கன்னியாஸ்திரி பாலியல் வன்புணர்வு வழக்கு; பிரான்கோ முல்லக்கல் குற்றமற்றவராமில்லே!

அண்மை காலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற, அதிகமாக பேசப்பட்ட வழக்குகளில் ஒன்றான கேரள பிஷப் பிராங்கோ மூலக்கல் வழக்கில் இன்று யாரும் எதிர்பார்க்காத தீர்ப்பு வந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு கன்னியாஸ்திரி ஒருவர், பாதிரியார் பிராங்கோ மூலக்கல் பாலியல் வங்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியதை அடுத்து, மூலக்கல் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) பாதிரியாரை விடுவித்து கோட்டயம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2018 இல் கன்னியாஸ்திரி அளித்த புகார் மாநிலம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை பரவச் செய்தது. புகார் அளித்த கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக வந்த மற்ற பல கன்னியாஸ்திரிகள் பிஷப் பிராங்கோ மூலக்கலைக் கைது செய்யக் கோரி போராட்டத்தில் அமர்ந்தனர். 2014 மற்றும் 2016 க்கு இடையில் முல்லக்கல் தன்னை 13 முறை பலாத்காரம் செய்ததாக கன்னியாஸ்திரி கோட்டயம் எஸ்பியிடம் 2018 ஜூன் மாதம் புகார் அளித்தார். குற்றம் சாட்டப்பட்ட பிஷப் செப்டம்பர் 21 அன்று கைது செய்யப்பட்டார். ஐந்து கன்னியாஸ்திரிகள் பகிரங்கமாக அவரைக் கைது செய்யக் கோரி எர்ணாகுலத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். கன்னியாஸ்திரிகளின் போராட்டத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்தது.
பிராங்கோ மூலக்கல் மீது பலாத்காரம் உள்ளிட்ட 7 ஐபிசி பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்த வழக்கில் அரசுத் தரப்பு 39 சாட்சிகளை விசாரித்தது. காவல்துறையில் புகார் அளிப்பதற்கு முந்தைய காலகட்டத்தில், பாதிக்கப்பட்ட பெண் பல உள் புகார்களைக் கொடுத்ததாகவும், ஆனால் அவருக்கு எந்தெ பதிலும் கிடைக்கவில்லை என்றும் அரசுத் தரப்பு கூறியது. அவர் குற்றம் சாட்டியபோது அவர் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அரசு தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இந்த வழக்கில் எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரி குற்றம் சாட்டப்பட்டவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். எனினும் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முலக்கலுக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் 83 சாட்சிகள் உள்ளனர். சீரோ மலபார் கத்தோலிக்க திருச்சபையின் கர்தினால் மார் ஜார்ஜ் ஆலஞ்சேரி, மூன்று பிஷப்புகள், 11 பாதிரியார்கள், 22 கன்னியாஸ்திரிகள் உட்பட 83 சாட்சிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்களைத் தாக்கல் செய்ய அரசுத் தரப்பு தவறியதாக கூறி கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் பாதிரியார் முல்லக்கலை விடுவித்து உத்தரவிட்டிருக்கிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது