32°C
விளம்பரம்
Advertisement

உரிய வயதில் திருமணம் செய்து கொள்வோரை பஞ்சாயத்து பிரிப்பதா? சுப்ரீம் கோர்ட் காட்டம்!

admin சேலம் Published: January 17, 2018 3 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




நம் சக மனிதர்கள் பெரும்பாலும் தமது அடையாளத்துக்கு உள்ளேயே திருமணம் செய்து கொள்கின்றனர். ஒரே மதம், ஒரே இனம், ஒரே மொழி, ஒரே சாதி, ஒரே வாழிடம் – என்கிற அடிப்படையில் திருமணம் செய்துகொள்வது தான் மிக அதிகமாக நிகழ்கிறது.  பன்னாட்டு  மனித உரிமைச் சட்டம் கூட ‘யாரும் யாரையும் திருமணம் செய்யலாம். அதற்கு மணமக்களின் பரஸ்பர சம்மதம் போதுமானது’ (Right to Marriage and Family) என்று கூறினாலும் – மிக முன்னேறிய நாடுகளில் கூட, பெரும்பாலான திருமணங்கள் மத, இன அடையாளங்களைத் தாண்டி நடப்பது இல்லை. உலகின் மிக புரட்சிகரமான நாடான அமெரிக்காவில், 2008 ஆம் ஆண்டின் கணக்கெ டுப்பின் படி, 60% மக்கள் தமது அடையாளத்துக்கு வெளியே கலப்புத் திருமணத்தை ஏற்பதாகக் கூறியுள்ளனர். ஆனால், உண்மையில் வெறும் 8% அமெரிக்கர்கள் மட்டுமே கலப்புத் திருமணம் செய்திருந்தனர் (கலப்புத் திருமணம் என தமது அடையாளத்துக்கு வெளியே நடக்கும் திருமணங்களை குறிப்பிடுகிறார்கள்). அதே சமயம் ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் காப் பஞ்சாயத்து எனப்படும் கட்டப் பஞ்சாயத்து செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கட்டப் பஞ்சாயத்து செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இவை, எந்தப் பிரச்னைக்கும் நீதிமன்றத்தை நாடாமல் தாங்களாகவே விசாரித்துத் தீர்ப்பை வழங்குகின்றன. வடஇந்தியாவில் ஒரு சில காப் பஞ்சாயத்துகள் பெண்கள் செல்போன் வைத்திருக்கக் கூடாது, ஜீன்ஸ் அணியக் கூடாது போன்ற உத்தரவுகளைப் பிறப்பித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. சாதி மாறி திருமணம் செய்பவர்களை மிரட்டுவது, அவர்கள்மீது தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களில் இவை ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், ‘சக்தி வாகினி’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமானது 2010இல் உச்ச நீதிமன்றத்தில் காப் பஞ்சாயத்துகளுக்கு எதிராகப் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இத்தகைய கிராமப் பஞ்சாயத்துகளின் வன்முறைகளிலிருந்து பெண்களைக் காக்க, கண்காணிக்க உச்ச நீதிமன்றமே ஏதாவது வழிமுறையைச் சொல்ல வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தது. இதை விசாரித்த உச்ச நீதி மன்றம் சாதி மாறி திருமணம் செய்த தம்பதிகளைத் தாக்குவது சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

அதாவது, வெவ்வேறு சாதியைச் சேர்ந்த திருமண வயதை எட்டிய ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், அவர்களை கட்டப்பஞ்சாயத்து, சாதிஅமைப்பு பஞ்சாயத்து, ஊர் பஞ்சாயத்து என்ற பெயரில் தாக்குவது சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிலும் திருமண வயதை எட்டிய ஓர் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதை ஊர் பஞ்சாயத்தோ, தனிநபரோ அல்லது இந்த சமூகமோ கேள்வி எழுப்ப முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது. அத்துடன், சாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் இளம் தம்பதிகள் கவுரவ கொலை செய்யப்படுவதை தடுக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆலோசகர் ராஜூ ராமச்சந்திரன் அளித்த பரிந்துரைகள் மீது மத்திய அரசின் நிலைப்பாட்டையும் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்