நான் பாஜக & காங்கிரஸ் முதல்வர்! – கெஜ்ரிவால் பேச்சு!

நான் பாஜக & காங்கிரஸ் முதல்வர்! – கெஜ்ரிவால் பேச்சு!

டெல்லியில் உள்ள பல்வேறு பள்ளி மாணவர்கள், துப்புரவுத் தொழிலாளிகள், டாக்டர்கள், பஸ் டிரைவர், ஆட்டோ டிரைவர், இன்ஜினீயர், ஆர்கிடெக், பஸ் கண்டக்டர்கள், தீயணைப்புத்துறை வீரர்கள், ஆசிரியர்கள், பியூன்கள் எனச் சமுகத்தின் பல மட்ட சாமானிய மக்களுடன் அடிசினலா `குட்டி பேபிமப்ளர்’ மேன் என்ற ட்ரெண்டிங் ஆன பொடியன் முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், மூன்றாவது முறையாக டெல்லி முதலமைச்சராக இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்றார்.

டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில், ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது. பாஜக 8 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால், முதலமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்டார். கெஜ்ரிவாலுடன் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மணீஷ் சிசோடியா, கோபால் ராய், சத்யேந்தர் ஜெயின், கைலாஷ் கெலாட், இம்ரான் உசைன், ராஜேந்திர கவுதம் ஆகிய 6 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்களுக்கு துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்கள் முன்னிலையில் பதவியேற்பதாக கூறினார் கெஜ்ரிவால். டெல்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் இன்று பிற்பகல் 12:00 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அவர் பிரத்யேக அழைப்பின் பேரில் ஆசிரியா்கள், மருத்துவர்கள், துப்புரவுத் தொழிலாளா்கள் உள்பட 50 பேர் கலந்து கொண்டனர்.

இதை அடுத்து கூடியிருந்த மக்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “இந்த வெற்றி என்னுடையது அல்ல; மொத்த டெல்லி மக்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வெற்றி. கடந்த ஐந்து ஆண்டுகளில் டெல்லி மக்கள் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தருவதே எங்களின் ஒரே முயற்சியாக இருந்தது. கெஜ்ரிவால் அனைத்தையும் இலவசமாக வழங்குவதாகச் சிலர் கூறுகிறார்கள். உலகில் உள்ள ஒவ்வொரு விலைமதிப்பு மிக்க விஷயமும் இலவசம் என்பதை இயற்கை உறுதிப்படுத்தியுள்ளது.

அது தாயின் அன்பு, தந்தையின் ஆசீர்வாதம் போன்ற எதுவாகவும் இருக்கலாம். எனவே, கெஜ்ரி வால் தனது மக்களை அதிகமாக நேசிக்கிறார். அதனால் அவர்களுக்கு இந்த அன்பு இலவசம். என் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தேன், அவர் வேறு வேலைகளில் பிஸியாக இருக்கலாம். அதனால் இங்கு வரவில்லை. ஆனால் டெல்லியை அபிவிருத்தி செய்வதற்கும் முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கும் பிரதமர் மற்றும் மத்திய அரசிடமிருந்து ஆசி பெற விரும்புகிறேன்.

தேர்தலின் போது சிலர் ஆம் ஆத்மிக்கு வாக்களித்தனர். சிலர் பா.ஜ.கவுக்கும் சிலர் காங்கிரஸுக்கும் வாக்களித்தனர். ஆனால் இன்று நான் மொத்த டெல்லியின் முதல்வராகத்தான் பதவியேற்றுக் கொண்டுள்ளேன். நான் ஆம் ஆத்மியின் முதல்வர், பா.ஜ.கவின் முதல்வர், காங்கிரஸின் முதல்வர் மற்றும் அனைத்துக் கட்சிகளுக்கும் முதல்வர். தேர்தல் முடிந்துவிட்டது, நீங்கள் யாருக்கு வாக்களித்திருந்தாலும் அதைப் பற்றிக் கவலையில்லை. தற்போது நீங்கள் அனைவரும் எனது குடும்பத்தினர். உங்கள் அனைவருக்காகவும் உழைக்கத் தயாராக உள்ளேன்” என்று பேசினார்

இந்த விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், வாரணாசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடி வரவில்லை. கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் கெஜ்ரிவால் தோற்றத்தில் 100-க்கும் மேற்பட்ட குட்டி கெஜ்ரிவால்கள் சிகப்பு வண்ண மப்ளர் அணிந்து, ஆம் ஆத்மி தொப்பி, கண்ணாடி அணிந்து வெற்றி சின்னத்தை காண்பித்து மைதானத்தில் வலம் வந்தது விழாவில் உற்சாகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!