நாடெங்கும் மாஞ்சா நூல் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசாணை வெளியீடு

நாடெங்கும் மாஞ்சா நூல் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசாணை வெளியீடு

பிளாஸ்டிக், நைலான் அல்லது பிற செயற்கை பொருட்களால் செய்யப்பட்ட மாஞ்சா நூல் பயன்படுத்த தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கண்ணாடித் துண்டுகள் மற்றும் விஷம் நிறைந்த வேதிப்பொருட்கள் கலந்து அவை செய்யப்படுவதால், அதற்கு தடை விதிக்க ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் மாஞ்சா நூல்களின் உற்பத்தி, விற்பனை, கொள்முதல், இறக்குமதி மற்றும் பயன்படுத்த முழு தடை விதித்து தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல குழந்தைகள் முதல் இளைஞர்கள் உற்சாகமாக பட்டம் பறக்கவிடப் பயன்படும் மாஞ்சா நூலால், இதுவரை பல விபத்துகள் நடந்துள்ளன; உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக சென்னையில் கடந்தாண்டு மாஞ்சா நூலால் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து, மாஞ்சா நூல் பயன்பாட்டுக்கு காவல்துறை தடை விதித்தது. எனினும், இதைப் பொருட்படுத்தாமல் பல இடங்களில் மாஞ்சா நூலைப் பயன்படுத்தி காற்றாடி பறக்கவிடுவோர் இருக்கத்தான் செய்கின்றனர். மாஞ்சா நூல் தயாரிக்க, சாதாரண கண்ணாடித் துண்டுகள், பல்லியின் வால், ஒருசில விஷம் நிறைந்த வேதிப்பொருள்கள் கலந்து, அதை மிகவும் பலம் பொருந்தியதாகச் செய்கிறார்கள். காற்றாடி விடும்போது, அது எதிலும் மோதி அறுபடாமல் இருக்கத்தான் இப்படிச் செய்கிறார்கள். இந்த மாஞ்சா நூல் காற்றாடியால், மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல், பறவைகள், விலங்குகளுக்கு கூட ஆபத்து ஏற்படுவதால் இதை தடை செய்ய பெருங்குரல் எழுந்து கொண்டிருந்தது.

அதை ஏற்று இது தொடர்பாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,“நைலான், பிளாஸ்டிக் அல்லது செயற்கை பொருட்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூல் என பிரபலமாக அறியப்படும் மக்கும் தன்மையற்ற காற்றாடி நூலை தயாரித்தல் விற்பனை செய்தல், சேமித்தல், கொள்முதல் செய்தல், இறக்குமதி செய்தல், பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு தமிழக அரசு முழுமையான தடை விதித்துள்ளது. இது தொடர்பாக, 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதியிட்ட அரசாணையில் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி தமிழ்நாடு அரசிதழில் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

காற்றாடி பறக்கவிடும் போட்டிகளின் போது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் மற்றும் குறிப்பாக பறவைகளுக்கும் பலத்த காயங்கள் ஏற்படுவதற்கும், சில சமயங்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கும் பிளாஸ்டிக் பூசப்பட்ட மாஞ்சா நூலே காரணம் என்று அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த பிளாஸ்டிக் பூசப்பட்ட மாஞ்சா நூல்கள் வடிகால் பாதைகள் மற்றும் நிர்நிலைகளை அடைப்பதன் மூலம் கடுமையான சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. இது பறவைகள் மற்றும் பிற விலங்கினங்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது.

இதனால் மக்கள், விலங்குகள் மற்றும் பறவைகளின் உயிர்களைப் பாதுகாக்கும் பொருட்டு நைலான், பிளாஸ்டிக் மற்றும் பிற செயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட மாஞ்சா, காற்றாடி நூல் தயாரித்தல், விற்பனை செய்தல் சேமித்தல், இறக்குமதி செய்தல் மற்றும் பயன்படுத்துதல் போன்றவற்றிற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், வனத்துறை வனசரகர்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள அதிகாரிகள், தமிழக காவல் துறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள அதிகாரிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளுக்கு மேற்படி அறிவிப்பை செயல்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இத்தடை உத்தரவினை மீறுபவர்களுக்கு சுற்றுச்சூல் (பாதுகாப்பு) சட்டம், 1986, (ஒன்றிய சட்டம் 29, 1986) விதிகளின் கீழ் அபராதம் விதிக்கப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!