சென்னையில் விற்கப்படும் குடிநீரில் 45% சுகாதாரமற்றவை: ஆய்வு முடிவு!

சென்னையில் விற்கப்படும் குடிநீரில் 45% சுகாதாரமற்றவை: ஆய்வு முடிவு!

சென்னையில் இருக்கும் குடிநீர் தயாரிக்கும் யூனிட்டுகளிடம் இருந்து தண்ணீர் பாக்கெட்டுகள், குடிநீர் கேன்கள், தண்ணீர் பாடல்கள் என மொத்தம் 187 மாதிரிகளை சென்னை மாநகராட்சி ஆய்வுக்கு அனுப்பியது. அந்த ஆய்வின் முடிவில், சோதனைக்கு வந்த மாதிரிகளில் 42 மாதிரி கள் பரிசோதனைக்கு தகுதியற்றவைகளாகவும், 30 மாதிரிகள் பாக்டீரியா பாதிக்கப்பட்டதாகவும் இருந்துள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் பல இடங்களில் அடைக்கப்பட்ட குடிநீரை தான் மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் இதனை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என நம்பி கேன்களிலும், பாட்டில்களிலும், பாக்கெட்டுகளிலும் அடைத்து விற்கப்படும் குடிநீரை விலை கொடுத்து வாங்கி உபயோகப்படுத்தி வருகின்றனர். மக்கள் பயன்படுத்தும் இந்த குடிநீர் சுகாதாரமானதா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகவே இருந்த சூழலில் அனுப்பப்பட்ட மாதிரிகளில் 40 மட்டுமே குடிப்பதற்கு ஏதுவானது என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 20 மாதிரிகள் பெயரில் தவறு இருப்பதும், 14 மாதிரிகள் பிராண்ட் பெயரில் தவறு இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின் முடிவு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தகவலை சென்னை மாநகராட்சி நிர்வாகம் என்ஜிடி எனப்படும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் தாக்கல் செய்திருக்கிறது. சுகாதாரமற்ற முறையில் விநியோகிக்கப்படும் குடிநீரை மக்கள் பயன்படுத்துவதன் மூலம் காலரா, டைபாய்டு போன்ற பல நோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தடுத்து, மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றும் போலி சுத்திகரிப்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய ஆய்விலும் 50 மாதிரிகளில் 14 மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!