ஓ மை காட் போல இன்னொரு படமே ‘ நித்தம் ஒரு வானம்’ – அசோக் செல்வன்!

ஓ மை காட் போல இன்னொரு படமே ‘ நித்தம் ஒரு வானம்’ – அசோக் செல்வன்!

மிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் அசோக் செல்வன். பில்லா 2 படத்தில் இளம் வயது அஜித்தாக நடித்து திரையுலகில் அறிமுகமான அவர் சூதுகவ்வும்,பீட்சா-2, தெகிடி என வித்தியாசமான கதையம்சம் உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படம் அசோக் செல்வனுக்கு நல்ல திருப்பு முனையாக அமைந்தது. தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடித்த மன்மதலீலை, ஹாஸ்டல் ஆகிய படங்கள் வெளியான நிலையில் தற்போது நித்தம் ஒரு வானம் என்ற படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கும் இப்படத்தை வியகாம்18 ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் நித்தம் ஒரு வானம் படத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நடிகை ரித்து வர்மா, சூரரைப்போற்று புகழ் அபர்ணா பாலமுரளி, சிவ ஆத்மிகா ஆகிய மூன்று கதாநாயகிகள் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்பட அனுபவம் குறித்து ஹீரோ அசோக் செல்வனிடம் கேட்ட போது , “இந்த கதையைப் படித்து முடித்ததுமே இந்த படத்தில் நடித்தாக வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். இந்தப் படத்தின் கதாபாத்திரம் மட்டுமல்லாது கதை நடக்கும் இடங்கள் இந்தியாவின் பல மாநிலங்களை தொட்டுச் செல்கிறது. ஒரு லொகேஷனில் ஒரு கதையில் நடித்தோம் என்று இல்லாது ஒரு பயண அனுபவமாக இந்த படம் அமைந்திருப்பதில் மற்ற படங்களில் இருந்து வித்தியாசப்படுகிறது. இதற்கான செலவு பற்றி கவலைப்படாமல் இந்த படத்தை தயாரித்தார் சாகர் சார்.

என்னை சந்தித்து பேசும் அனைவருமே கேட்கும் ஒரு கேள்வி “ஓ மை காட் படம் போல இன்னொரு படம் எப்போது நடிப்பீர்கள்..?” என்பதுதான். இந்த படம் தான் அந்த கேள்விக்கான பதிலாக அமையும்… இந்தப் படத்தில் நடித்த போது அபர்ணா பால முரளிக்கு தேசிய விருது அறிவிக்கப் படவில்லை. ஆனாலும் அவர் அற்புதமான நடித்ததில் என்னுடைய நடிப்பையும் மெருகேற்றிக் கொள்ள முடிந்தது. ஒரு காட்சியை இரவு 2 மணிக்கு எடுத்தார் கார்த்திக் அந்த நேரத்தில் தூக்க கலக்கம் மற்றும் உடல் சோர்வு பொதுவாக இருக்கும் ஆனால் அந்த காட்சியின் சுவாரஸ்யத்தில் எங்கள் யாருக்குமே அயற்சியோ சோர்வோ இல்லாமல் அவ்வளவு அற்புதமாக அமைந்தது.

அபர்ணா மட்டுமில்லாமல் ரிது வர்மா, ஷிவாத்மிகா ராஜசேகர் உடன் நடித்ததும் ஒரு நல்ல அனுபவமாக எனக்கு அமைந்தது. என் நடிப்பு பயணத்தில் மட்டுமல்லாது பொதுவாகவே தமிழ் படத்தில் ஒரு நல்ல அனுபவப் படமாக இது இருக்கும் என்பது நிச்சயம்..!” என்றார். படத்தை தயாரித்த சாகர், “இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் படித்து முடித்ததுமே இந்த படத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டது. அத்துடன் கார்த்திகை என்னுடைய அலுவலகத்திற்கு கூப்பிட்டு இந்த படத்தின் நரேஷன் கேட்டேன் அவர் சொன்ன விதம் இன்னும் நம்பிக்கையே ஏற்படுத்த இந்த படத்தை தயாரிக்க முடிவெடுத்தேன்.

