என் `அன்புடன் ரமேஷ்` புத்தகம் உங்களுக்கு ஏணி – ரமேஷ் அரவிந்த்!

என் `அன்புடன் ரமேஷ்` புத்தகம் உங்களுக்கு ஏணி – ரமேஷ் அரவிந்த்!

மிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என சுமார் 150 திரைப்படங்களில் நடித்தவரும் திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று பன்முகம் கொண்டவருமான ரமேஷ் அரவிந்த் ஒரு ஊக்கமூட்டும் பேச்சாளர் மற்றும் எழுத்தாளரும் கூட. அவருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி இருக்கிறது,பெலகாவியில் உள்ள ராணி சென்னம்மா பல்கலைக்கழகம். ‘மனதில் உறுதி வேண்டும்’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘டூயட்’, ‘பாட்டு வாத்தியார்’, ‘பஞ்சதந்திரம்’ உட்பட தமிழில் பல ஹிட் படங்களில் நடித்துள்ள அவர், கமல் நடித்த ‘உத்தமவில்லன்’, மற்றும் சில கன்னட படங்கள் மூலம் இயக்குநராகவும் தடம் பதித்திருக்கிறார்.

அதை எல்லாம் விட கர்நாடகா முழுவதும் உள்ள பெருநிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஊட்டும் பேச்சுக்கள், பயிற்சிகளை வழங்கி வரும் ரமேஷ் அரவிந்த், கல்வி, வாழ்க்கை, பணி, மற்றும் தொழிலில் வெற்றி பெறுவது குறித்த புத்தகங்களையும் எழுதி வருகிறார். இந்த வரிசையில் இவர் எழுதியுள்ள ‘அன்புடன் ரமேஷ்’ என்ற புத்தகம் சமீபத்தில் வெளியாகி சென்னை புத்தகக் கண்காட்சியில் தற்போது பரபரப்பாக விற்பனை ஆகி வருகிறது. சவன்னா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த புத்தகம் அகநாழிகை அரங்குகளான 520 மற்றும் 521-ல் கிடைக்கும். மேலும் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகிய மின் வணிக தளங்களிலும் கிடைக்கும்.

ரமேஷ் அரவிந்த் வழங்கிய ஊக்கமூட்டும் பேச்சுகளின் முக்கிய மற்றும் சுவாரஸ்யமான பகுதிகளின் தொகுப்பான இந்த புத்தகம், ‘ப்ரிதியிந்த ரமேஷ்’ என்ற பெயரில் கன்னடாவில் வெளியாகி ஆறே மாதங்களில் ஏழு பதிப்புகள் என பெரும் வெற்றி பெற்ற புத்தகத்தின் தமிழ் பதிப்பாகும். கே. நல்லதம்பி இதை சிறப்பான முறையில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

புத்தகம் குறித்து பேசிய ரமேஷ் அரவிந்த், “ஒருவர் வாழ்க்கையிலும் தொழில் அல்லது பணியிலும் வெற்றி பெற்று செல்வந்தராக உயர‌ 20 முதல் 30 ஆண்டுகள் வரை ஆகும் என்று நம்பப்படுகிறது. ஆனால் சில மாற்றங்களை செயல்படுத்தி, வியூகங்கள் வகுத்து அதற்கு ஏற்ப உழைத்தால் 6 முதல் 8 ஆண்டுகளிலேயே இலக்குகளை அடைந்து விடலாம். இந்த மாற்றங்கள், வியூகங்கள் மற்றும் உழைப்பு குறித்தும், நேர்வழியில் விரைவில் வெற்றி பெறுவதற்கான சூட்சுமங்கள் குறித்தும் இந்த புத்தகத்தில் கூறியுள்ளேன், அதாவது எனக்கு வாசிக்கறதும் எழுதறதும் பிடிக்கும். என் வாழ்க்கையில இருந்து, என் அனுபவத்துல இருந்து நான் எப்படி படிப்படியா முன்னேறினேன்ங்கறதை வச்சு, சின்ன சின்னக் கதைகள் மூலமா, இந்தப் புத்தகத்தை எழுதிருக்கேன்.

சிம்பிளா சொல்வதானால் நான் முதன் முதலில் லூனா வச்சிருந்தேன். அப்ப அது போதுமானதா இருந்தது. பிறகு, டிவிஎஸ் 50, சிலவருடங்களுக்குப் பின் பிரீமியர் பத்மினி கார் வாங்கினேன். ஒவ்வொரு காலகட்டத்துலயும் மனநிலைமாறுது. அடுத்தடுத்த தேவை வந்துட்டே இருக்கு. சினிமாவுல வாழ்க்கையை ஆரம்பிக்கும்போது 2 லட்சம் ரூபா இருந்தா போதும்னு நினைச்சேன்.பிறகு படிப்படியா தேவை அதிகரிச்சது. இந்த அனுபவங்களின் மூலம் நான் பெற்றது என்னங்கறதை இந்தபுத்தகத்துல எழுதி இருக்கேன்.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “நம்முடன் பணியாற்றுபவர்களையும் நமது குடும்பத்தினரையும் நமது சிறு செயல்கள் மூலமே உற்சாகப்படுத்தி விடலாம். இதன் மூலம் நமது பணியிடத்திலும், வீட்டிலும் மகிழ்ச்சி நிலவும். இது குறித்தும் எனது சொந்த வாழ்க்கை அனுபவங்களில் இருந்து எடுத்துரைத்துள்ளேன்,” என்று தெரிவித்தார்.

‘அன்புடன் ரமேஷ்’ புத்தகம் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு உதவிகரமாக இருக்கும் என்றும் திறமைகளை எப்போதும் உரிய முறையில் அங்கீகரிக்கும் தமிழக மக்கள் இந்த புத்தகத்தையும் வாங்கி, படித்து பாராட்டுவார்கள் என்று தான் நம்புவதாகவும் ரமேஷ் அரவிந்த் நம்பிக்கைக் கொள்கிறார்

error: Content is protected !!