ஒரு புண்ணிய பூமி கறை படிந்திருக்கலாகுமா..?! -செல்லிஸ்ரீ

ஒரு புண்ணிய பூமி கறை படிந்திருக்கலாகுமா..?! -செல்லிஸ்ரீ

எல்லா ஊரிலும் நாலு வீடுகளில் ஒன்றில் ஒரு விதவை இருக்கிறாள். அவ யார் கண்ணுலயும் படக் கூடாது, நல்லது கெட்டதுல கலந்துக்க கூடாது, நல்லா உடை உடுத்தக் கூடாது..இப்படி அடையாள மற்றவளாய் புழு ,பூச்சிகள் வாழ்வதை போல ஒரு அவல நிலையில தான் வாழ்க்கையை ஓட்டி கொண்டிருக்கிறாள்..
women widow
“அட என்னங்க ..காலம் மாறிடுச்சு ..இப்ப புருஷனோட சடலம் எரிஞ்சு சாம்பல் கூட கைல வரல.. லிப்ஸ்டிக்கோட ஆபிசுக்கு போறா சிட்டி ல இருக்குற விடோ வினிதா”

“ரெண்டு மாசம் கூட ஆகல ரெண்டாவது கல்யாணம் செஞ்சுக்கறா ரீட்டா”

“இப்படி எத்தனை பேர் மறுவாழ்வு பற்றி சொல்ல முடியும்?

நூத்துல ஒரு பத்து பேர்..மீதி 90 பேரோட நிலைமை?.என்ன தான் வியாக்யானம் பேசினாலும், பகுத்தறிவை கொட்டினாலும் ஒரு கல்யாண வீட்டில் ஒரு கைம்பெண் தாலியை தொட யாராவது அனுமதிக்கிறார்களா?” இல்லை தானே ! ஒரு கோவில் சன்னதியில் கடவுளுக்கு அர்ச்சிக்கப்பட்ட மலரைக் குப்பை தொட்டியில் கூட போடுகிறார்கள்.ஒரு கைம்பெண் அதை பெற அனுமதி இருக்கிறதா?

இந்த பூ பொட்டை விடுங்க இது எல்லாம் கூட பெரிய சவால் இல்லை..பெரும்பாலான இந்தியக் கைம்பெண்களின் வாழ்க்கை போராட்டத்தை பார்க்கும் போது.. அப்பப்பா இந்தியாவில் பெண்ணாய் பிறப்பதே ஒரு சாபம் தான் அதிலும் கைம்பெண்ணாய் ஆவது பெரிய கொடுமை .. இப்படி பாவப்பட்ட கைம்பெண்கள் என்ன செய்யறாங்க..எப்படி காலம் கழிக்கறாங்க ..இப்படி ,புறக்கணிக்க பட்ட ,அவமதிக்க பட்ட பல்லாயிரக் கணக்கான பெண்களைப் பற்றி தெரியுமா ?.

வாங்க ஒரு விசிட் அடிக்கலாம் பிருந்தாவனத்திற்கு..

.உ.பி யில் இருக்கும் மதுரா ஒரு புராதன இடம் .கிருஷ்ணர் பிறந்த புண்ணிய பூமி,அங்கிருந்து 5 கி.மீ தொலைவில் இருப்பது பிருந்தாவனம்..இங்கே பல கிருஷ்ணர் ராமர் கோவில்கள் உள்ளன. வருடம் முழுவதும் ஏராளமான பக்தர்களால் இந்த கோவில்களும்,குறுக்கு சந்துகளும் நிரம்பி வழிகின்றன. உள்ளே சிலைக்கு பட்டும் ஆபரணமும் பாலாபிஷேகமும் ,நடக்கின்றன.ஏராளமான காணிக்கை களால் உண்டியல்கள் நிரம்பி வழிகின்றன.ஆனால் ..வெளியே ஏராளமான பெண்கள் மொட்டை அடிக்கப் பட்டு,வெள்ளை உடை உடுத்தி கையில் பிச்சை பாத்திரத்துடன் அலைகிறார்கள். யார் இவர்கள்..? அத்தனை பெண்களும் .கணவனை இழந்தவுடன் குடும்பத்தாரால் புறக் கணிக்கப் பட்டு இங்கே கொண்டு வந்து விடப் பட்ட மகளிர்தான்.

