தஞ்சை, மதுரை, அரவக்குறிச்சி, நெல்லித்தோப்பு தொகுதிகளில் வாக்குப்பதிவு ஜரூர்!

தஞ்சை, மதுரை, அரவக்குறிச்சி, நெல்லித்தோப்பு தொகுதிகளில் வாக்குப்பதிவு ஜரூர்!

தமிழ் நாட்டிலுள்ள அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளிலும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு சட்டசபை தொகுதியிலும் இன்று (19-ந்தேதி) தேர்தல் நடக்கிறது. அரவக்குறிச்சியில் அ.தி.மு.க. வேட்பாளராக செந்தில் பாலாஜி, தி.மு.க. வேட்பாளராக கே.சி.பழனிச்சாமி போட்டியிடுகிறார்கள். இங்கு 39 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.தஞ்சாவூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெங்கசாமி, தி.மு.க. வேட்பாளர் அஞ்சுகம் பூபதி உள்பட 14 பேரும், திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ், தி.மு.க. வேட்பாளர் சரவணன் உள்ளிட்ட 28 பேரும் போட்டியிடுகிறார்கள்.புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முதல்-மந்திரி நாராயணசாமி, அ.தி.மு.க. வேட்பாளர் ஓம் சக்தி சேகர் உள்ளிட்ட பலர் போட்டியிடுகிறார்கள்.

ellection nov 19

4 தொகுதிகளிலும் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. இதைதொடர்ந்து வெளியாட்கள் அனைவரும் தொகுதியை விட்டு வெளியேறிய நிலையில் 4 தொகுதிகளிலும் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்காக அரவக்குறிச்சி தொகுதியில் 245 வாக்குச்சாவடிகளும், தஞ்சாவூரில் 276 வாக்குச்சாவடிகளும், திருப்பரங்குன்றத்தில் 291 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் முதல் முறையாக நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் நுண்பார்வையாளர்கள் என அரவக்குறிச்சியில் 1482 பேரும், தஞ்சாவூரில் 1807 பேரும், திருப்பரங்குன்றத்தில் 1745 பேரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 3 தொகுதிகளிலும் 812 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 1593 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. 122 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 240 மின்னணு எந்திரங்களும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளிலும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு சட்டசபை தொகுதியிலும் இன்றுகாலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும். மாலை 5 மணிக்கு வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் ஓட்டுபோட அனுமதிக்கப்படுவார்கள்.

வாக்குப் பதிவு முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. 625 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் தலா 39 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.பதற்றமான வாக்குசாவடிகளில் துணை ராணுவப் படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் அதிகாரிகள் தொகுதி முழுவதும் சுற்றிவந்து தேர்தல் ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள்.

காலை 8 மணி நிலவரப்படி அரவக்குறிச்சி தொகுதியில் 9 சதவீத வாக்குகளும், புதுச்சேரியில் உள்ள நெல்லித்தோப்பு தொகுதியில் 11 சதவீதமும் பதிவாகி உள்ளன. அனைத்து தொகுதிகளிலும் மக்கள் வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

தஞ்சை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராமலிங்கம், திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.வாக்குப்பதிவு நிலவரத்தை பொதுமக்கள் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை தமிழக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.இன்று பதிவாகும் ஓட்டுகள் எண்ணிக்கை வருகிற 22-ந்தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. பகல் 12 மணிக்கு முடிவுகள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!