கோர்ட் வரை இழுத்து செல்லும் அண்ணாமலையின் அபூர்வ டைம் மெஷின்!

கோர்ட் வரை இழுத்து செல்லும் அண்ணாமலையின் அபூர்வ டைம் மெஷின்!

மிழக அரசியலில் பாஜக தலைவர் அண்ணாமலை புதிதாக ஒரு டைம் மெஷினை அறிமுகம் செய்துள்ளார். அந்த டைம் மெஷின் மூலமாக கடந்த வாரம் கோவில்பட்டி வீரலட்சுமி டைம் டிராவல் செய்தார்.

1961இல் பிறந்து 1990 வரை வாழ்ந்த கோவில்பட்டி வீரலட்சுமியை ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததாக சொன்னார். இதன் மூலம் வீரலட்சுமியை டைம் டிராவல் மூலம் இறந்த காலத்துக்கு கொண்டு சென்று சுதந்திரத்துக்காக போராட வைத்தார்.

இன்று ஈரோட்டில் அண்ணாமலை பேசும்போது பாரதியாரை தனது டைம் மெஷினில் ஏற்றினார். அதாவது 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 அன்று இறந்த பாரதியாரை 1931 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி ஈரோட்டில் மனிதனுக்கு மரணமில்லை என்ற தலைப்பில் கடைசியாக பேசியதாக கூறியுள்ளார். இதன் மூலம் 1921இல் இறந்த பாரதியாரை 10 ஆண்டுகள் டைம் டிராவல் மூலம் 1931க்கு கொண்டு வந்து கடைசி உரையாக பேச வைத்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்னர் கூட,

1962 வரை மருதமலையில் மின்சாரம் கிடையாது. மருதமலை முருகன் கோயிலுக்கு மின்சாரம் கொடுக்க கூடாது என்று தி.மு.க. கொள்கையாக வைத்திருந்ததாக அண்ணாமலை குற்றச்சாட்டியிருந்தார். அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததே 1967 ஆம் ஆண்டு தான். எனவே தனது டைம் மெஷின் கான்செப்டில் தி.மு.க. ஏறி வந்து இறந்த காலத்தில் 1962 ஆம் ஆண்டு மின்சாரம் தர தடையாக இருந்ததாக கண்டுபிடித்துள்ளார்.

இதை எல்லாம் தாண்டி இப்போது வந்த தகவலிது :

அண்ணாமலை தொடர்பாக பியூஸ் மானுஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதாவது சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான பியூஸ் மானுஷ், சேலம் மாநகர காவல் ஆணையரிடம் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், ”கடந்த தீபாவளியின் போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்திருந்தார். அதில் இந்து கலாச்சாரத்தை அழிப்பதற்காக தீபாவளி என்று பட்டாசு வெடிக்கக் கூடாது என கிறிஸ்தவ மிஷனரி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வெளிநாட்டிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருக்கின்றன என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பாக விசாரித்த போது டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டவர் அர்ஜுன் கோபால் என்பவர், என்பது தெரியவந்தது. அவரது பின்புலம் பற்றி விசாரித்த போது அவர் இந்து சமூகத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. அண்ணாமலை வேண்டுமென்றே இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு பொய்யான தகவலை பரப்பி விட்டு இருக்கிறார். எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார். ஆனால் காவல்துறை சார்பில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இதையடுத்து அவர் சேலம் நான்காவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், அதே நேரத்தில் தமிழ்நாடு அரசின் அனுமதியை வாங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், இந்த மனுவை அரசுக்கு அனுப்பி வைத்தார். அரசு வழக்கறிஞர்கள் பரிசீலனை செய்து இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்வதற்கான காரணங்கள் இருக்கின்றன, எனவே, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தலாம் எனக் கூறி கடந்த 18-ம் தேதி அனுமதி அளித்தனர். இந்த வழக்கு அடுத்த மாதம் 4-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

ஆக அண்ணாமலை கண்டுபிடித்துள்ள இந்த அபூர்வ டைம் மெஷினால் கோர்ட் படி ஏறப் போகும் நிலையில் அடுத்து யாரை மெஷினில் ஏற்றப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ராஜீவ்காந்தி

error: Content is protected !!