கிருஷ்ணனும் ,ராதையும் கோபியருடன் குலாவிய,உலாவிய இந்த துளசி தனத்தில் துளசி செடிகளை விட அதிகமாக முளைத்து துளசி வனம் கைம்பெண்வனமாக காட்சி அளிக்கிறது..
இவர்கள் இங்கே என்ன செய்கிறார்கள்?

காலையில் யமுனா நதியில் குளிக்கிறார்கள்.பின் கோவில்கோவிலாக சென்று வழிபடுகிறார்கள். கிருஷ்ண கீதம் பாடுகிறார்கள் ஆடுகிறார்கள்.இரண்டு வேளை சாப்பாட்டிற்கே அல்லற் படுகிறார்கள்..எலி பொந்தை போன்று இருண்ட குகை போன்ற அறைகளில் படுத்து உறங்குகிறார்கள்.. வெளிச்சம் கிடையாது. போதுமான உணவு கிடையாது. யாரும் தேடி வர மாட்டார்கள். மாற்று உடைகள் கிடையாது. இந்த நிலையிலும் தினம் குளிக்கிறார்கள்,பக்தியோடு தங்களை எப்படியாவது தன்வசம் அழைக்கும்படியாக கிருஷ்ணனை வேண்டுகிறார்கள். கூன்விழுந்த முதுகோடு எங்கே யாசகம் கிட்டும் என்று அலைகிறார்கள்.

இருளில் காத்திருக்கிறார்கள். உணவை கண்டதும் வயதை மறந்து ஒடுகிறார்கள். சூடு பொறுக்காமல் கண்ணீர் வடிக்கிறார்கள்.ஒரு தெரு நாய்க்கு கிடைக்கும் அளவு உணவு கூட பல பேருக்கு கிடைப்பதில்லை. இவர்களுக்கு உடம்புக்கு நோய் வந்தால் பார்க்க ஆளில்லை..ஏன் மரணித்தால் கூட சடலத்தை அப்புறப் படுத்த யாரும் முன் வருவதில்லை..குப்பைகளை அள்ளிப் போடுவது போல் அள்ளிக் கொண்டு போகிறார்கள். இதில் பெரும்பான்மையோர் அதிக சொத்து பத்துகளோடு நன்றாக வாழ்ந்தவர்கள்..கணவன் இறந்த பிறகு சொத்தை பிள்ளைகளிடம் தொலைத்து இங்கே அனாதையாக கொண்டு வந்து விடப் பட்டு சாவிற்காக காத்து கொண்டிருப்பவர்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன் எனக்கும் பிருந்தாவன் செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது

யமுனா நதியில் நீராடி நடுங்கி வரும் அந்த முதுமை முகங்கள், கூன் விழுந்த முதுகுகள், இருண்ட சத்திரங்களில் விடாமல் கோவிந்த நாமம் உதிர்க்கும் உதடுகள்

இன்னும் இன்னும் என் கண் முன்னே வந்து வந்து தான் போகின்றன. ஒரு மாலை நேர ஆரத்தியில் கலந்து கொண்ட போது அருகில் நின்று தன் வலிகளை மறைத்து கோவிந்த நாமம் ஜெபித்து கொண்டிருந்த “ராதாகிரி” என்ற இளம்பெண்ணின் அழகிய முகம் ஜொலித்ததை இன்னும் என்னால் நினைவு கூராமல் இருக்க முடிய வில்லை

இவர்கள் ஏன் இப்படி விரட்டப் படுகிறார்கள்?

இவர்கள் ஏன் இப்படி கை விடப் பட்டார்கள்?

இவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?

இவர்கள் வாழ்வு இப்படித்தான் இருக்க போகிறதா?

இவர்கள் சாகப் பிறந்தவர்களா?

இவர்கள் வாழ வேண்டாமா..?

ஒரு புண்ணிய பூமி கறை படிந்திருக்கலாகுமா..?

க்ருஷ்ணணின் காதலுக்கும் கொண்டாட்டத்துக்கும் உதாரணமாக போற்றப் பட்ட சந்தோஷ பூமி இன்று பல்லாயிரக் கணக்கான கைம்பெண்களின் சாவுக் கூடாரமாக மாறலாகுமா..?

 

நேரமிருக்கும் போது இந்த வீடியோவைப் பாருங்க;

செல்லிஸ்ரீவாசன்

Related Posts

error: Content is protected !!