தேள் – பட விமர்சனம்!
உலகில் மொத்தம் 2000 வகையான தேள்கள் உள்ளது. அவற்றில் 25 வகையான தேள்கள் வீரிய விஷத் தன்மை கொண்டது. 100 வருடங்களுக்கு முன்னாள் சுமார் 600 தேள் இனங்கள் மட்டுமே கண்டறியப்பட்டிருந்தது. இவைகளில் கொலையாளிப் பூச்சி (Assassin bug) என்றொரு தேள் வகை உள்ளது. இவை தனியாகப் பிரிந்து வருகிற தேள் குட்டிகளை சமயம் பார்த்துக் கொன்று தின்று விடுகின்றது. குடும்பத்திலிருந்து பிரிந்து போகிற எந்த உயிரினமும் தனித்து பிழைப்பதெல்லாம் மிக கடினமான ஒன்று தான். அந்த குணத்தை மையமாக வைத்து உருவாகி இருப்பதுதான் தேள் படம்..!
கதை என்னவென்றால் பெற்ற தாயை மதிக்காமல் அவரிடமிருந்து பிரிந்து கோயம் பேட்டில் அடிதடியில் ஈடுபட்டு வாழ்க்கை ஓட்டும் பிரபுதேவா திடீரென திருந்தி தனது தாயுடன் சேர்ந்து வாழ ஆரம்பிக்கிறார். ஆனால் பிரபுதேவாவால் கோயம்பேடு தகராறு ஒன்றில் பாதிக்கப்பட்ட நபர்கள் அவரை பழி வாங்கும் நோக்கில் பிரபுதேவா தாயை கடத்தி கொன்றும் விடுகிறார்கள்.. அதனால் பதட்டமடைவருக்கு அந்த தாயே ஒரு ட்விஸ்டை கொடுக்கிறார் . அதுதான் தேள்
ஹீரோவாக நடித்திருக்கும் பிரபுதேவா, அடியாள் தோற்றத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். ஆர்ப்பாட்டம் இல்லாத இவருடைய நடிப்பு ரசிக்க வைத்திருக்கிறது. அடியாளாகவும், பாசக்காரனாகவும் நடித்து மனதில் பதிகிறார் பிரபுதேவா. நாயகியாக நடித்திருக்கும் சம்யுக்தா ஹெக்டே, டைரக்டர் சொன்னதை செய்திருக்கிறார். இவருடன் பயணிக்கும் யோகி பாபு சிரிப்பு எடுபடவில்லை பாசம் காண்பித்து கதைக்கு வலு சேர்த்திருக்கிறார் நடிகை ஈஸ்வரி ராவ். இவருடைய நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
சி.சத்யாவின் இசையில் அமைந்த தாய்ப்பாசப் பாடல் உருக்குகிறது. பின்னணி இசையிலும் தனிக் கவன் எடுத்து தேளுக்கு தோள் கொடுத்திருக்கிறார். விக்னேஷ் வாசுவின் கேமிராவில் தெரியும் நிறத்தில் படத்தின் தன்மை உணரவைக்கப் படுகிறது. பரபரப்பான மார்க்கெட்டில் அனாயசமாக படம்பிடித்து பாராட்ட வைக்கிறார். அந்தக் காட்சிகளில் இயக்குனரின் சாமர்த்தியமும் தெரிகிறது.
கொரியன் படமான PIETA வின் தழுவலாகவே இதை தமிழில் கொண்டு வருகிறேன் என்று ஹானஸ்டாக சொல்லி புது இயக்குநராக களமிறங்கியுள்ள ஹரிகுமார் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார் என்றே சொல்லலாம்.. அதிலும் நக்கல், எள்ளல், நடனத்துக்கு பேர் போன கோலிவுட்டின் மைக்கேல் ஜாக்சனை வைத்து இப்படி ஒரு ஃபேமிலி செண்டிமெண்ட் மற்றும் ஆக்சன் படத்தை வழங்கி இருக்கும் துணிச்சலை பாராட்டியே ஆக வேண்டும்.
மொத்தத்தில் இந்த தேள் – கவனிக்கத்தக்கது
மார்க் 3 / 5