பிரதமர் மோடியுடன் இன்று தூய்மை பணியில் ஈடுபட்ட அங்கித் பையன்பூரியா – யார் – முழு விபரம்!

பிரதமர் மோடியுடன் இன்று தூய்மை பணியில் ஈடுபட்ட அங்கித் பையன்பூரியா – யார் – முழு விபரம்!

பிரதமர் மோடியுடன் ஒன்றாக இணைந்து இன்று தூய்மை பணியில் ஈடுபட்ட அங்கித் பையன்பூரியா நாடு முழுவதும் கவனம் ஈர்த்துள்ளார். யார் இவர்?ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரமான பையன்பூரை சேர்ந்தவர் அங்கித் சிங் என்றும் அழைக்கப்படுபவர் இந்த அங்கித் பையன்பூரியா. பாரம்பரியதிற்கு ஏற்ப, மல்யுத்தத்தில் தனது பயணத்தைத் தொடங்கிய அவர், தனது கிராமப் பெயரை தனது குடும்பப்பெயராக சேர்த்துக் கொண்டார். அன்றிலிருந்து அங்கித் சிங் – அங்கித் பையன்பூரியா என்றாகிப் போனார். “ராம் ராம் பாய் சர்யானே” என்றும் அழைக்கப்படும் அங்கித் பையன்பூரியா, இந்தியாவின் ஹரியானாவைச் சேர்ந்த மல்யுத்த வீரர் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர் ஆவார். “ராம் ராம் பாய் சாரியானே” என்ற சொற்றொடருடன் தனது வீடியோக்களை தொடங்கும் தனித்துவமான வழிக்காக அவர் சமூக ஊடகங்களில் பிரபலமானார், இது “வாழ்த்துக்கள், சகோதர சகோதரிகளே” என்று பொருள்படும் இந்தி வாழ்த்து.

இன்ஸ்டாகிராம் உபயோகிக்கும் பலருக்கும் அங்கித் பையன்பூரியாவை பற்றி தெரிந்திருக்கும். தன் இளமைக் காலம் குறித்து “நான் ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள பயான்பூர் என்ற சிறிய நகரத்திலிருந்து வருகிறேன். நான் எனது உயர் கல்வியை எனது ஊரில் மட்டுமே முடித்தேன், தற்போது சோனிபட்டிலேயே பட்டப்படிப்பை முடித்தேன். என் குடும்பத்தில் அப்பாவும் அம்மாவும் தினக்கூலியாக வேலை செய்பவர்கள். வாழ்க்கையைச் சமாளிக்க, நான் கூலி வேலை, ஜொமேட்டோ டெலிவரி பாய் போன்ற பல வேலைகளையும் செய்துள்ளேன். எனது கிராமம் தங்கல் பாரம்பரியத்தைப் பின்பற்றுகிறது. அங்கிருந்துதான் நான் மல்யுத்தம் செய்தேன்.

ஆம்.. நான் சில வருடங்களாக தொழில்முறை மல்யுத்தம் செய்துள்ளேன். நான் குறிப்பிட்டுள்ளபடி, நானும் அதை மேலும் தொடர விரும்பினேன், ஆனால் எனது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக, என்னால் மீண்டும் மல்யுத்த களம் திரும்ப முடியவில்லை. நான் இப்போது எனது மீட்புக் காலத்தில் இருக்கிறேன், ஆனால் நான் மீண்டும் வருவேன் என்றும் எதிர்காலத்தில் இந்தியாவுக்காக விளையாடுவேன் என்றும் நம்புகிறேன்“ என்றார்.

