அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா கோலாகலம்!

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா கோலாகலம்!

த்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பாஜக 2024 தேர்தல் ஸ்டண்ட் கார்ட்டாக பிரம்மாண்ட கட்டப்பட்டு வரும். கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது இதற்காக பிரதமர் நரேந்திர மோடி இதற்காக கடந்த 11 நாட்களாக விரதம் இருந்து வந்தார். அத்துடன் நாட்டில் உள்ள முக்கிய தலங்களுக்கும் சென்று வழிபாடு செய்தார். பலவித முன்னேற்பாடுகளுடன் இன்று நண்பகல் 12.20 மணிக்கு கோயில் கருவறையில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில், முதல்முறையாக பிரதமர் மோடி தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தினார். ராமர் சிலைக்கு தேங்காய், பழங்கள் படைத்து பிரதமர் மோடி வழிபாடு செய்தார். மலர்கள், தங்க ஆபரணங்களால் பால ராமர் சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் இந்த அயோத்தி கும்பாபிஷேக விழா,பல்வேறு ஆலயங்களிலும், பொதுஇடங்களிலும் நேரலையில் திரையிடப்பட்டது. பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர்.

முன்னதாக ரமர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று காலை 10 மணிக்கு மங்கல இசையுடன் விழா தொடங்கியது. நாடு முழுவதும் இருந்து வந்துள்ள பிரபல கலைஞர்கள் பங்கேற்று தமிழக பாரம்பரிய இசைக் கருவிகளான தவில், நாகஸ்வரம், மிருதங்கம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிககளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை இசைத்தனர். பிரதமர் நரேந்திர மோடி காலை 11 மணியளவில் விமான மூலம் அயோத்தி நகர் வந்து சேர்ந்தார். இந்த விழாவிற்கு அனுமதிக்கப்பட்டிருந்த 7,000-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் முன்னதாக கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு அமர வைக்கப்பட்டனர். பட்டு வேட்டி சட்டையில் கோயிலுக்குள் வந்த மோடி தனது கையில் குழந்தை ராமருக்கான வஸ்திரம் மற்றும் சிறிய குடை ஆகியவற்றை ஏந்தி வந்தார்.

கருவறை அருகே உள்ளே வந்த மோடியுடன், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உடன் அமர்ந்தார். மோடி சங்கல்பம் செய்து கொண்டார். சரியாக 12.20 மணிக்கு கோயிலின் கருவறைக்குள் நுழைந்த மோடி மற்றும் மோகன் பகவத் இருவரும் குழந்தை ராமர் சிலையின் எதிர்புறம் அமர்ந்து அங்கு நடைபெற்ற பூஜைகளில் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து குழந்தை ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யும் பூஜைகள் நடைபெற்றது. அங்கு கோயில் பூசாரிகள் கூறிய மந்திரங்களை பிரதமர் மோடியும், மோகன் பகவத்தும் உச்சரித்தனர். பிற்பகல் 12.30 மணியளவில் பிரதமர் மோடி தனது கையில் இருந்த பூக்களை ராமர் பாதத்தின் மீது தூவி பிரதிஷ்டை பணிகளை நிறைவு செய்தார். அவருடன் மோகன் பகவத் மற்றும் கோயில் பூசாரிகள் ராமர் பாதத்தில் பூக்களைச் சமர்ப்பித்தனர்.

இதன்மூலம் குழந்தை ராமர் சிலை பக்தர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. குழந்தை ராமரின் சிலையின் கால்களை தொட்டு வணங்கி மனமுருக பிரதமர் மோடி வேண்டிக் கொண்டார். இதைத் தொடர்ந்து, கோயில் வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட தலைவர்களும் இதில் பங்கேற்றனர். பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை சிறப்பு விருந்தினர்கள் ராமரை தரிசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயில் திறப்பு விழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வந்துள்ளனர். அவர்கள் இன்று அயோத்தி நகரில் நுழைய அனுமதி வழங்கப் படவில்லை. அயோத்தியின் சரயு நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள், நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி ஓட்டல், விடுதிகளில் அவர்கள் தங்கியுள்ளனர். திறப்பு விழா முடிந்த பிறகு, நாளை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அடிசினல் ரிப்போர்ட்~

கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த புகழ்பெற்ற சிற்பி அருண் யோகிராஜ் கலை நுணுக்கத்துடன் வடிவமைத்த ‘ராம் லல்லா’ (குழந்தை ராமர்) ராமர் சிலைதான், கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கேதார்நாத்தில் ஆதிசங்கராச்சாரியார், டெல்லியில் இந்தியா கேட் அருகே சுபாஷ் சந்திரபோஸ் சிலை ஆகியவற்றை கலை நயத்துடன் வடிவமைத்து புகழ்பெற்றவர் அருண் யோகிராஜ். தற்போது, பகவான் ராமரின் தெய்வீக பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்தும் மூன்று சிற்பிகளில் ஒருவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அருண் யோகிராஜ் புகழ்பெற்ற சிற்பிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை யோகிராஜும் ஒரு திறமையான சிற்பி. அருண் யோகிராஜின் தாத்தா பசவண்ணா ஷில்பி, மைசூர் மன்னரால் ஆதரிக்கப்பட்டவர். எம்பிஏ பட்டம் பெற்ற பிறகு, அருண் யோகிராஜ் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்னர் தனது ஆர்வமான சிற்பி பணி காரணமாக 2008ம் ஆண்டில் தனியார் நிறுவன வேலையை கைவிட்டு, சிற்பி பணியில் முழு மூச்சாக இறங்கினார்

தான் வடிவமைத்த ராமர் சிலை மூலவர் சிலை குறித்து அருண் யோகிராஜ் கூறுகையில், “ராம் லல்லா சிலையை செதுக்க நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று சிற்பிகளில் நானும் ஒருவன் என்பதி பெருமிதமே.. இந்த சிலை ஒரு குழந்தையின் உருவமாக இருக்க வேண்டும். அதுவும் தெய்வீகமானது. ஏனெனில் அது கடவுள் அவதாரத்தின் சிலை. அதைப் பார்க்கும் மக்கள் தெய்வீகத்தை உணர வேண்டும். குழந்தை போன்ற முகத்துடன் தெய்வீக அம்சத்தையும் மனதில் வைத்து, சுமார் ஆறு முதல் ஏழு மாதங்களுக்கு முன்பு எனது பணியைத் தொடங்கினேன். இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சிலை தேர்வைவிட, மக்கள் அதைப் பாராட்ட வேண்டும். அப்போதுதான் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்” என்றார்

error: Content is protected !!