படவா – விமர்சனம்!

டைரக்டர் கே வி.நந்தா இப்படத்தை படவா என்ற டைட்டிலில் காதல் கலாட்டா கதையாக மட்டுமல்லாமல் கருங்காலி செடிகளால் நம் விவசாயத்துக்கு ஏற்படும் ஆபத்தை பட்டவர்தனமாக கூறி இருப்பதுதான் ஹைலைட். இப்படம் சொல்லியிருக்கும் இயற்கையைப் பாதுகாப்பது விவசாயத்தை மேம்படுத்துவது போன்ற உயரிய . மெசேஜை இளைஞர்கள் முன்னெடுத்தால் வறண்ட பூமி கூட பசுமை புரட்சியில் பளபளக்கும்!
அதாவது ஹீரோ விமல், தனது நண்பர் சூரியுடன் சேர்ந்துக் கொண்டு வெட்டியாக ஊர் சுற்றி வருவதோடு, கிடைக்கும் பொருட்களை திருடி விற்பது, ஊர் மக்களுக்கு தொல்லை கொடுப்பது என்று ஊருக்கே வேப்பங்காயாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் பருவமழை பொய்த்தது, கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு என கிராமமே வறண்ட பூமியாக மாறிவிட, அக்கிராமத்தில் இருப்பவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக அங்குள்ள கே ஜி எஃப் ராமின் செங்கல் சூளைக்கு வேலைக்குச் செல்கின்றனர். இந்நிலையில் கருவேலமரமே தனக்கான முதலீடு என்று அதை வணங்கியும் வருபவர் தான் கே ஜி எஃப் ராம். அக்கிராமத்தைச் சுற்றிலும் கருவேல விதைகளை தூவியும் வருகிறார் ராம். அதே சமயம் விமல் மற்றும் சூரி இருவரின் ஆட்டத்தை பொறுக்க முடியாத மரக்காத்தூர் கிராம மக்கள், விமலை நாடு கடத்த திட்டமிடுகின்றனர். தெரிந்த ஒருவர் மூலமாக கிராம மக்கள் அனைவரும் பணம் செலுத்தி விமலை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைக்கின்றனர். போன சில நாட்களிலே மீண்டும் கிராமத்திற்கு வந்துவிடுகிறார் விமல். கிராமத்திற்குச் சென்றால் அனைவரும் துரத்துவார்களே என்று எண்ணி வந்த விமலுக்கு, மேள தாளத்துடன் மாலை அணிவித்து வரவேற்கின்றனர் கிராம மக்கள். அதன்பிறகுதான் விமலுக்கு தெரியவருகிறது, தனக்கு வெளிநாட்டில் பத்து கோடி ரூபாய் லாட்டரி விழுந்திருக்கிறது என்று ஊரில் பொய்யை பரப்பி வைத்திருக்கிறார்கள் என்று.விமலிடம் பணம் இருப்பதால், அவரையே ஊராட்சி மன்ற தலைவராக்கி விடலாம் என்று ஊர் பெரியவர்கள் முடிவெடுத்து, விமலை ஊராட்சி மன்றத் தலைவராக்கி விடுகிறார்கள்.ஒருகட்டத்தில் விமலின் காதலியான ஸ்ரீதாவிற்கு விமலுக்கு லாட்டரி எதுவும் விழவில்லை என்று உண்மை தெரிந்து விட, விமலிடம் பேசுகிறார் ஸ்ரீதா. அதன்பிறகு விமலிடம் என்ன மாதிரியான மாற்றம் நிகழ்ந்தது.?? விவசாயம் பற்றி டைரக்டர் என்ன பேசுகிறார்.?? கருவேல பூமியாக இருந்த கிராமம் பின் என்ன ஆனது.? என்பதே படவா படத்தின் கதை.
பொறுப்பே இல்லாத திருட்டு பொழைப்பு செய்து உலா வரும் இளைஞன் வேடம் விமலுக்குப் பழக்கப்பட்டதுதான்.அதனால் கிடைத்த கேரக்டரை படு கேஷூவலாக செ ய்து ரசிக்க வைத்து விடுகிறார். கூடவே பொறுப்பான ஊர்த்தலைவராகவும் மிளிர்ந்திருக்கிறார்.காதலியுடனான காட்சிகளிலும் வேறுபாடு காட்டியிருக்கிறார்.
விமலின் ஃப்ரண்டாக நடித்திருக்கும் சூரி, படம் நெடுக சிரிக்க வைக்கிறார்.இவர் இந்த இடத்தை விட்டுவிட்டுப் போனது அவருக்கு எப்படியோ? இரசிகர்களுக்கு ஏமாற்றம்.
நாயகியாக நடித்திருக்கும் புதுமுகம் ஷ்ரிதாராவ் அளவான அழகு.நடிப்பும் கைகூடியிருக்கிறது.வழக்கமான நாயகிகள் போன்ற கதாபாத்திரம் என்றாலும் அதில் தனித்துத் தெரிகிறார் என்பது அவருடைய பலம்.
தேவதர்ஷினி,நமோ நாராயணன் ஆகியோரின் வேடங்களும் அவர்களுடைய நடிப்பும் விமலுக்கும் படத்துக்கும் பலமாக அமைந்திருக்கிறது.
வில்லனாக நடித்திருக்கும் கேஜிஎஃப் ராம், வேடத்தின் கனத்துக்கேற்ப இருக்கிறார்.அவர் அந்த வேடத்தில் நடித்திருப்பதால் கதாபாத்திரத்தின் நம்பகத் தன்மை கூடியிருக்கிறது.
மியூசிக் ட்ைரக்ட ஜான் பீட்டரின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
கேமராமேன் ராமலிங்கம் கமர்ஷியல் பார்வையோடு காட்சிகளை படமாக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளை கலர்புல்லாகவும், ரசிக்கும்படியாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் கே.வி.நந்தா வழக்கமான மற்றும் அதர பழசான கதையை முழுக்க முழுக்க நகைச்சுவையாகவும், கமர்ஷியலாகவும் டைரக்ட் செய்திருந்தாலும், எடிட்டரை வேலை செய்ய விடாமல் வம்பு செய்திருப்பது அப்பட்டமாகி படவா இமேஜை ஸ்பாயில் ஆக்கி விட்டார்.
ஆனாலும் நம் வளம் முகுந்த நாட்டில் அந்நியர்களால் பரப்பப்பட்ட சீமைக்கருவேல மரங்கள் அதன் பாதிப்புகள் ஆகியனவற்றைப் பற்றிச் சுட்டிக்காட்டி அதைக் கடந்து வருவதற்கான வழிமுறைகளையும் சொல்லியிருப்பதற்காகவே தனி மார்க் வழங்கலாம்!
மார்க் 3.25/5