32°C
விளம்பரம்
Advertisement

தமிழகமெங்கும் புறாக் கூண்டுகள் போல செயற்கை கருத்தரிப்பு மையங்கள் !

admin சேலம் Published: May 13, 2017 9 நிமிட வாசிப்பு எடிட்டர் ஏரியா
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



மேரி கிஷோர் தம்பதியினருக்கு ஒரு தீராத கவலை. அந்தக் கவலை அந்தத் தம்பதியினருக்கு மட்டும் கிடையாது. உலகை அச்சுறுத்தும் கவலை அது. உலக மக்கள் தொகையில் பதினைந்து சதவீதம் பேருக்கு அந்தக் கவலை இருக்கிறது. இந்தியளவில் பார்த்தாலும் இதே அளவிற்குத்தான் கவலை கொள்கிற கூட்டம் இருக்கலாம். ஆனாலும் இந்தியளவில் இப்போதுதான் அந்தக் கவலை மெல்ல எல்லா திக்குகளிலும் பரவிக் கொண்டிருக்கிறது. குழந்தையின்மை என்கிற கவலைதான் அது.

edit may 13

குழந்தையின்மை என்பது வெறும் குறைபாடு மட்டும்தான் என்கிற புரிதல் இப்போதுதான் வந்திருக்கிறது. ஆனால் எத்தனையோ போராட்டங்கள், தெளிவில்லாத சமூக அமைப்பின் ஏளனங்கள், சந்தேகங்கள் நிரம்பிய குடும்ப வாழ்வு இவற்றையெல்லாம் கடந்துதான் இந்தத் தன்னிறைவான இடத்தை அடையவே முடிந்திருக்கிறது. உதாரணமாக பேபி கிஷோர் தம்பதியினரையே எடுத்துக் கொள்வோமே? இருவருக்கும் 35 வயதில்தான் திருமணம் ஆகியிருக்கிறது.

ஏற்கனவே தாமதமான திருமணம். இத்தனை வயதான பின்னரும் குழந்தையில்லை என்கிற அம்சமும் வந்து சேர்ந்தால் என்ன ஆவார்கள்? அதுதான் அவர்களுக்கும் நடந்திருக்கிறது. வசைகள், கிண்டல்கள், ஏளனங்கள் இவற்றையெல்லாம் கடந்தே அவர்கள் இன்னொரு கட்டத்திற்கு நகர முடிந்திருக்கிறது. இந்த வசைகளில் இருந்து தப்பிப்பதற்காக வாடகைக் குழந்தை முறைக்கோ தத்தெடுக்கும் முறைக்கோ போய்விடலாமா என யோசித்திருக்கிறார்கள். எல்லா பக்கங்களிலும் அவர்களைக் குழப்பங்கள் சூழ்ந்திருந்த காலகட்டமாக அது இருந்தது என வர்ணிக்கிறார்கள். எதைப் பார்த்தாலும் பயம் தயக்கம் என இனம்புரியாத மனவேதனைகளுக்கு அவர்கள் ஆட்பட்டிருந்தனராம். செயற்கை முறையில் கருத்தரிப்பதற்கு உடல்ரீதியிலாக பேபி தயாராக இருக்கிறார் என்கிற புரிதலும் அவர்களுக்கு எல்லா முறைகளையும் பரிசோதித்த பிறகுதான் வந்திருக்கிறது.

இறுதியாக செயற்கை முறையில் கருத்தரிக்க வாய்ப்பு இருக்கிறது என்கிற தெளிவான முடிவிற்கு அவர்கள் வந்த போது பேபிக்கு 39 வயது. 39 வயதில் இது சாத்தியமா என அவர்கள் கேள்வி எழுப்பிய போது மருத்துவ உலகம் தயாராக அதற்கான நேர்மறையான பதிலையும் வைத்திருந்தது.சென்னையைச் சேர்ந்த மேரி 63 வயதில் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொண்டார். அதுதான் இந்தியளவில் இந்த முறையில் குழந்தை பெற்றுக் கொண்டதில் அதிக வயது. மேரிக்காவது இந்த வயதில் ஒரு குழந்தைதான் இந்த முறையில் பிறந்தது. தமிழகத்தைச் சேர்ந்த பிருந்தாவிற்கு இதே முறையில் இரட்டைக் குழந்தை பிறந்த போது வயது 56. லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இந்த இரட்டை குழந்தைகள் பிறந்த சாதனை பதிவாகியிருக்கிறது.

