பிளாக் மெயில் – விமர்சனம்!
நம்மூர் சிறைகளில் கைதிகள் முக்கியமாக இரண்டு வகைப்படுத்தப்படுகிறார்கள்: தண்டனை கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகள். மேலும், குற்றங்களின் தன்மை, வயது, பாலினம் மற்றும் சீர்திருத்தத்தின் தேவை போன்ற காரணிகளைப் பொறுத்து மேலும் பிரிவுகள் உள்ளன. நம் அரசியலமைப்பு முறையில் போலீசார் எந்தவொரு குடிமகனையும் பிடித்து பொய்வழக்கைச் சோடித்து சிறையிலடைக்க முடியும். குற்றவியல் சட்டப்படி போலீசுக்கு தண்டிக்கும் அதிகாரம் கிடையாது என்று கூறப்பட்டாலும், யாரையும் பிடித்து சிறையில் தள்ளுவதற்கான வாய்ப்பும் அதிகாரமும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. குற்றங்களை விரைந்து தடுப்பதாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் நோக்கத்துடன் போலீசார் பல்வேறு சிறு குற்ற வழக்குகளில் அப்பாவிகளைப் பிடித்து வருவதென்பதும், தங்களது பதவி உயர்வுக்காகவும், சம்பளம்-சலுகைகளுக்காகவும், மிரட்டிப் பணம் பறிப்பதற்காகவும் இப்படி பல பொய்வழக்குகளைச் ஜோடிப்பதென்பதும் போலீசாரின் வாடிக்கையாகவே உள்ளது. அப்படி சூழ்நிலையால சந்தேக கைதிகள் ஆன இருவர் வாழ்க்கையில் நேர்ந்த அதிரி, புதிரி சம்பவங்களை ட்விஸ்ட் மேல் ட்விட்டுகளாக கோர்த்து கேட்சியான தலைப்பில் ஒரு பக்கா எண்டர்டெயிண்ட்மெண்ட் மூவியை வழங்கியுள்ளார் முன்னதாக இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் மு.மாறன்.
அதாவது குடோனில் இருந்து மருந்துகளை எடுத்துச்சென்று மெடிக்கல் ஷாப்புகளுக்கு சப்ளை செய்யும் வேலை பார்க்கிறான் நாயகன் மணி (ஜிவி பிரகாஷ்) . அப்படி போன மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்க்கும் தேஜு அஸ்வினியை லவ் செய்து கர்ப்பம் தரிக்க வைத்து விடுகிறார். இதனிடையே ஜி.வி.பிரகாஷ் ஓட்டி வந்த வேன் டெலிவரிக்கு இருந்த பொருளுடன் காணாமல் போக, அது ஐம்பது லட்சம் மதிப்புள்ள போதை மருந்து என்று தெரிகிறது இதனால் டென்ஷனாகும் ஜி.வியின் முதலாளி முத்துக்குமார் ஜிவியின் கர்ப்ப நாயகி தேஜுவைக் கடத்தி வைத்துக்கொண்டு காணாமல் போன போதைப்பொருள் அல்லது ஐம்பது லட்சம் கொடுத்துவிட்டு காதலியை அழைத்துப் போகலாம்… அல்லது அவளை வெளிநாட்டு பாலியல் தொழிலுக்கு விற்று விடுவதாக மிரட்டுகிறான். இதை அடுத்து நெருங்கிய நண்பன் ரமேஷ் திலக்குடன் பல வகையிலும் பணத்துக்கு முயற்சி செய்கிறார் ஜி.வி.இதற்கிடையில் ஐடி நிறுவன அதிகாரியின் (ஸ்ரீகாந்த்) குழந்தையை யாரோ கடத்தி விடுகிறார்கள். இதை அறிந்த மணி குழந்தையை தான்தான் கடத்தி வைத்திருப்பதாக கூறி அவரை பிளாக்மெயில் செய்து பணத்தை வாங்கி அந்த பணத்தை தன் முதலாளியிடம் கொடுத்து காதலியை மீட்க எண்ணுகிறான்.. ஆனால் அந்த திட்டம் தோல்வியடைந்த சூழலில் என்ன செய்து காதலியை மீட்கிறார் என்பதே பிளாக் மெயில் படக் கதை.
மெயின் ஹீரோ மணி கேரக்டரில் நடித்திருக்கும் ஜிவி பிரகாஷ் தன் மீது திருட்டுப்பழி விழுந்ததும் சோகமாக முகத்தை வைத்துக் கொள்வதும் தான் எந்த தவறும் செய்யவில்லை ஆனாலும் காதலியை காப்பாற்ற ஏமாற்றி ஆக வேண்டும் என்ற உணர்வை மிகச் சரியாக எக்ஸ்போஸ் செய்கிறார். ஸ்ரீகாந்திடம் பணம் கேட்டு பிளாக் மெயில் செய்வதும் ஆனால் அந்த திட்டம் தோல்வியானதும் காதலியை காப்பாற்ற வேறு வழி தேடி திணறுவதுமாக ஒரு அப்பாவி தனமான நடிப்பை வெளிப்படுத்துபவருக்கு ஆக்ஷன் காட்சிகள் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை சரியாக பயன்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.
பிந்து மாதவி நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு குழந்தைக்கு தாயாக நடித்திருக்கும் அவர் தன் மகளை எப்படியாவது மீட்க வேண்டும் என்று முயல்வதும், ‘ என் குழந்தையை ஒன்றும் செய்து விடாதே’ என்று முன்னாள் காதலனிடம் கண்ணீர்விட்டு கதறுவதுமாக சரியான பர்ஃபார்மென்ஸ் காட்டி பாஸ் மார்க் வாங்கி விடுகிறார்.போதை மருத்து கடத்தல்காரர் முத்துக்குமார், அவரது அடியாள் ரெட்டின் கிங்சிலி இருவரும் சேர்ந்து புதிய காம்பினேஷனில் காமெடியெல்லாம் செய்திருப்பது ஓரளவு ஒர்க் அவுட் ஆகியுள்ளது. எப்போதும் எல்லாருக்கும் குட் ப்ரண்டாகவே வரும் ரமேஷ் திலக் தன் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்.
கேமராமேன் கோகுல் பேனாய்யின் கோணங்கள் படத்தின் தரத்தை சில படிகள் உயர்த்துகிறது. மியூசிக் டைரக்டர் சாம் சிஎஸ்யின் பின்னணி இசை மூலம் கதையின் பதட்டத்தை அதிகப்படுத்தி பலே சொல்ல வைத்து விடுகிறார்.சான் லோகேஷ்யின் எடிட்டிங் சுறுசுறுப்பாகவும், தேவையான அளவுக்குள் மட்டுமே- ஆம்.. மொத்த படமே இரண்டு மணி நேரம் ஐந்து நிமிடங்களுக்குள் கொடுத்திருப்பபதே பெரும் பலமாகி விட்டது.
மொத்தத்தில் ஆரம்பத்தில் சொன்னது போல் ட்விட்ஸ் மேல் ட்விட்ஸூக்காகவே இந்த பிளாக்மெயில் காணவேண்டிய படப் பட்டியலில் இடம் பிடித்து விட்டது.
மார்க் 3.5/5


