கொலீஜியம் எடுக்கும் முடிவில் உள்நோக்கம் எதுவுமில்லை!- சுப்ரீம் கோர்ட் விளக்கம்!

கொலீஜியம் எடுக்கும் முடிவில் உள்நோக்கம் எதுவுமில்லை!- சுப்ரீம் கோர்ட் விளக்கம்!

மெட்ராஸ் ஐகோர்ட் ஜட்ஜ் நீதிபதி ட்ரான்ஸ்பர் சர்ச்சையான நிலையில் இது போன்று நீதிபதிகள் இடமாற்றம் குறித்து தேவைப்பட்டால் காரணத்தை விளக்க  சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் தயங்காது என்று அறிவித்துள்ளது.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானியை, மேகாலயா நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதை மறுபரிசீலனை செய்யும்படி, கொலீஜியத்துக்கு நீதிபதி தஹில் ரமானி வேண்டுகோள் விடுத்தார். ஆனால், இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மிகப் பெரிய சென்னை ஐகோர்ட்டி இருந்து, மிகச் சிறிய மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இவர் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். பணியிட மாற்றம் உத்தரவை திரும்ப பெறக்கோரி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கும் சென்னை வக்கீல்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.

அதே சமயம் நீதிபதி தஹில் ரமானி, மகாராஷ்டிராவில் உள்ள லத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இதனால், இவரது பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் வக்கீல்கள் இன்று நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். தஹில் ரமானி இடமாற்றம் சர்ச்சையானதால், நேற்று ஒரு அறிக்கை வெளியானது.

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி உள்ளிட்ட 5 நீதிபதிகள் அடங்கிய கொலீஜியத்தின் சார்பில் உச்சநீதிமன்ற செகரட்டரி ஜெனரல் சஞ்சீவ் எஸ் கல்கோன்கர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் இடமாற்றம் குறித்து கொலீஜியம் பிறப்பித்த உத்தரவுகள் பற்றி சில செய்திகள் வெளியாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நீதித்துறையின் சிறப்பான நிர்வாகத்தை கருத்தில் கொண்டே ஒவ்வொரு இடமாற்ற உத்தரவும் பிறப்பிக்கப்படுவதாக அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சரியான காரணங்களுக்காகவும், தேவையான நடைமுறைகளின்படியுமே நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

நீதித்துறையின் நலன் கருதி இடமாற்றத்திற்கான காரணத்தை வெளியிடுவதில்லை என்றாலும், அவசியம் என்று கருதினால் இடமாற்றத்திற்கான காரணத்தை விளக்க கொலீஜியம் தயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு இடமாற்ற பரிந்துரையும் முழுமையாகவும், ஆழ்ந்த ஆலோசனைக்கு பின்னும், கொலீஜியத்தில் ஒரு மனதாகவும் எடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!