இந்தத் தகவல்கள் பேபி மற்றும் கிஷோர் தம்பதியினருக்கு நம்பிக்கையைத் தந்தன. துணிந்து களத்தில் இறங்கி விட்டார்கள். அவர்கள் நம்பிக்கை பொய்க்கவில்லை. முத்து முத்தான இரண்டு குழந்தைகள் ஒரே பிரசவத்தில். ஆணொன்று பெண்ணொன்று என அவர்கள் குடும்பத்தில் நிரந்தரமான சந்தோஷம் குடிகொண்டு விட்டது. இந்த சந்தோஷத்திற்கு அவர்கள் கொடுத்த விலை அதிகம்.இதைப் போல எல்லோரும் களத்தில் குதிப்பதற்கு பல்வேறு காரணங்கள் மாற்றவே இயலாத முட்டுக் கட்டைகளாக இருக்கின்றன.

குழந்தையில்லை என்று மரத்தைச் சுற்றச் சொல்கிறார்கள். பரிகாரங்கள் என்கிற பெயரில் கட்டிய சேலையில் லிட்டர் லிட்டராக தண்ணீரை ஊற்றி கோயில் வாசலில் உருளச் சொல்கிறார்கள். உச்சகட்டமாக மண் சோறெல்லாம் சாப்பிடுகிறார்கள். வலிக்க வலிக்க அலகு குத்திக் கொள்பவர்களும் ஏராளம். எல்லா மதங்கள் அதனதன் எல்லைகளுக்குள் நின்று இதுமாதிரியான பரிகாரங்களை வைத்திருக்கின்றன. வாரிசு ஒன்றை பெற்றுக் கொடுக்க வக்கில்லை என்று சொல்லி ஆசிட் வார்த்தைகளை ஊற்றி கேஸ் அடுப்பை பற்ற வைத்துவிடுகிறார்கள்.

இளம்பெண் தற்கொலை என ஒருநாளைக்கு ஓருநூறு செய்திகளாவது வருகின்றன. தற்கொலையில் பாதிச் சாவுகள் குழந்தையில்லை என்கிற காரணத்திற்காகவே நடக்கின்றன என்பதை புள்ளி விபரங்கள் உணர்த்துகின்றன. இந்த முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு முன்பு பல வருடங்கள் தீவிர மன அழுத்த நோய்க்கு ஆட்பட்டிருந்தேன் எனப் பல பெண்கள் வாக்குமூலம் தருவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதில் பயன்பெற்றவர்கள் உண்மையில் லண்டனைச் சேர்ந்த லூயிஸ் பிரவுணிற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் அவர்தான் 1978 ஆம் வருடம் வெற்றிகரமாக இந்த மருத்துவ முறையை உலகிற்குத் தாரை வார்த்தார். இதைக் கண்டுபிடிப்பதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்து அது குறித்த ஆராய்ச்சிகளைச் செய்திருக்கிறார். அதை வெற்றிகரமாக நடத்திக் காட்டவும் செய்தார். அதைத்தான் இன்றளவும் உலகம் முழுக்கவும் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை இதுவும் 80களில் இருந்து மருத்துவ ஆய்வில் இருந்த விஷயம்தான். ஆனால் அது விலக்கப்பட்ட கனியாக அப்போது இருந்தது. மக்கள் அதை ஒரு தீண்டத்தகாத விஷயமாகவே ஆரம்பத்தில் பார்த்தார்கள். தமிழகத்தில் ஒரு புள்ளி விபரத்தை எடுத்துப் பார்த்தால் விவகாரத்திற்கான அதிக சதவீதக் காரணமும் குழந்தையின்மை என்பதில் உருவாவதுதான். ஆரம்பத்தில் இருந்தே குழந்தையின்மை பிரச்சினை என்பது பெண்களோடு சம்பந்தப்படுத்தியே புரிந்து கொள்ளப்பட்டது.
குழந்தையில்லாததற்கு பெண்கள் மட்டுமே முழுமுதல் காரணம் என்று அழுத்தமாக ஆணி அடிக்கப்பட்டது. இருபாலருக்கும் பிரச்சினை இருக்கலாம் என்கிற புரிதலுக்கு தமிழ்ச் சமூகம் வந்து சேர்வதற்கே லூயிஸ் ஆரம்பித்த பிறகிலிருந்து அடுத்த முப்பது வருடங்கள் பயணப்பட்டு வர வேண்டியிருந்தது. அது இப்போதும் தொடர்கிறது என்பதுதான் இதிலுள்ள மருத்துவ அறிவு விநோதம்.