இதனிடையே தூய்மை இந்தியா திட்டத்தின் 9ஆம் ஆண்டு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, தூய்மையே சேவை இயக்கத்தின் ஒரு பகுதியாக “ஏக் தரீக் ஏக் கன்டா ஏக் சாத்” எனப்படும் ஒன்றாம் தேதி, ஒரு மணி நேரம், ஒன்றாக இணைவோம் என பிரதமர் நரேந்திர மோடியின் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி, நாடு முழுவதும் மெகா தூய்மை இயக்கம் இன்று நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பட்ட மக்களும் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், மல்யுத்த வீரர் அங்கித் பையன்பூரியாவுடன் இணைந்து பிரதமர் மோடி தூய்மை பணியில் ஈடுபட்டார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “தூய்மையே சேவை இயக்கத்தில் தேசம் கவனம் செலுத்துகையில், அங்கித் பையன்புரியாவும் நானும் அதில் ஈடுபட்டோம். தூய்மைக்கு அப்பால், உடற்தகுதி மற்றும் நல்வாழ்வு குறித்து நாங்கள் கலந்துரையாடினோம்.” என பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து அங்கித் பையன்பூரியா கூறுகையில், பிரதமர் மோடி தன்னிடன் 75 நாட்கள் சவால் பற்றி கேட்டதாகவும், அதனை பின்பற்றும் 5 விதிகள் பற்றி அவரிடம்தான் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆக.. தற்போது பலராலும் கைவிடப்பட்ட, முடியாது என பின்வாங்கிய 75 நாட்கள் சவாலை வெற்றிகரமாக முடித்தவர் என்ற அடைமொழிக்கு சொந்தகார்தான் இந்த அங்கித் பையன்பூரியா.

தி 75 ஹார்ட் சேலஞ்ச் என்றால் என்ன?

இது 2020 ஆம் ஆண்டில் அமெரிக்க தொழிலதிபரும் எழுத்தாளருமான ஆண்டி ஃப்ரிசெல்லாவால் உருவாக்கப்பட்ட மனநலம் மற்றும் சுய முன்னேற்றத் திட்டமாகும். இதை ஜூன் 28, 2023 அன்று, அங்கித் பையன் பூரியா 75 நாட்கள் சவாலாக ஏற்றுக்கொண்டார், இந்த பெயரில் உள்ளது போலவே, 75 நாட்களுக்கு கடுமையான விதிகளின் தொகுப்பை கண்டிப்பாக தொடர்ச்சியாக கடைபிடிக்க வேண்டும் என்பதே.

அதாவது

** உணவு முறை: ஒரு குறிப்பிட்ட உணவுத் திட்டத்தைப் பின்பற்ற வேண்டும். ஜங் புட்ஸ் சாப்பிடக் கூடாது. ஏமாற்றக் கூடாது.

** உடற்பயிற்சி: ஒவ்வொரு நாளும் இரண்டு முறை தலா 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதில் ஒன்று வெளிப்புறத்தில் இருக்க வேண்டும். (வானிலை நிலைமைகளை பொருட்படுத்தாமல் வெளிப்புறத்தில் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.)

** தண்ணீர்: தினமும் ஒரு கேலன் (தோராயமாக 3.8 லிட்டர்) தண்ணீரை உட்கொள்ள வேண்டும்.

** புத்தகம்: கற்றல் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்காக தினமும் குறைந்தபட்சம் 10 பக்கங்கள் புத்தகம் படிக்க வேண்டும்.

** செல்பி: உடல் மாற்றங்களைக் கண்காணிக்க தினமும் ஒரு செல்பி புகைப்படம் எடுக்க வேண்டும்.

** மது: மது அருந்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுத் திட்டத்தை உண்மையாக கடைப்பிடிக்க வேண்டும்.

இந்த விதிகளை ஒரு நாள் தவறிவிட்டால், மீண்டும் முதலில் இருந்து 75 நாட்கள் சவாலை ஆரம்பிக்க வேண்டும். முதன்முதலில் 75 ஹார்ட் சேலஞ்ச் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதனை யாரும் செய்ய முடியாது என தோன்றியது. ஆனால், அது மாற்றத்தை ஏற்படுத்துவதாக உறுதியளிக்கப்பட்டது. பலர் இந்த பயணத்தை மேற்கொண்டனர். ஆனால், அவர்கள் பின்வாங்கினர். இருப்பினும், இந்தியாவைச் சேர்ந்த ஒருவரான அங்கித் பையன்பூரியா 75 கடினமான சவாலை வெற்றிகரமாக முடித்ததுடன், அதை 105 நாட்களுக்கு நீட்டித்தார்.அதற்கு அசைக்க முடியாத அவரது அர்ப்பணிப்புதான் காரணம்.

நிலவளம் ரெங்கராஜன்

 

error: Content is protected !!