உங்களை சுற்றியுள்ள ஒலி மாசு எம்புட்டுன்னு அறிய உதவும் வெப்சைட்!

உங்களை சுற்றியுள்ள ஒலி மாசு எம்புட்டுன்னு அறிய உதவும் வெப்சைட்!

அன்றாட வாழ்வில் இயந்திர உபகரணங்கள் நிறைந்து விட்ட இன்றைய உலகில் எப்போதும் சத்தமும் இரைச்சலுமாக இருப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. உயிர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஒலி எழுப்பித்தன்னை அடையாளப்படுத்தி வருகின்றன.மனிதனும் அப்படி இருந்தவன்தான். நவீன கருவிகளின் வருகைக்குப் பின்பு இயல்பான ஒலி அளவைப் பன்மடங்கு பெருக்கி அதுவே பேரிரைச்சலாக மாறிவிட்டது. தொழிற்சாலைகளிலிருந்து வரும் மிகையான ஒலி, வாகனங்கள் ஏற்படுத்தும் பேரிரைச்சல், ஒலிபெருக்கி பெட்டிகளின் அதிரடி ஓசை, விழா நாட்களில் வெடிகளை வெடித்துக் காற்றை மாசுபடுத்துவது, பேருந்துகளிலும், சிற்றுந்துகளிலும் அதிக ஓசையுடன் ஒலிபரப்பப்படும் பாடல்கள், வீட்டில் அதிக ஒலியுடன் வைத்துப்பார்க்கப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திருமண மண்டபங்களில் அதிரவைக்கும் பாட்டுக் கச்சேரிகள், திரை அரங்குகளில் அதிரடி ஓசை என ஒலி மாசை உண்டு பண்ணும் காரணிகள் அதிகரித்து வருவது மனிதனின் நுட்பமான செவிப் புலனுக்குச் செய்யும் துரோகமாகும்.

sound oct 9

ஒலி அளவு என்பது அதிகபட்சம் 50-லிருந்து 60 டெசிபெல் வரை இருக்கலாம், இந்த ஒலி அளவு வரை செவிகளுக்குக் கேடில்லை.ஆனால் சாதாரண நாட்களிலேயே நகரங்களில் 90 – 95 டெசிபெல் ஒலிஅளவும், பொதுக்கூட்டங்கள், திருமணம், கோவில் திருவிழா போன்ற நேரங்களில் 110 – 120 டெசிபெல் என்ற ஒலி அளவும், தீபாவளி போன்ற விழாக்களின் போது அதிகளவில் பட்டாசுகளை வெடித்து காற்றையும் மாசுபடுத்தி, ஒலிமாசையும் உண்டுபண்ணும் அந்த ஒலிஅளவு 140 டெசிபெல்லையும் தாண்டி விடுகிறது.

இத்தகைய மிகை ஒலியெல்லாம் செவிப்பறையைத் தாக்கி அதிலிருந்து மூளைக்குச் செல்லும் அதிநுட்பமான ஒலி உணர்நரம்புகளைப் பாதித்துப் படிப்படியாக ஒலி உணர்திறன் குறைவது மட்டுமல்லாமல், உயர் இரத்த அழுத்தம், படபடப்பு, இன்சோம்னியா என்ற தூக்கமின்மை, குடல் அழற்சி, நரம்புத்தளர்ச்சி போன்ற உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன.இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்திடும் ஒலிமாசைக் கட்டுப்படுத்திட சட்டங்கள் இருந்திடினும் அவை வெறும் பெயரளவுக்கே என்றாகிவிட்டன.

மக்களும் ஒலிமாசை உணர்ந்து குறைப்பதாகத் தெரியவில்லை. கடுமையான சட்டங்களை அரசு தீவிரமாகச் செயல்படுத்தினால் அன்றி இதனைக்கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை.அதிக ஒலி அளவைக் கேட்டுப் பழகியவர்களுக்கு மிக மெல்லிய நுட்பமான ஒலிகளைக் கேட்கும் திறன் இல்லாமல் போய்விடுகிறது. மிகை ஒலி ஏற்படுத்தும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனங்களே காதுக்காப்பானை வழங்கி ஒலிமாசிலிருந்து அவர்களைக் காத்திட வேண்டும்.

பரபரப்பான இயந்திர உலகத்தில் வாழும் மனிதன், தன் நலன் கருதியாவது மாசுகளை உண்டுபண்ணும் எச்செயலிலும் ஈடுபடாமல், இயற்கையில் தான் பெற்ற உடல் என்னும் ஒப்பற்ற, உயிருள்ள கருவியை அலட்சியப்படுத்தாமல், மாசுகளிலிருந்து காத்து ஆரோக்கியமுடன் வாழ்வதே மிகச் சிறந்த செல்வமாகும், அறிவார்ந்த செயலுமாகும்.

இதனிடையே நீங்கள் இருக்கும் அறையில் அல்லது பணியாற்றும் சூழலில் உள்ள ஒலியின் அளவை சுவாரஸ்யமான முறையில் உணர்த்துகிறது ‘பவுன்சிபால்ஸ்’ இணையதளம். இந்த இணையதளத்துடன் கம்ப்யூட்டரில் உள்ள மைக்கை இணைத்தால், பயனாளிகளின் சுற்றுப்புற ஒலியை அளவிட்டுச் சொல்கிறது. திரையில் எம்பிக் குதிக்கும் பந்துகள் மூலம் இது உணர்த்தப்படுகிறது. அதிக இரைச்சல் இருந்தால், பந்துகள் அதிகமாக மேலெழும். அமைதியாக இருந்தால் அவையும் சலனமற்று இருக்கும்.

பள்ளி வகுப்பறை போன்ற சூழல்களில் இந்தச் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குதிக்கும் பந்துகள் தவிர இமோஜிகள் உட்பட வேறு பல வழிகளிலும் ஒலியின் அளவை உணரலாம்.

இணையதள முகவரி: https://bouncyballs.org

சைபர்சிம்மன்

Related Posts