இரவு நேரங்களில் பாலியல் சம்பந்தமான நிகழ்ச்சிகள் மற்றும் குழந்தை பிறப்பு சம்பந்தமான சந்தேகங்களை நீக்கும்படியான நிகழ்ச்சிகள் வரும்போதெல்லாம் அவற்றை கிண்டல் கண்கொண்டு பார்க்கிறோம். ஆனால் உலக அரங்கில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நேர்மறையாகப் பார்க்கிறார்கள் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். அதைப் போல பேபி தம்பதியினர் போன்றவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சி ஒன்றில் சொன்ன கருத்தின் அடிப்படையிலேயே கவரப்பட்டார்கள்.

இந்த விழிப்புணர்வு இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? உண்மையில் இங்கு விழிப்புணர்வு என்பதே கிடையாது என இந்தத் துறையில் உள்ள மருத்துவர்கள் சொல்கிறார்கள்.மக்கள் தொகைக் கட்டுப்பாடு குறித்து தீவிரமான விளம்பரங்களை முன்னெடுக்கும் அரசு குழந்தையின்மையையும் ஒரு பிரச்சினையாக முன்னிறுத்தி பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். நாள்பட்ட நோய் என்பது போல நாள் கடந்து நடக்கும் திருமணங்களையும் மாறி வரும் வாழ்க்கை முறைகளையும் குழந்தையின்மை பிரச்சினைக்கு காரணங்களாக முன்னிறுத்துகிறார்கள். தத்தெடுப்பதில் ஆயிரம் சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன. தவிர தத்தெடுப்பது என்பதை கௌரவக் குறைச்சலாகப் பார்க்கும் மனோபாவம் ஆணிவேர் போல அழுத்தமாக ஊன்றப்பட்டிருக்கிறது.

தத்தெடுத்த குழந்தைகளோடு வாழ்பவர்கள் கடுமையாக அவமானப்படுத்தப் படுகின்றனர். அந்தக் குழந்தைகளையும்கூட ஒருவயதில் நீ என் குழந்தையில்லை எனச் சொல்லி அதன் மனதையும் களங்கப்படுத்துகிறார்கள். நேரடியான முறைக்கு எதிராகவே கொடிபிடிப்பவர்கள், செயற்கை கருத்தரிப்பு முறை என்று வரும்போது இயல்பாகவே அதைக் கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கும் போக்கே இருக்கிறது. எதிர்ப்பு இருந்தால்கூட பரவாயில்லை. ஏளனம் இருக்கக்கூடாது இல்லையா? புரியாமல் கிளம்பி வரும் ஏளனங்கள் ஒரு தலைமுறையின் அறிவியல் வளர்ச்சியையே கேள்விக்குள்ளாக்குகின்றன.

21 வயதில் பெண்கள் திருமணம் செய்ய வேண்டும் என மருத்துவத் துறை அறிவுறுத்துகிறது. ஆண்கள் பெண்கள் எனப் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு இருபாலருக்கும் இந்த விவகாரத்தில் பிரச்சினை இருக்கிறது. மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் நிலத்தில் கால்பரப்பி நிற்பதற்குள் 30 வயதை எளிதாகவே தொட்டு விடுகிறோம். அதற்கடுத்துதான் கல்யாணம் காதல் என்பதெல்லாம். இந்தப் பின்னணியில் ஆரோக்கியமாக இருப்பவர்களுக்குப் பிரச்சினையில்லை. குழந்தையின்மை பிரச்சினை இருப்பவர்கள் என்னதான் செய்வார்கள்? அதைத்தான் பூங்குழலி ரவிச்சந்திரன் தம்பதியினரும் செய்தார்கள்.

பூங்குழலிக்கு அப்பா அம்மாவை பார்த்துக் கொள்ள வேண்டிய கடுமையான குடும்பப் பொறுப்பு. அதற்காக திருமணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தார். இப்படித்தான் பெரும்பாலான நகர்ப்புறம் சார்ந்த வாழ்க்கை இருக்கிறது. செயற்கை கருத்தரிப்பு முறையின் வழியாக அவர் இரட்டை குழந்தைகள் பெற்றுக் கொண்ட போது பூங்குழலிக்கு வயது 45. இப்போது வராது வந்த வசந்தம் என அவருக்குக் கிடைத்த இந்த குட்டி வாழ்க்கைகள் இரண்டையும் கொண்டாடுகிறார். செயற்கை முறை இது என்று சொல்பவர்கள் பூமி படாத பிஞ்சின் பாதங்களைப் பார்த்த பிறகு என்ன சொல்வார்கள்?

