ஐபோன்கள் உளவு பார்க்கப்படுகிறதா? விசாரணை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் உறுதி!!

ஐபோன்கள் உளவு பார்க்கப்படுகிறதா?  விசாரணை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் உறுதி!!

லகம் முழுக்க மிகவும் புகழ் பெற்ற செல்போன் உற்பத்தி நிறுவனம் ஆப்பிள். ஐபோன், லேப்டாப், ஐபேட்ஸ் என கேட்ஜெட் சந்தைகளில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை ஆப்பிள் நிறுவனம் நடத்தி வருகிறது. ஆப்பிள் செல்போன்களை பொறுத்தவரை ஹைடெக் பாதுகாப்பு வசதியோடு, பிரைவேசியிலும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை கொண்டது ஆகும். இதனால், ஐபோன்களுக்கு என தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர். பெரும்பாலும் விஐபிக்கள், பிரபலங்கள் பலரும் ஆப்பிள் பிராண்ட்களையே பயன்படுத்தி வருவதை காணமுடியும். இதனிடையே தங்களின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் போன்றவற்றை மத்திய அரசு உளவு பார்ப்பதாக சில அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் எக்ஸ் வலைதளத்தில் புகார் தெரிவித்துள்ளனர். மொபைலில் இருக்கும் தகவல்களை ‘ஸ்டேட் ஸ்பான்சர்டு அட்டாக்கர்ஸ்’ (State Sponsored attackers) திருட முயற்சிப்பதாக எம்.பி மஹுவா மொய்த்ரா, சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, காங்கிரஸ் மூத்த தலைவர் பவான் கேரா ஆகியோருக்கு ஆப்பிள் நிறுவனம் வார்னிங் மெசேஜ் அனுப்பியிருக்கிறது. இதை தங்களின் எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்திருந்த சூழலில் ஆப்பிள் நிறுவனம் “அரசு ஆதரவுடன் இயங்கும் ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்டு இருப்பதாக வந்த நோட்டிபிகேஷனுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. சில எச்சரிக்கை நோட்டிபிகேஷன்கள் தவறானவையாக இருக்க வாய்ப்பு உள்ளது. அரசு ஆதரவுடன் இயங்கும் ஹேக்கர்கள் அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டு இருப்பார்கள். எனவே, அதுபோன்ற தாக்குதல்களை அச்சுறுத்தல் சிக்னல்கள் மூலம் கண்டறிவது என்பது அடிக்கடி முழுமையற்றதாகவும் பொருத்தமற்றதாகவும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளது.

பெரும்பாலும் அரசியல்வதிகளும், விஐபிகளும் ஆப்பிள் போனையே பயன்படுத்தி வருவதால் ஹேக்கர்களும் ஆப்பிள் போன்களை குறிவைத்தே ஹேக்கிங் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் உங்கள் கைபேசிகள் அரசு நிறுவனத்தால் உளவு பார்க்கப்படலாம் என்று ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த முக்கியத் தலைவர்களின் கைப்பேசிகளுக்கு, இன்று காலை ஆப்பிள் நிறுவனம் அனுப்பிய குறுஞ்செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் விதமாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை ஏற்படுத்தியுள்ளனர். ‘இந்தியா’ கூட்டணி கட்சித் தலைவர்கள் மக்களவைத் தேர்தல் மற்றும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 5 மாநில தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் முக்கிய பத்திரிக்கையாளர்கள் சிலரின் ஆப்பிள் கைப்பேசிகளுக்கு, “உங்கள் ஆப்பிள் கைப்பேசி அரசு உதவிபெறும் அமைப்பால் தாக்குதல் நடத்தக்கூடும்” என்று இன்று அதிகாலை குறுஞ்செய்தி வந்துள்ளது.

அரசால் தாக்குதலுக்கு உள்ளாகும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, திரிணாமூல் எம்பி மஹுவா மொய்த்ரா, சிவசேனை(உத்தவ் பிரிவு) எம்பி பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மி எம்பி ராகுல் சத்தா, காங்கிரஸ் எம்பி சசி தரூர், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா உள்ளிட்டோரின் கைப்பேசிகளுக்கு இந்த குறுஞ்செய்தியை ஆப்பிள் நிறுவனம் அனுப்பியுள்ளது. மேலும், இ-மெயில் மூலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் பிரபல செய்தியாளர்கள் மற்றும் ராகுல் காந்தி அலுவலக பணியாளர்கள் மூவருக்கும் இந்த குறுஞ்செய்தி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவன குறுஞ்செய்தியில், “அரசு நிதியுதவிபெறும் நிறுவனத்தால் உங்கள் கைப்பேசி தாக்குதல் நடத்தப்படலாம். அவ்வாறு உங்கள் கைப்பேசி தாக்குதலுக்கு உள்ளானால், கைப்பேசியில் உள்ள முக்கிய தரவுகள் திருடப்படலாம். மேலும், உங்கள் கைப்பேசியின் கேமிரா மற்றும் மைக்ரோபோன்களைகூட அவர்களால் அணுக முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறுஞ்செய்தியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள சசி தரூர், ராகவ் சத்தா, மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட தலைவர்கள் மத்திய அரசை கண்டித்து பதிவிட்டு உள்ள நிலையில், அரசியல் அரங்கில் இது பெரும் புயலை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இது தொடர்பாக, “ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட அறிவிப்பு குறித்து சில எம்.பி.க்கள் மற்றும் சிலரிடமிருந்து வந்த தகவல்கள் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். இந்த பிரச்சினையில் ஆப்பிள் வழங்கும் பெரும்பாலான தகவல்கள் தெளிவற்றதாகஉள்ளது. அரசு அனைத்து குடிமக்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைப் உறுதிப்படுத்துவதில் உறுதியாக உள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்படும் எனவும், ஆப்பிள் தரப்பில் அரசின் விசாரணைக்கு முழு ஒத்துழைக்க வேண்டும்” எனவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

இந்நிலையில்தான், இவ்விவகாரம் குறித்து ஆப்பிள் நிறுவன தரப்பிலும் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!