ஊடகவியலாளர்கள் மீது தேசத் துரோகக் குற்றத்தின் கீழான வழக்கு!- பிரஸ் கிளப் கண்டனம்!

ஊடகவியலாளர்கள் மீது தேசத் துரோகக் குற்றத்தின் கீழான வழக்கு!- பிரஸ் கிளப் கண்டனம்!

ஊடகவியலாளர்கள் மீது தேசத் துரோகக் குற்றத்தின் கீழான வழக்குகளுக்கு டெல்லி பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் எஸ்.கே. பாந்த்தே மற்றும் பொதுச் செயலாளர் சுஜாதா மாதோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியின் எல்லையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது இரவும் பகலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டத்தை, அவர்களுடன் நின்று துணிச்சலுடன் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் அனைத்து இதழாளர் களுக்கும், டெல்லி பத்திரிகையாளர் சங்கம் தன் வீர வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் அரசாங்கத்தாலும், இதரர்களாலும் ஊடகவியலாளர்கள் மீது பன்முனைத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருப்பதற்கு மிகவும் வருந்துகிறோம்.

விவசாயிகள் போராட்டங்கள் குறித்துச் செய்திகள் வெளியிட்டமைக்காக, பல பத்திரிகை ஆசிரியர்கள்/உரிமையாளர்கள் உட்பட ஆறு இதழாளர்கள் மீது தேசத்துரோகக் குற்றப்பிரிவு உட்பட பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைகிறோம். நேஹா தீட்சித் என்னும் செய்தியாளரின் வீட்டைத் தாக்கிட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்தும் அவருக்கு அடிக்கடி மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவது குறித்தும் அதிர்ச்சி அடைகிறோம். மேலும், விவசாயி களால் பெண் செய்தியாளர்கள் துன்புறுத்தப்பட்டதாக வந்துள்ள பொய்ச் செய்திகளும் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

ராஜ்தீப் சர்தேசாய், மிருணாள் பாந்த்தே, ‘நேஷனல் ஹெரால்டு’ ஆசிரியர் ஜாஃபர் ஆகா, ‘கேரவன்’ இதழின் ஆசிரியர்கள் வினோத் ஜோஸ் மற்றும் ஆனந்த் நாத் மற்றும் ஆசிரியர்/பிரசுரிப்பவரான பரேஷ் நாத் ஆகியோர் மீதும் தேசத் துரோகக் குற்றப் பிரிவான இந்தியத் தண்டனைச் சட்டம் 124 – ஏ பிரிவின் கீழும் மற்றும் இ.த.ச. 153-ஏ, 153-பி, 295-ஏ, 298, 504, 506, 505(2), 34 மற்றும் 120-பி ஆகிய பிரிவுகளின் கீழும் மற்றும் தகவல் தொழில் நுட்பச் சட்டம் 66 ஆகிய பிரிவின் கீழும் வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. இப்பிரிவுகள் இரு குழுக்களுக்கு இடையே விரோதத்தை அதிகரிப்பது தொடர்பானதும், மத உணர்வுகளைப் புண்படுத்துவது தொடர்பானதும், அமைதியைச் சீர்குலைப்பது தொடர்பானதும், குற்றமுறு மிரட்டல், குற்றமுறு சதி, அழும்பு செய்தல் போன்ற குற்றங்களாகும்.

குஜராத் மாநிலத்தில் உள்ள கீழமை நீதிமன்றம் ஒன்று, அதானி குழுமத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்ட செய்தியாளர் பரஞ்சய் குஹா தாகுர்தாவிற்கு எதிராகப் பிணை விடாப் பிடியாணை (Non Bailable Warrant) பிறப்பித்திருக்கிறது. விருதினைப் பெற்ற செய்தியாளரான நேஹா தீட்சித் தன் மீது திரும்பத் திரும்பப் பாலியல் தாக்குதல் தொடுக்கப்படும் என்றும், தன் மீது அமிலம் வீசப்படும் என்றும், தான் கொலை செய்யப்படுவேன் என்றும் தனக்கு மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பது குறித்தும், ஜனவரி 25 அன்று தன் வீட்டைத் தாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது தொடர்பாகவும் காவல்துறையினர் இடம் புகார் செய்திருக்கிறார். இவ்வாறு ஒரு பக்கம் துணிவுடன் செயல்படும் செய்தியாளர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படும் அதே சமயத்தில், விவசாயிகள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் அச்செய்திகளை அனுப்பிடும் பெண் செய்தியாளர் களை இழிவுபடுத்தும் விதத்தில் ட்விட்டரில் பொய்ச் செய்திகள் வெளியிடப்படுகின்றன.

இதழாளர்களுக்கு எதிரான வழக்குகள் உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று தில்லி பத்திரிகையாளர் சங்கம் கோருகிறது. இதழாளர்கள் தங்கள் வேலைகளைச் செய்து கொண்டிருக்கும்போது அவர்கள் மீது தான்தோன்றித் தனமான முறையிலான குற்றச் சாட்டுகளைப் பதிவு செய்வது, கைது செய்வது, வழக்குத் தொடுப்பது போன்றவற்றிலிருந்து, ஊடகவியலாளர்களைப் பாதுகாத்திட சிறப்புச் சட்டம் ஒன்று கொண்டு வரப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை மீளவும் வலியுறுத்துகிறோம்.

இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் உள்ள தேசத் துரோகக் குற்றப்பிரிவு உட்பட கொடூரமான, கொடுமையான சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். செய்தியாளர் நேஹா தீட்சித்திற்கு எதிராக அச்சுறுத்தல்கள் விடுக்கும் கயவர்கள் குறித்து உடனடியாகப் புலனாய்வு மேற்கொண்டு, கயவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

இதே போன்று ட்விட்டர் நிறுவனமும், தங்கள் வலைத்தளங்களில் பொய்ச் செய்திகளைப் பதிவேற்றம் செய்வோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.’இவ்வாறு டெல்லி பத்திரிகையாளர் சங்கம் கோரியுள்ளது.

Related Posts