கல்வியின் அவசியத்தைப் பேசும் அருள்நிதியின் ‘அருள்வான்’!

கல்வியின் அவசியத்தைப் பேசும் அருள்நிதியின் ‘அருள்வான்’!

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி.சரவணன் பிரம்மாண்ட தயாரிப்பில், ‘தேன்’ பட இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அருள்வான்’. அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன் மற்றும் பேபி கிருத்திகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சக்திவேலன் இப்படத்தை வெளியிடுகிறார். எதிர்வரும் ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தின் விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு தங்களின் மறக்க முடியாத அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

சொர்க்கம் போன்ற மலைப்பகுதியில் ‘திக் திக்’ படப்பிடிப்பு

படப்பிடிப்பு தளத்தின் சவால்கள் குறித்து நடிகர் காளி வெங்கட் பேசுகையில், “மனிதர்களும் மிருகங்களும் நடமாடக் கடினமான மலைப்பகுதியில் தான் படப்பிடிப்பு நடைபெற்றது. ஒரு நாள் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தாக்கு பகுதிக்கு ஒவ்வொரு நடிகர்களும் தங்களின் சொந்த ‘டென்ட்’டைத் தூக்கிக்கொண்டு நடந்து சென்று, அங்கு தங்கி நடித்தோம். செங்குத்தான மலைப்பாதையில் நடக்கும்போது நெஞ்சு ‘திக் திக்’ என்று இருக்கும். ஆனால், காட்சிகளைப் பார்த்தபோது அத்தனை சோர்வும் பறந்துவிட்டது. ஒளிப்பதிவாளர் சுகுமார் காட்டின் அழகியலை வேறொரு கோணத்தில் கொண்டு வந்திருக்கிறார். படத்தின் எல்லா படப்பிடிப்பு தளங்களும் மேகத்திற்கு மேலே தான் இருந்தது. அதாவது சொர்க்கத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது போல் இருந்தது. எல்லாவற்றையும் விட, இது அடிப்படைக் கல்வியின் அவசியத்தைப் பேசும் மிக முக்கியமான கதை” என்றார்.

வரைபடத்திலேயே இல்லாத இடத்தில் ஒரு வாழ்க்கை: ரம்யா பாண்டியன்

நடிகை ரம்யா பாண்டியன் பேசுகையில், “இனி கிராமத்துக் கதைகளில் நடிக்க வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால், கல்வி கற்பதற்கான வாய்ப்புகளோ வசதிகளோ இல்லாத ஒரு மக்கள் கூட்டம் நம் மண்ணிலேயே வாழ்கிறார்கள் என்று கேட்டதும் இதில் என் பங்களிப்பு இருக்க வேண்டும் என உறுதியளித்தேன். வரைபடத்திலேயே இல்லாத, மொபைல் சிக்னல் கூட கிடைக்காத ஒரு காட்டுப் பகுதியில் தான் நடித்தோம். அங்குள்ள மக்களுடன் பழகிய நாட்களை மறக்க முடியாது. சக நடிகர் ஆரவ் நடுங்கும் குளிரில் அருவியின் கீழே உடல் முழுவதும் சந்தனம் பூசிக்கொண்டு நடித்த அர்ப்பணிப்பு எங்களை வியக்க வைத்தது. அருள்நிதி சார் கதைகளைத் தேர்வு செய்வதில் எப்போதுமே தனித்துவம் மிக்கவர். அவர் இருக்கிறார் என்றாலே படம் நன்றாக இருக்கும் என்று என் நண்பர்கள் கூறினார்கள்” எனப் நெகிழ்ந்தார்.

தேசிய விருது நிச்சயம்: இயக்குநர் பெருமிதம்

இயக்குநர் கணேஷ் விநாயகன் பேசுகையில், “தயாரிப்பாளர் எஸ்.ஜி.சரவணன் சினிமா மீது பெரும் காதல் கொண்டவர். ‘தேன்’ படத்திற்குப் பிறகு எடிட்டர் லாரன்ஸ் கிஷோருக்கு இந்தப் படத்திலும் மாநில விருது கிடைக்க வாய்ப்புள்ளது. இந்தத் திரைப்படம் ஆர்ட் ஃபிலிமும் இல்லை, கமர்சியல் ஃபிலிமும் இல்லை. இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு எதார்த்த சினிமா. படத்தின் கதை பேபி கிருத்திகாவின் பார்வையில் தான் நகரும். சாலை வசதியே இல்லாத காட்டில், விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியில் 18 நாட்கள் தங்கி நடித்த கிருத்திகாவிற்கு நிச்சயமாகத் தேசிய விருது கிடைக்கும். இப்படத்தின் முற்பகுதியில் உரிமைகளுக்காகப் போராடும் போராளியாக ஆரவ்வும், இரண்டாம் பகுதியில் மாவட்ட ஆட்சியராக அருள்நிதியும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷின் இசை படத்திற்குப் பெரும் பலம்” என்றார்.

5 நாள் கால்ஷீட் 20 நாளாக மாறிய கதை: அருள்நிதி, ஆரவ்

நடிகர் அருள்நிதி பேசுகையில், “இயக்குநர் ஐந்து நாட்கள் கால்ஷீட் கேட்டார். ஆனால் படப்பிடிப்பு தளத்திற்குச் சென்ற பிறகு அது 20 நாட்களாக நீடித்தது. இப்படத்தில் முத்துவேல் என்ற மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். குழந்தைகளுக்கான கல்வியின் அவசியத்தைப் பேசும் இப்படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார். நடிகர் ஆரவ் பேசுகையில், “என் திரைப்பயணத்தில் இது போன்றதொரு கதாபாத்திரம் மீண்டும் அமையுமா என்று தெரியாது. அதனாலேயே உடனே ஒப்புக்கொண்டேன்” என்றார்.

விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில், “அரசுப் பள்ளியில் கல்வி பயில வாய்ப்பு கிடைக்காத விளிம்பு நிலை மக்களைப் பற்றிய அரசியல் புரிதலுடன், 2000-ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் கதையாக இது செதுக்கப்பட்டுள்ளது. இன்றைய 2026 சூழலில் இத்தகைய படங்களை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறேன்” என்று வாழ்த்தினார்.