என்னை வர்த்தக எழுத்தாளன் என்று சுட்டிப் பேசுவதா? பட்டுக்கோட்டை பிரபாகர்

என்னை வர்த்தக எழுத்தாளன் என்று சுட்டிப் பேசுவதா? பட்டுக்கோட்டை பிரபாகர்

நேற்று ஒரு தொலைக்காட்சி பேட்டி! சொல்லி வைத்தது போல் எல்லோரும் கேட்கும் ஒரு எரிச்சலூட்டும் கேள்வி! (தப்பா நினைச்சிக்காதிங்க.. என்கிற முன் குறிப்புடன்) இலக்கியவாதிகள் பலரும் கிரைம் எழுதிய சுஜாதா உள்பட உங்களையும், இன்னும் சிலரையும் கமர்ஷியல் ரைட்டர்ஸ் என்று விமரிசிப்பது குறித்து?

அலுத்துப் போன என் பதில்:

(நேரம் கருதி கொஞ்சமாக அங்கே சொன்னவையும், பேட்டியில் சொல்லாதவையும் சேர்த்து இங்கே!)

க்ரைம் எழுதுவது தேசிய குற்றமில்லை. அது அத்தனை சுலபமுமில்லை. சுஜாதாவோ, நானோ மற்றும் க்ரைம் எழுதும் பலருமோ க்ரைம் மட்டுமே எழுதுவதில்லை. ஆகச் சிறந்த சிறுகதைகளும் நாவல்களும் பல வகைகளிலும் எழுதியிருக்கிறோம். பல வகை எழுத்துக்களில் க்ரைம் எழுத்து என்பதும் அதை எழுத கூடுதல் புத்திசாலித்தானம் அவசியப்படுகிற ஒரு வகை.

எந்த வகை எழுத்து இங்கே இலவசமாக எழுதப்படுகிறது என்பதைச் சொல்லுங்கள். யாராவது என் எழுத்துக்கள் யாவும் வர்த்தக நோக்கத்திற்காக எழுதப்படுவதில்லை என்பதால் எந்தப் பதிப்பாளர் வேண்டுமானாலும் எத்தனைப் பிரதிகள் வேண்டுமானாலும் அச்சிட்டு விற்றுக்கொள்ளலாம், எனக்கு ராயல்டி தர அவசியமில்லை என்று அறிவித்திருக்கிறார்களா என்று சொல்லுங்கள்.

தயாரிப்பாளர் அடையும் லாபமும் எனக்கே வரவேண்டும் என்கிற நோக்கத்தில் நடிகர்களே தயரிப்பாளராகவும் மாறுவது போல.. பதிப்பாளர்களின் லாபமும் தனக்கே வேண்டும் என்று ஆள் ஆளுக்கு சொந்தப் பதிப்பகம் வைத்து புத்தகங்களை அச்சிட்டு விற்பது யார்? பாரதியின் கருத்துக்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற உன்னத நோக்கத்துடன் உரத்த சிந்தனை அமைப்புடன் இணைந்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் சென்று உரையாற்றும் நான் அதை சேவையாக நினைக்கிறேன். சேவை நோக்கத்துடன் உள்ள அமைப்புகளுக்கு நிதி திரட்ட தொகை எதுவும் பெற்றுக்கொள்ளாமல் பயிற்சி வகுப்புகள் நடத்துகிறேன்.

என்னுடன் நட்பில் இணையும் பல புதிய நண்பர்களுக்கும் என் செலவில் புத்தகங்கள் பரிசாக அனுப்பி வைக்கிறேன். பல தனியார் நூலகங்களுக்கு படித்து முடித்த புத்தகங்கள் மற்றும் என் புத்தகங்களை இலவசமாக அனுப்பித் தருகிறேன். இன்னொரு முறை என்னை வர்த்தக எழுத்தாளன் என்று சுட்டிப் பேசும் முன்பாக அவரவர் மனசாட்சியைத் தொட்டுப் பார்த்துக்கொள்ளட்டும்!

வாசகர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அவரவர் ரசனைக்கு தகுந்தபடி பலவிதமான எழுத்தாளர்களையும் ஆதரிக்கிறார்கள். தெளிவின்மையும், குறுகிய பார்வையும் ஒரு சில படைப்பாளிகளிடம் மட்டுமே. Grow up gentlemen! தமிழையும் இலக்கியத்தையும் காப்பாற்ற அவதரித்த அவதாரங்களாக மிக அதீதமாக தங்களை தாங்களே ஆராதித்துக்கொண்டு, சொந்தமாக அபிஷேகம் செய்து கொள்கிற அந்த ஒரு சிலரின் கருத்துக்களைத் தூக்கிக்கொண்டு வந்து இனி அந்த மாதிரியான கேள்விகளைக் கேட்காதீர்கள். போதும். பதில் சொல்லிச் சொல்லி அலுத்துவிட்டது. விளக்கம் சொல்வதற்காக செய்கிற சேவைகளைச் சொல்லிக் காட்ட வேண்டிய சூழ்நிலையும் சங்கடப்படுத்துகிறது.

இங்கே இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் சினிமா தொடர்பான விருதுகளின் பட்டியலில் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம், சிறந்த பாபுலர் திரைப்படம் என்கிற வகைகள் பிறகு சேர்க்கப்பட்டவை. அதைப்போல படைப்புகளுக்கு விருதுகள் வழங்கும் அமைப்புகள் எல்லாம் யோசிக்க வேண்டும். நகைச்சுவை, சமூகம், வரலாறு, மர்மம் என்று வகைகள் பிரித்து ஒவ்வொரு வகையிலும் சிறந்தவை என்று விருதுகள் வழங்க வேண்டும். எல்லா வகையையும் ஒன்றாகப் போட்டு பரிசீலித்து அதிலிருந்து தேர்வு செய்வது பாரபட்சமான நடைமுறையாகும்.

விருதுகள் வழங்கும் அத்தனை அமைப்புகளும் இப்படி வகை பிரித்து அங்கீகரித்தால் இந்த மாதிரி மேதாவிகளாகத் தங்களைக் கருதிக் கொள்பவர்களின் எள்ளல் பேச்சுக்களுக்கு இடமிருக்காது. பல விதமான உயர்ந்த விருதுகளுக்கும் தகுதியிருந்தும் புறக்கணிக்கப்பட்ட சுஜாதா சொர்க்கத்திலிருந்து நன்றி சொல்வார்.

பட்டுக்கோட்டை பிரபாகர்

error: Content is protected !!