அவரது சந்தோஷங்களை பிஞ்சுப் பாதங்கள் எட்டி உதைக்கின்றன. இதற்கு முன்னரும் இந்த சமூகம் எட்டி உதைத்தது. இப்போது இந்த உதைகள், சமூகம் தந்த அந்த உதைகளை எட்டி உதைக்கின்றன என்கிறார் அவர். பூங்குழலி, பேபி, மேரி போன்றவர்களெல்லாம் சின்ன உதாரணம்தான். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னையில் இதுமாதிரி செயற்கை முறையில் கருத்தரித்தவர்களுக்கான தனிப்பட்ட சந்திப்பு ஒன்று நடந்தது. கடந்த இருபதாண்டுகளில் இந்த முறையில் பிறந்த சில ஆயிரம் குழந்தைகள் அவர்கள் பெற்றோர்களுடன் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டார்கள்.

அந்தச் சந்திப்பு உலகிற்கு நாங்கள் சந்தோஷமாகவும் நலமாகவும் இருக்கிறோம் என்கிற செய்தியை உரக்கச் சொன்னது. செயற்கை கருத்தரிப்பு குறித்த அத்தனை சந்தேகங்களையும் அந்தச் சந்திப்பில் தவிடு பொடியாக்கினார்கள் அந்தக் குழந்தைகள். இது எனது கணவரின் விந்தணுவா என இன்னமும் குழந்தை மாதிரி கேள்வி எழுப்புபவர்களைப் பார்த்து அந்தக் குழந்தைகளே சிரிப்பார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. மருத்துவத் துறையின் வேகத்திற்குத் தகுந்தமாதிரி சமூகம் மெல்ல மேலேறுவது இருக்கட்டும். மருத்துவத் துறையே மேலேற வேண்டிய அபாய கட்டத்தில்தான் இருக்கிறது.

உதாரணமாக அமெரிக்கா, இலண்டன் போன்ற நாடுகளில் செயற்கை முறையில் கருத்தரிப்பதற்கும் காப்பீடு திட்டத்தில் வழியுண்டு. ஆனால் இங்கே அது கிடையவே கிடையாது.ஏற்கனவே இருக்கிற பல நோய்களுக்கு காப்பீட்டில் இடம் இல்லை என்கிற போது, செயற்கை கருத்தரிப்பு முறை குறித்தெல்லாம் யோசிப்பார்களா என்ன? காப்பீட்டு நிறுவனங்களை விடுங்கள். அவர்கள் தனியார்கள். அதை அவர்களிடம் இப்போதைக்கு எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால் அரசு மருத்துவமனைகள் பலவற்றில் இன்னமும் இந்த முறை பின்பற்றப்படுவதில்லை. அதற்கான வாய்ப்புகளும் இல்லை. எய்ம்ஸ், புனே ராணுவ மருத்துவமனை உள்ளிட்ட நான்கு பெரிய மருத்துவமனைகளில் மட்டுமே குழந்தையின்மைக்கான இதுபோலவான சிகிச்சை முறைகள் இருக்கின்றன.

இது சம்பந்தமான மருத்துவ ஆராய்ச்சிகளும் இந்தியாவில் பெரியளவிற்கு நடக்கவில்லை. அதனால்தான் இதுமாதிரியான மருத்துவமுறைகளுக்கு சில லட்சங்களில் செலவாகிறது எனச் சொல்கிறார்கள். தவிர இதன் வெற்றி முடிவு என்பது ஐம்பது சதவீத அளவில்தான் இருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. ஆராய்ச்சிகள் வளர்ந்தால் வெற்றி முடிவின் சதவீதமும் அதிகரிக்கலாம்.

ஏனெனில் உபகரணங்கள் துவங்கி மருந்து மாத்திரைகள் வரை எல்லாமும் வெளிநாடுகளில் இருந்தே தருவிக்கப்படுகின்றன. அதனால்தான் அந்தச் செலவு என்கிறார்கள்.அதனால்தான் இன்னமும் அது வழக்கம் போல ஏழைகளுக்கு எட்டாத தூரத்திலேயே இருக்கிறது. அரசு மருத்துவமனைகளிலும் இது போன்ற சேவைகள் வந்துவிட்டால் அவர்களும் பயன்பெற வாய்ப்பிருக்கிறதே? ஏழைகள் என்றாலே வதவதவென்று பிள்ளைகள் பெற்றுக் கொள்வார்கள் என அதிகாரத்தில் இருக்கிற ஒருசிலரே விவரம் புரியாமல் கிண்டலடிப்பார்கள். இந்தியாவில் ஏழை-பணக்காரன் பாகுபாடில்லாமல் ஒரு விஷயம் அழுத்தமாக காலூன்றி விட்டது. பணக்கார வியாதிகள் என்று சொல்லப்படும் வியாதிகள் ஏழைகளுக்கும் வருகின்றன. வாழ்க்கை முறை சார்ந்த நவீன நோய்க்கூறுகள் ஏழை-பணக்காரன் என வித்தியாசமில்லாமல் சம அளவில் பாய்கின்றன. பணம் படைத்தவர்களுக்கு மருத்துவ வாய்ப்புகள் இருக்கின்றன. ஏழைகளுக்கு இல்லை. அவ்வளவுதான் வித்தியாசம்.

