கொரோனாவால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்? மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க உடற்பயிற்சிசெய்வதை தவிருங்கோ – மோடி அரசு அமைச்சர் எச்சரிக்கை
கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்த பின்னரும் கொரோனாவின் தாக்கம் உடலில் இருந்துக் கொண்டே இருக்கிறதென்பதும் மறுக்க முடியாது. நீண்ட கால கொரோனா போராட்டத்தில், ஒருசிலருக்கு ‘நீண்ட கால உடல் நல குறைப்பாடுகள்’ எனப்படும், வாழ்வியல் பாதிப்புகள் ஏற்படுவதாக சில ஆய்வுகள் சொல்கின்றன. ஏற்கெனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்ட காலத்தில், மிக தீவிர பாதிப்பு ஏற்பட்டு – பின் குணமானவர்களுக்குத்தான் நீண்ட கால கொரோனா சிக்கல்கள் ஏற்படும் என சொல்லப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வுகளில், லேசான பாதிப்பு ஏற்பட்டு குணமாகும் நபர்களுக்கும் தீவிர கொரோனா பாதிப்பு ஏற்படுவது நிரூபனமாகியுள்ளது. இப்படியானவர்களுக்கு, வழக்கமான கொரோனா சார்ந்த இருமல் – மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் மட்டுமில்லமல், வாழ்வியல் பாதிப்புகளான சர்க்கரை நோய் ஏற்படுவது – நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகிவிடுவது – ஹார்மோன் பிரச்னைகள், மாரடைப்பு, இதய நோய் பிரச்னைகள், சிறுநீரக பாதிப்புகள், . மறதி மற்றும் தெளிவற்ற மனநிலையில் இருப்பது, தசைப்பிடிப்பு போன்றவற்றுக்கான வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. இவற்றில், மறதி – தெளிவற்ற மனநிலை – தசைப்பிடிப்பு போன்றவை நீண்ட காலம் நோயாளியை பாதிக்கிறது என சொல்லப்பட்ட நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள், 2 ஆண்டுகளுக்கு உடற்பயிற்சி மற்றும் அன்றாட பணிகளில் கவனமாக இருப்பது அவசியம் என மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தி உள்ளார்.
கொரோனா பரவலில் இருந்து உலகம் ஒருவழியாக மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியபோதும், அதன் இதர பாதிப்புகள் மற்றும் பக்கவிளைவுகள் தொடரவே செய்கின்றன. கொரோனா பலிகளின் எண்ணிக்கையை குறைத்து, அதன் பரவலை கட்டுப்படுத்தியதில் தடுப்பூசிகளுக்கு முக்கியப் பங்குண்டு. ஆனபோதும், தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பக்கவிளைவுகள் நேர்வதாக மக்கள் மத்தியில் பீதி எழுந்தது. இதனை அரசு மறுத்தபோதும், தடுப்பூசியின் பாதக விளைவு குறித்த விவாதங்கள் இன்றும் தொடரவே செய்கின்றன.
கொரோனாவிலிருந்து குணமடையும் நபர்களில், நான்கில் ஒருவருக்கு நீண்ட கால கொரோனா சிக்கல் ஏற்படுவதாக தெரிகிறது. ஆகவே கொரோனாவிலிருந்து குணமடைந்த பின்னரும், ஒருவர் தொடர்ச்சியாக தன் உடல்நலன் மீது கவனம் கொண்டு செயல்பட வேண்டும்.
கொரோனாவுக்கு பின்னான பாதிப்புகளில், அடிக்கடி பசி எடுப்பது – தாகம் எடுப்பது – சருமம் வலுவிழந்து இருப்பது – சோர்வு அதிகம் இருப்பது – அதீத பசி – உடலிலுள்ள காயங்கள் ஆறாமல் இருப்பது – தலைச்சுற்றல் – உடல் அடிக்கடி கூசுதல் போன்ற அறிகுறிகள் தெரியவந்தால், அந்நபர்கள் சர்க்கரை நோய்க்கான பரிசோதனையை செய்துப்பார்த்துக் கொள்ளவும்.
இதய துடிப்பு சீரற்று இருப்பது, இதய அழற்சி, ரத்தம் கட்டுவது, மாரடைப்பு ஏற்படுவது போன்றவை, கொரோனாவிலிருந்து குணமடைந்த பின்னர் பலருக்கு ஏற்படுவதாக, இதய நோய் நிபுணர்கள் கூறுகின்றனர். இதை தடுக்க, நெஞ்சு பிடிப்பு, தோள்பட்ட வலி, வியர்வை, மூச்சுத்திணறல், கட்டுப்படுத்த இயலாத வகையிலான ரத்த அழுத்தம் அதிகரிப்பு போன்றவை தெரியவந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும்.
மேலும் அடிக்கடி சிறுநீர் வருவது, பாதம் வீங்குவது, உடல் எடை குறைதல், செரிமானப் பிரச்னை போன்றவை தெரியவருபவர்கள், சிறுநீரக ஆரோக்கியத்தை உறுதிசெய்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் செய்திகள் வந்தன. இதை அடுத்து கொரோனா தடுப்பூசிக்கு அப்பால், கொரோனா பாதிப்பிலிருந்து வெற்றிகரமாக மீண்டவர்களுக்கு எழும் பக்க விளைவுகள் குறித்தும் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.
கொரோனா தடுப்பூசியின் பக்கவிளைவு குறித்து அரசுகள் மறுப்பு தெரிவித்தபோதும், கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு எழும் பக்கவிளைவுகளை அரசு மறுக்கவில்லை. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் மத்தியிலான அறிவியல்பூர்வமான ஆய்வுகளும் அதனையொட்டிய தரவுகளும் இந்த பக்கவிளைவுகளை உறுதிபடுத்துகின்றன. தற்போது கொரோனாவுக்கான தேசிய மருத்துவ பதிவகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்றும் இது தொடர்பான அதிர்ச்சிகர விவாதங்களுக்கு மருபடியும் வித்திட்டது. இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலின் ஒரு பிரிவான இந்த அமைப்பு, கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் மத்தியில், ஓராண்டுக்கு பின்னர் நடைபெறும் மரணங்களுடன் தொடர்புடைய காரணிகளை மதிப்பீடு செய்தது. 2020 செப்டம்பரில் இருந்து 2023 பிப்ரவரி வரை இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
அதில், கொரோனா பாதிப்புக்கு பின்னான மரணத்திற்கான முக்கிய காரணங்களில், ரத்தம் உறைதல் ஏற்பட்டு, களைப்பு மற்றும் மூட்டு வலிகளுடன் மாரடைப்பும் ஏற்படுகிறது என தெரிய வந்தது. இருதய பாதிப்புகள் ஏற்படுவது மரணத்திற்கான முதல் காரணம். இவை தவிர்த்து நுரையீரல், சிறுநீரகம் ஆகியன முற்றிலும் செயலிழப்பதும் உயிரிழப்புக்கான காரணங்களாக தெரிய வந்தன.
இவை உள்ளிட்ட பல்வேறு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் மக்கள் மத்தியிலான புதிய விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த சூழலில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா முக்கிய அறிவுறுத்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதன்படி கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் கடுமையான உடற்பயிற்சி மற்றும் பளுமிக்க பணிகளை செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த அறிவுறுத்தலை 2 ஆண்டுகளுக்கு கடைபிடிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.