நைட்டிக்கு தடை..! ஆண்கள் லுங்கிக்கும், டாப்லெஸ்-க்கு தடை இல்லையா? – ஆந்திரா கிராம பெண்கள் அதிருப்தி

நைட்டிக்கு தடை..! ஆண்கள் லுங்கிக்கும், டாப்லெஸ்-க்கு தடை இல்லையா? – ஆந்திரா கிராம பெண்கள் அதிருப்தி

நைட்டி என்றால் இரவு உடைங்கிற அர்த்தம் மாறிப் போய் ரொம்ப காலம் ஆகிறது. ஆரம்பத்தில் இரவில் மட்டும் நைட்டி அணிவது, அதிலும் மேல்தட்டு மக்கள் தான் அதிகம் அணிவது என்று இருந்தது. மெல்ல மெல்ல மாறி வீட்டில் இருக்கும் நேரம் முழுவதும் பெண்களின் உடை நைட்டி என்பது போல் என்றாகியது. வெளியாட்கள் யாரும் வீட்டிற்கு வந்தால் உடை மாற்றிக் கொண்டு இருந்தனர். அதுவும் பிறகு மாறி ஒரு துப்பட்டாவோ, துண்டோ மேலே போட்டுக் கொள்ளவாவது செய்தனர். சமீபமாக அதற்கும் ஒருபடி மேலே போய் அப்படியே பக்கத்தில் இருக்கும் கடை களுக்கும், மகள் அல்லது மகளை பள்ளியில் போய் விடுவது வர ஆரம்பித்து விட்டனர். இந் நிலையில் ஆந்திராவில் உள்ள கிராமத்தில் பெண்கள் பகல் நேரங்களில் நைட்டி அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆம்..ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ளது தொக்கலாபள்ளி. மீனவர்கள் அதிகம் வாழும் கிராமம்.  இந்த கிராமத்தில் பெண்கள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை நைட்டி அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி அணிபவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். பகல் நேரங்களில் நைட்டி அணிபவர்கள் பற்றிய விவரங்களை தெரிவிப்பவர்களுக்கு தலா ரூ. ஆயிரம் சன்மானம் தரப்படும் என்று கிராமக்கமிட்டி முடிவு செய்து அறிவித்துள்ளது.
இந்தத் தடை 7 மாதங்களுக்கு முன்பே அமல் செய்யப்பட்டது. ஆனால், இந்த தடை பற்றிய தகவல் நிடாம்மாரு போலீஸ் நிலையத்துக்கு நேற்று முன்தினம்தான் தெரியவந்துள்ளது. உடனே, போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், தாசில்தார் சுந்தர் ராஜு உட்பட அதிகாரிகள் அந்த கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சில சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. 9 முதியவர்களை கொண்ட கிராமக் கமிட்டியினர் அந்த அதிகாரிகளிடம், “ஷாப்பிங் செய்ய பெண்கள் நைட்டியில் போகும் போதும், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெண்கள் நைட்டியில் வரும் போதும், பகல் நேரங்களில் நடக்கும் பெண்கள் சுய உதவிக்குழுக்கள் கூட்டத்தில் பங்கேற்க பெண்கள் நைட்டியில் செல்லும் போதும் அவர்களை பார்க்கும் ஆண்களுக்கு ஒருவிதமான உணர்வு ஏற்படுவதாக எங்களுக்கு ஒரு புகார் கடிதம் வந்தது. இதைத்தொடர்ந்து, சில பெண்கள் குழுவுடன் எங்கள் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர். பகலில் நைட்டி அணிய தடை விதிக்க அந்த பெண்கள் குழுவினர் ஒப்புக் கொண்டனர். இதன் அடிப்படையில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த முடிவு ஊர் முழுவதும் தண்டோரா மூலம் தெரிவிக்கப்பட்டது. இந்த முடிவு பெண்களே விரும்பி எடுத்ததுதான். இதில் ஆண்கள் எதுவும் செய்யவில்லை”என்று அந்த கமிட்டி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்த கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான பாலே சீதாராமுடு கூறுகையில்,‘‘இந்த தடை உத்தரவின் அடிப்படையில் இதுவரை எந்த பெண்ணுக்கும் அபராதம் விதிக்கவில்லை. இந்த உத்தரவை பெண்கள் மிகவும் சரியான பின்பற்றுகின்றனர்’’ என்றார்.

இதுகுறித்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய குமார் கூறுகையில்,‘‘எந்த பெண்ணிடம் இருந்தும் எங்களுக்கு புகார் வராததால், யார் மீதும் நாங்கள் வழக்குப்பதியவில்லை. நாங்கள் மீண்டும் அந்த கிராமத்துக்கு செல்ல உள்ளோம். இந்த தடைக்கு எதிராக பிரச்சாரம் செய்ய உள்ளோம்’’ என்றார்.

அதே சமயம் இதுகுறித்து பெண் சமூக ஆர்வலர் தேவி கூறுகையில்,‘‘இந்த தடை மிகவும் கண்டிக்கத்தக்கது. இது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. ஒரு பெண் எந்த உடை அணிய வேண்டும் என முடிவு செய்வது, அவரின் தனிப்பட்ட விருப்பம் மற்றும் உரிமை. இந்த கிராமத்தில் ஆண்கள் லுங்கி அணிந்தும், மேலாடை அணியாமலும் செல்கின்றனர். இது பெண்களுக்கு ஒரு விதமான உணர்வை ஏற்படுத்தாதா?’’என கேள்வி எழுப்பினார்

error: Content is protected !!