எல்லா மட்டங்களுக்கும் சென்று சேர்வதற்கான விழிப்புணர்ச்சி பிரச்சாரம் தேவை என்பதை இந்தத் துறை சார்ந்த மருத்துவர்கள் அழுத்தமாகச் சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர். கூடவே ஒரு மருத்துவ ஆராய்ச்சி என்று வந்தால் அதில் சில போலிகளும் ஊடுருவுவார்கள். தமிழகமெங்கும் புறாக் கூண்டுகள் போல செயற்கை கருத்தரிப்பு மையங்கள் பெருகி வருகின்றன. நான்கு சுவர் இருந்தால் அது ஒரு மருத்துவமனை என்றெல்லாம் அறியாமையில் இருக்கும் மக்களைக் குறிவைத்து பணம் பார்க்கவும் ஆட்கள் இறங்கி விட்டார்கள்.

அப்படிப் பெருகியவற்றுள் நுழைந்திருக்கிற சில போலிகளை நம்பி பணத்தை மன அமைதியை இழந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாக இருக்கின்றன. அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதிலும் ஆணா பெண்ணா என்கிற பகடையாட்டங்கள் காசுக்காக நடப்பதாகவும் சொல்கிறார்கள். களைய வேண்டியதும் கண்டிக்க வேண்டியதும் அரசின் பொறுப்பு என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

கோயில் குளங்களைச் சுற்றினோம். மண்சோறு சாப்பிட்டோம். செய்யாத வேண்டுதல்களையெல்லாம் செய்தோம். அறிவியலின் வழியாக வழி பிறந்துவிட்டது. ஆனாலும் வழிநடை பார்க்க மறுக்கிறோம். எதனால் என்று கேள்வி எழுப்பினால் புரையோடிப் போயிருக்கிற சமூக மூட நம்பிக்கைகளைத்தான் காரணம் காட்ட வேண்டி யிருக்கிறது. அது மாறாத வரைக்கும் எதுவும் மாறாது. உடல் சம்பந்தங்கள் அடிப்படையில் பிறக்கிற குழந்தைகள் மட்டும்தான் இயற்கையின் குழந்தைகளா? இதுபோல அறிவியல் வழிமுறைகள் வழியாக பூமியில் படும் பிஞ்சுப் பாதங்களும் பிரபஞ்சத்தின் கொடைதான். அது பிரபஞ்சத்தின் கொடையா இல்லையா என்பதை பூங்குழலி ரவிச்சந்திரனைக் கேட்டுப் பாருங்கள் அவர் சொல்வார். ஏனெனில் குழந்தை பாக்கியம் இல்லை என்பதற்காகவே இவர்கள் பொதுவெளியில் அவமானப்படுத்தப்பட்டவர்கள். ஏனெனில் இவர்கள் பல ஆண்டுகளாக இந்தப் பாக்கியத்திற்காகத் தவம் கிடந்தவர்கள். பல்வேறு முறைகளில் குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்காக அலைந்து திரிந்தவர்கள். அதனால்தான் அதை அவர்கள் பிரபஞ்சத்தின் கொடை என்று வர்ணிக்கிறார்கள்.

பூமி படாத பிஞ்சின் பாதங்கள் ஆண்டாண்டு கால துயரங்களை எட்டி உதைக்கின்றன. பூரிப்பில் மனித இதயங்கள். இதயங்களில் இருந்து நேரடியாக வரும் வார்த்தைகளுக்கு வலிமை அதிகம். நாங்கள் இப்போதுதான் சந்தோஷமாக இருக்கிறோம் என பேபி கிஷோர் தம்பதி சொல்வது மருத்துவ உலகத்திற்கான வெகுமதி. அந்த வெகுமதி அவர்கள் வார்த்தைகளில் மட்டுமல்ல, துள்ளி விளையாடும் இக்குழந்தைகளின் சிரிப்பிலும் இருக்கிறது.

சரவணன் சந்திரன்

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்