உரிமைப் போராளி சி.பி. முத்தம்மா!

உரிமைப் போராளி சி.பி. முத்தம்மா!

சிவில் சர்வீஸ் என்று அழைக்கப்படும் இந்தியக் குடியுரிமைப் பணிகளில் இன்று ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் பொறுப்புகளையும் உரிமைகளையும் சமமாகப் பெற முடிகிறது என்றால், அதற்குக் காரணம் சி.பி.முத்தம்மாதான்!


1924 இதே ஜனவரி 24… கர்நாடக மாநிலத்தில் குடகு மாவட்டத்தில் பிறந்தார் கொனேரி பெல்லியப்பா முத்தம்மா. படிப்பிலும் கெட்டிக்காரர். உயர்கல்விக்காக சென்னை வந்தவர், கிறிஸ்தவக் கல்லூரியிலும் பிரெசிடென்சி கல்லூரியிலும் படித்தார். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, அபாரமாகத் தேர்ச்சியடைந்தார். ‘இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பெண்’ என்ற பெருமையைப் பெற்றார். 1949ல், இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத் துறை அதிகாரியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்தப் பொறுப்பில் இவரைச் சேர விடாமல் தடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முத்தம்மாவின் திறமைக்கு முன்பு அவை எல்லாம் எடுபடவில்லை!

30 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றினார் முத்தம்மா. வெளியுறவுத் துறையில் ஒவ்வொரு கட்டத்திலும் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் இருந்ததை உணர்ந்தார். ஆண்களுக்கு ஒருவிதமான விதிமுறைகளும் பெண்களுக்கு ஒருவிதமான விதிமுறைகளும் பின்பற்றப்பட்டு வந்தன. வெளியுறவுத் துறையில் பணிபுரிகிற திருமணம் ஆகாத பெண்கள், திருமணம் செய்து கொள்ளவே துறை அனுமதி பெற வேண்டும். திருமணம் ஆன பிறகு, அந்தப் பெண்ணின் குடும்பப் பொறுப்பு வேலை செய்யத் தடையாக இருக்கும் என்று அரசாங்கம் கருதினால், அந்தப் பெண் ராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்படுவார்.

பணி முதிர்வு, பதவி உயர்வு போன்றவற்றிலும் உரிமை வேண்டும் என்று எந்தப் பெண்ணும் கோர முடியாது என்ற விதி கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ‘திறமை இருந்தும் பதவி உயர்வு அளிக்க தடை போடும் இந்தச் சட்டங்களை நீக்க வேண்டும்… ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை வழங்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் முத்தம்மா. ‘குடும்பப் பொறுப்பு வேலை செய்வதற்குத் தடையாக இருக்கும் என்றால், அது ஆணுக்கும் பொருந்துமே? வெளியுறவுத் துறையில் ஆணாதிக்கம் கொடிகட்டிப் பறப்பதையே இது காட்டுகிறது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாகவே சட்டம் இருக்க வேண்டும்’ என்று தீர்ப்பளித்தார் நீதிபதி கிருஷ்ணய்யர். பின்னர், வெளியுறவுத் துறை சார்பாக, பாலியல் பாகுபாடு நீக்கப்பட்ட பிரமாணப் பத்திரம் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. முத்தம்மா பதவி உயர்வுக்குத் தகுதியானவர் என்று கூறி, நெதர்லாந்து நாட்டின் இந்தியத் தூதராக வெளியுறவுத் துறை நியமித்தது. 3 ஆண்டுகள் சிறப்பாகப் பணி செய்து, ஓய்வு பெற்ற முத்தம்மா, 2009 அக்டோபர் 14 அன்று மறைந்தார்.

India’s first woman career diplomat Chonira B Muthamma

error: Content is protected !!