இந்தப் படத்துக்காக இயற்கையே எங்களுக்காக ஒத்துழைத்தது என்றால் அது மிகையில்லை. பனி படர்ந்த ரோத்தங் பகுதிகளில் படம் பிடிக்க வேண்டும் என்று கார்த்திக் சொன்னபோது காலநிலை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் நாங்கள் அங்கு போய் சேர்ந்தோம். ஆனால் அப்போது அங்கு பனி இல்லாமல் வெயிலாக இருந்தது. பனிக்காகத்தான் அவ்வளவு தூரம் பயணப்பட்டோம் என்றாலும் அடுத்த நாள் சூட்டிங் எப்படி நடத்துவது என்று தெரியாமல் அன்று இரவு படுத்து தூங்கினோம். அடுத்த நாள் காலையில் ஆச்சரியமாக பனி மழை பெய்து கொண்டிருந்தது. அந்த இடமெல்லாம் பனியாக ஆனதுடன் கதையில் இல்லாத பனிமழையும் சேர்ந்து கொள்ள காட்சி அவ்வளவு சிறப்பாக அமைந்தது. அதேபோல் மழை வரவேண்டிய ஒரு காட்சியில் செயற்கை மழைக்காக நாங்கள் தண்ணீர் லாரிகளையெல்லாம் தயார் செய்து வைத்திருந்தோம். ஆனால் படமாக்கப்பட்ட போது நிஜமழையே வந்து எங்களை ஆனந்தத்தில் நினைத்தது. இப்படி இயற்கையே ஈடு கொடுத்த இந்தப் படத்தை நிச்சயம் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதில் எனக்கு எந்த விதமான ஐயமும் இல்லை. பெரிய படங்கள் ஓடி முடித்த இந்த நிலையிலும், நவம்பர் நான்காம் தேதி வெளியாகும் இந்த படத்துக்கு தியேட்டர்கள் கிடைத்திருக்கின்றன என்பதும் நம்பிக்கை தரும் விஷயம்..!” என்றார்.

இதை அடுத்து நம்மிடம் பேசிய படத்தின் இயக்குனர் ரா.கார்த்திக், “ஆனால், இப்பட்டத்தில் காதல் மட்டுமே படத்தில் பிரதானம் என்று சொல்ல முடியாது.. அதையும் தாண்டி சொல்லப்பட்டிருக்கும் வாழ்க்கையின் சுவாரசியங்கள் இந்த படத்தை இன்னும் ரசிக்க வைக்கும்..கொஞ்சம் விரிவா சொல்வதானால் தமிழ் தெலுங்கு மொழிகளில் படங்களும், விளம்பர படங்களுமாக பணியாற்றிய அனுபவத்தில் இந்தப் படத்தின் கதையை முதலில் எழுதி முடித்தேன். இந்தப் படத்துக்காக இந்தியாவின் பல பகுதிகளில் மட்டுமல்ல, இமயத்தில் மிக உயரமான இடத்தில் சாலை அமைந்த ரோத்தாங் பகுதிகளிலும் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்.

ஆனால் கதையை எழுதும்போது இங்கெல்லாம் படப்பிடிப்பு நடத்துவோம் என்று நான் நினைக்கவில்லை. இருந்தாலும் இதற்கான இடங்களைத் தேர்வு செய்வதற்காக படத் தயாரிப்புக்கு முன்னரே நான் சில மாதங்கள் இந்த கதை நடக்கும் பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வந்தேன். அதற்குப் பிறகுதான் அந்த இடங்களில் எல்லாம் படப்பிடிப்பை நடத்துவது என்று தீர்மானித்தோம். அது படத்தின் திட்டமிடுதலை சரியாக செய்வதற்கு உதவியது. அதன் பிறகுதான் இந்த கதைக்கு எந்த ஹீரோ சரியாக இருப்பார் என்று யோசித்து அசோக்செல்வனிடம் இந்த கதையை சொன்னேன். இந்த கதையை எழுதி முடித்தது 5 வருடங்களுக்கு முன்னால் என்றால் இதை அசோக் செல்லுனிடம் மூன்று வருடங்களுக்கு முன்பே சொல்லி இருந்தேன். அதற்குள் லாக் டவுன் போன்ற காரணங்களால் படத்தை நகர்த்த முடியாமல் போக தயாரிப்பாளர் சாகரிடம் கதையைச் சொன்னபோது அவர் உடனே தயாரிக்க ஒப்புக்கொண்டார். இதில் அசோக்செல்வன் மூன்று விதமான கதாபாத்திரங்களில் வருகிறார். அவரது ஜோடிகளாக ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் நடிக்கிறார்கள்..! என்றார்.

error: Content is protected !!