டாஸ்மாக் பார்களை 6 மாதங்களில் மூடும் உத்தரவு ரத்து சென்னை ஐகோர்ட்

டாஸ்மாக் பார்களை  6 மாதங்களில்  மூடும் உத்தரவு ரத்து  சென்னை ஐகோர்ட்

1937 தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் கீழ் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பதற்கு மட்டுமே அனுமதி உண்டு என்றும், அங்கு வாங்கும் மதுபானங்களை வீடுகளிலோ அல்லது தனியான இடங்களிலோ அருந்தலாம் என்றும் தெரிவித்து தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் பார்களை ஆறு மாதங்களில்மூட நடவடிக்கை எடுக்கும்படி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

நம் நாட்டில் டாஸ்மாக் டெண்டர் தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட் தனி நீதிபதி, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களை ஆறு மாதங்களில் மூட வேண்டும் என 2022 ஆம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி உத்தரவிட்டார். மேலும், புதிய டெண்டர் அறிவிப்பாணையை வெளியிடும் போது, நில உரிமையாளரிடம் ஆட்சேபமில்லா சான்று பெற வேண்டும் எனவும் கூறியிருந்தது. இந்த இரு உத்தரவுகளை எதிர்த்து டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.

அதில், டெண்டர் கோரி விண்ணப்பிக்கும் அனைவரும் நில உரிமையாளர்களிடம் ஆட்சேபமில்லா சான்று பெற்று சமர்ப்பிப்பது சாத்தியமற்றது எனவும், அதை ஏற்றுக் கொண்டால் தற்போது உரிமம் பெற்றவர்கள் மட்டுமே டெண்டர் கோரி விண்ணப்பிக்க முடியும் என்றும் கூறி, டெண்டரை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்த உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தனர்.. மேலும், டெண்டர் காலம் முடிவடையும் நிலையில் உள்ளதால் புதிய டெண்டர் கோர டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அனுமதியளித்து உத்தரவிட்டது. அதேசமயம், ஆறு மாதங்களில் டாஸ்மாக் பார்களை மூட நடவடிக்கை எடுக்கும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

error: Content is protected !!