந்து நித்தியானந்தன் வெளியேற்றப்பட்டார். வெளியே சென்ற அவர், “என் குடியை கெடுத்தவன்! என் குடியை கெடுத்தவன்!” என்று சத்தமிட்டபடியே சென்றார்.

    • அமைதி திரும்பிய பின்பு, ஆசிப் மற்றும் சுரேஷ், வீடு வாங்கிய விவகாரத்தில் மன்றத்தின் பெயரைப் பயன்படுத்தவில்லை என்று கூறி, அந்தப் பிரச்சினையை மீண்டும் எழுப்ப வேண்டாம் என்று உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டனர்.

5. வெளிப்படைத்தன்மை கேள்விக்குறியாதல்

  • சீருடையில் அந்நியர்கள்: யூடியூபர் சேர்க்கை குறித்த கேள்வி எழும்போதெல்லாம், உறுப்பினர் அல்லாதவரும், தி.மு.க. ஐ.டி. விங்கில் பணியாற்றும் இந்திரகுமார் என்பவர், கேள்வி எழுப்பும் உறுப்பினர்களைப் பார்த்து அடிக்க வருவது போல் எகிறிப் பேசினார். எதிர்க்கட்சியினர் அவர் மீது பாய முயல, மீண்டும் ஒரு குழப்பம் நிலவியது. அப்போதுதான் அவர் இருக்கையில் உட்கார குஷன் கொண்டு வந்திருந்ததும், அவரைச் சுற்றி உறுப்பினர் அல்லாத கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை அணிந்த சீருடை அணிந்த அந்நியர்கள் ஊடுறுவியிருந்ததும் தெரிந்தது.

  • நிதி வெளிப்படைத்தன்மை கேள்வி: உறுப்பினர் முருகேசன் மற்றும் மூத்த பத்திரிகையாளர் தீக்கதிர் குமரேசன் ஆகியோர் மீண்டும் நிதி வெளிப்படைத்தன்மையைக் கேள்வி எழுப்பினர்.

    • முருகேசன்: பதவியேற்பு விழா, பொங்கல் விழா, கிரிக்கெட் போட்டி, கேண்டீன் கட்டடம் ஆகியவற்றுக்கு யார், யாரிடம் நன்கொடை/ஸ்பான்சர் பெறப்பட்டது, எவ்வளவு செலவானது போன்ற வரவு-செலவு கணக்குகளை முறையாகத் தெரிவிக்கவில்லை என்றும், இது வெளிப்படைத்தன்மையாக இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.

    • தலைவர் சுரேஷ், தனது நண்பரிடம் இருந்து பணம் வாங்கிச் செலவு செய்ததாகவும், தனது பாக்கெட்டில் இருந்து செலவு செய்ததாகவும் கூறியதற்கு, முருகேசன், “எதற்கெடுத்தாலும் நண்பர் கொடுத்த பணம்/பாக்கெட்டில் இருந்து செலவு செய்தேன் என்கிறீர்கள். இது ஊழலுக்குத்தானே வழிவகுக்கும்” என்று எதிர் கேள்வி எழுப்பினார்.

    • குமரேசன், தலைவர் சுரேஷின் தாராள குணத்தைப் பாராட்டிய போதும், அவர் கையில் இருந்து செலவு செய்த பணத்தை மன்றம் கடனாக ஏற்றுத் திருப்பி அளிக்க வேண்டும்; இல்லையெனில் முறைக்கேடாகத்தான் தெரியும் என்றார்.

6. தீர்மானங்களும் வாக்கெடுப்பும்

கடைசியாக, நிர்வாகிகளால் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டன:

  • தோல்வியடைந்த தீர்மானங்கள்:

    1. யூடியூபர்களை உறுப்பினராகச் சேர்க்க பைலாவில் கொண்டுவரப்பட்ட திருத்தம், பெரும்பான்மையான உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டது.

    2. தேர்தலுக்குப் பிறகு புதிதாகச் சேர்க்கப்பட்ட 900 உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான தீர்மானம் உறுப்பினர்களால் ஏற்கப்படவில்லை. இதனால், இந்த 900 விண்ணப்பங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பொதுக்குழுவால் ஏற்கப்பட்டது.

  • நிறைவேறிய தீர்மானங்கள்:

    1. நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கையை இரண்டில் இருந்து நான்காக மாற்றுவது.

    2. மேனேஜர் பதவியைச் சாதாரண பதவியாக மாற்றம் செய்வது.

  • கரிகாலன் நீக்கம்: மூத்த பத்திரிகையாளரை அச்சுறுத்திய விவகாரத்தில், கரிகாலனை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானம், நிர்வாகிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

    • நீக்க ஆதரவு: 53 உறுப்பினர்கள்

    • எதிர்ப்பு: 17 உறுப்பினர்கள்

    • பெரும்பான்மை ஆதரவுடன் கரிகாலன் நீக்கப்படுவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் ஓராண்டு சாதனை குறித்த ஆண்டு மலரில் கூட, நிதி விவரங்களோ, நன்கொடைகள் கொடுத்தவர்கள் பற்றியோ பதிவு செய்யப்படாததால், புதிய நிர்வாகிகளின் வெளிப்படைத்தன்மை (Transparency) பொதுக்குழுவில் கேள்விக்குறியானது. பொதுக்குழு முடிந்து கலைந்து சென்ற போது, தலைவர் நல்லவர்தான் ஆனால் பொதுச்செயலாளர் பொருளாளர் சரியில்லை என்று உறுப்பினர்கள் புலம்பி சென்றதை கேட்க முடிந்தது  மேலும் பொதுக் குழு முடிந்தவுடன் கலந்து கொண்டோரிடம் மினிட் புத்தகத்தில் கையெழுத்து வாங்கவில்லை என்பதுடன் முன்னதாக நுழையும் போதே ஒரு நோட்டில் சில வெள்ளை பக்கங்களுக்கு பின்னர் கையொப்பம் வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.

மெட்ராஸ் பத்திரிகையாளன்!

Related Posts

error: Content is protected !!