ஆதார் அப்டேட்/ புதுபிப்பு செப்.14 வரை மட்டுமே இலவசம் !
10 ஆண்டுகளுக்கு முன்னர் பெறப்பட்ட ஆதார் அட்டைகளை புதுப்பிப்பது அவசியம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கடந்த மார்ச் மாதம் தெரிவித்தது. அதாவது ஆதார் டேட்டாபேஸில் உள்ள டேட்டாக்கள் துல்லியமாகவும் புதுப்பித்ததாகவும் இருப்பதை உறுதிசெய்ய, மக்கள் 10 வருடங்களுக்கு ஒரு முறை தங்கள் ஆதார் விவரங்களை புதுப்பிப்பதை UIDAI கட்டாயமாக்கியுள்ளது.
குறிப்பிட்ட சில காரணங்களுக்காக புதுப்பிப்பு முக்கியமானது:
1. ஆதார் விவரங்களை வைத்து நடைபெறக்கூடிய மோசடிகளை தடுக்கலாம்.
2.ஆதார் விவரங்கள் சரியானவை என உறுதிப்படுத்துதல்.
3. ஆதாரை வைத்து அரசு திட்டங்களை மேம்படுத்துதல்.
ஆதார் அட்டையை புதுப்பிக்காவிட்டால் என்னவாகும்?
ஆதார் புதுப்பிக்கப்படாவிட்டால், பல சிக்கல்கள் ஏற்படலாம். எதிர்காலத்தில் வங்கிச் சேவைகள், அரசாங்கத் திட்டங்களைப் பயன்படுத்துவதில் வாடிக்கையாளர்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும்.
அதனால் அரசின் டேட்டாபேஸில் துல்லியத் தரவுகள் வேண்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக அப்டேட் செய்யப்படாத ஆதாரில், ஆவணங்களை அப்டேட் செய்ய வேண்டும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த ஆண்டு தெரிவித்தது. ஆஃப்லைன் வழியே ஆதார் மையங்களிலில் இந்த சேவைக்கு தகுந்த கட்டணம் செலுத்த வேண்டும். அதே சமயம் வரும் 14-ம் தேதி வரையில் மட்டுமே ஆன்லைன் வழியே பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை ஆதார் அட்டை பயனர்கள் இலவசமாக புதுப்பிக்க முடியும். அதன்பிறகு அந்த சேவைக்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி மார்ச் 15 முதல் ஜூன் 14, 2023 வரை ஆதார் அட்டை விவரங்களை இணையம் மூலம் மக்கள் இலவசமாக புதுப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் அதனை மேலும் மூன்று காலம் செப்டம்பர் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. புகைப்படம், கருவிழி மற்றும் பயோ மெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய ஆதார் மையங்களுக்கு செல்ல வேண்டும்.
இப்போது அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று போன்ற ஆவணங்களை மக்கள் ‘மை ஆதார்’ எனும் தளத்தில் பதிவேற்றம் செய்து தங்கள் ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம். இந்தியாவில் பல்வேறு அரசு திட்டங்கள் மற்றும் சேவைகளை பெற ஆதார் அட்டை பயன்படுகிறது. கடந்த 2009-ஆம் ஆண்டு ஆதார் அட்டை அறிமுகமானது.