உலக வர்த்தகத்தைப் பாதிப்புக்குள்ளாக்கும் அமெரிக்காவின் பொருளாதார முற்றுகைப் போர்!

உலக வர்த்தகத்தைப் பாதிப்புக்குள்ளாக்கும் அமெரிக்காவின் பொருளாதார முற்றுகைப் போர்!

மெரிக்கா தனது வல்லரசு சர்வாதிகாரப் போக்கை வலுப்பெற முன்பெல்லாம் யுத்தங்களை நடத்தி வந்தது, ஆனால் தற்சமயம் தனது கைப்பாவையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகளை ஏவி ‘பொருளாதார முற்றுகை’ என்ற யுக்தியைக் கையாண்டு தனது ஆதிக்க போக்கை நிலைநிறுத்தி வருவதை காண்கிறோம். முன்பு வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளில் யுத்தத்தை நடத்தியபோது தனது ராணுவ வீரர்களுக்கும் ஏற்பட்ட பாதகங்களால் உள்நாட்டு தேர்தலில் அதன் எதிரொலி இருப்பதைக் கண்டு அதை மெல்ல கைவிட்டு வரும் அமெரிக்கா பொருளாதார நெருக்கடி என்ற ஆயுதத்தை ஏந்தி பல நாடுகள் மீது ‘ போர்’ தொடுத்து வருகின்றனர். பொருளாதாரத் தடை இருப்பக்கமும் கூர்மை கொண்ட ஒரு கத்தி! அது ஏந்தியவருக்கும் தீங்கு விளைவிக்கும் அபாயம் உண்டு என்பதை 1806ல் நெப்போலியன் உணர்ந்தது தான்.

பிரிட்டன் மீது வர்த்தக தடைகள் அறிவித்தார், ஐரோப்பிய நாடுகள் எந்த வர்த்தகமும் செய்யக் கூடாது என்றார். ஆனால் ஸ்பெயின் நாட்டு அரியணை ஏறிய அவரது சொந்த சகோதரர் ஜோசப் போனாபார்டேவால் கூட செயல்படுத்த முடியாமல் திணறியது தான் வரலாற்று உண்மை! 2 ம் உலக போருக்குப் பிறகு அமெரிக்கா ‘பொருளாதாரம் முற்றகை’ என்ற ஆயுதத்தை ஏந்தி பலமுறை அழுத்தங்களை தரத் துவங்கியது. அதில் 1990ல் ஈராக் மீது பொருளாதார தடைகள் அறிவித்து அந்நாட்டு அதிபர் சதாமை தன் காலடியில் விழ அழுத்தம் கொடுத்தது. ‘டெசர்ட் ஷீல்ட், Desert Shield, என்ற வர்ணிக்கப்பட்ட போரில் ஐரோப்பிய நாடுகளும் குறிப்பாக நேட்டோ அணி நாடுகளும் கூட்டணி ராணுவமாக ஈராக் மீது போர் தொடுத்து, பொருளாதாரம் முற்றுகையையும் நிலை நிறுத்தியது. எந்த வர்த்தகமும் கிடையாது, மருத்துவ உதவிகளும் கிடையாது, ஈராக் என்னை வளம் கொண்ட பணக்கார நாடு சில மாதங்களில் பரம ஏழை நாடாக மாறியது, ஆனால் அடுத்த 12 ஆண்டுகளுக்கு ஈராக்கின் அதிபர் சதாம் துணிச்சலாக யுத்தக் களத்தில் தாக்குப் பிடித்தார். அந்தப் போரில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தது, பிற நாடுகளின் உலக வர்த்தக பரிவர்த்தனைக்கான அதிகாரப்பூர்வ பணமாகவும் மாறியது. ஆனால் 2003ல் ஒரு வழியாக அமெரிக்கப் படை சதாமை சுட்டுத் தள்ளியது, அமெரிக்க ராணுவமும் அந்த நொடியில் இருந்து ஈராக்கில் இருந்து வெளியேறியது. இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த நாச சக்தி கொண்ட ரசாயன வெடிகள் எதையும் கண்ணில் பட்டதாகவோ, கைப்பற்றி அழித்து விட்டதாகவோ தகவல் ஏதுமில்லை! ஆனால் இன்று வரை ஈராக் தற்சமயம் உலக பொருளாதார தரவரிசை பட்டியலில் 48வது இடத்தில் இருக்கிறது. கத்தார் தற்போது முன்னணி பொருளாதாரமாக இருப்பதை அறிவோம்.

அமெரிக்க தலையிட்டிருக்கு முன்பு இந்த இரு எண்ணெய் வள நாடுகளில் ஈராக் 38 மடங்கு கத்தார் பொருளாதாரத்தை விட பெரிதாக இருந்த நாடாகும். ஆனால் இன்றோ கத்தாரின் தனி நபர் வருமானம் ஆண்டிற்கு டாலர் 1,50,000 ஆனால் ஈராக்கில் அது டாலர் 60,000 மட்டுமாக இருக்கிறது! மொத்தத்தில் அமெரிக்காவினர் ஒரு பொருளாதார இணையத்தை ‘பொருளாதார முடக்கம்’ என்ற ஆயுதத்தால் சீரழித்து விட்டனர். அந்நாட்டின் தவறுகளை எதையும் சுட்டிக் காட்டாது இப்படி வஞ்சித்து விட்டதை ஐநா சபையோ, சர்வதேச அமைப்புகளோ ஐரோப்பிய கூட்டணி நாடுகளாலோ கூட தட்டிக் கேட்க வழி இன்றி தவிக்கிறார்கள். இப்படி பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் கியூபா, சிரியா, வெனிசுலா என்று ஒரு பட்டியல் இருக்கிறது. அப்பட்டியலில் தனக்கு சவால் விடும் பொருளாதாரமாக உயர்ந்து வரும் சீனா, ரஷ்யாவை வஞ்சிக்க கடந்த 4 ஆண்டுகளாக சதி திட்டத்தை அமெரிக்க தலைவர்கள் கட்டவிழ்த்து விட்டு வருகிறார்கள்.

இந்தப் பின்னணியில் உக்ரைன் குழப்பத்தை முன்நிறுத்தி அமெரிக்கா மிகக் கடுமையான பொருளாதார தடைகளை ரஷ்யா மீது அறிவித்து நடைமுறைப்படுத்தியும் வருகிறார்கள். செய்வதறியாது கையை பிசைந்தபடி ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார முற்றுகையைத் தீவிரப்படுத்தி வருகிறது. உக்ரைனில் போர் துவங்கிய கிட்டத்தட்ட 20 மாதங்கள் ஆகி விட்டது, இதுவரை அமெரிக்காவும் நாட்டோ கூட்டணி நாடுகளும் உக்ரைன் பிரச்சனைக்கு ரஷ்யாவை ஒழித்துக் கட்டுவதை தவிர வேறு எந்த செயல் திட்டத்தையும் தெரிவிக்காது இருக்கிறது. வங்கி பரிவர்த்தனையில் உலக வர்த்தகம் கட்டுப்பட்டு இருக்கிறது, அதிலிருந்து ரஷ்யாவை வெளியேற்றியது. ஒரு சில நாட்களில் ரஷ்யா தங்களிடம் மன்றாடி வரும் என்று எதிர்பார்த்து அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளுக்கும் அதிர்ச்சி தரும் வகையில் இன்று வரை ரஷ்யாவின் பொருளாதாரம் எந்த சரிவையும் சந்திக்கவே இல்லை.

சமீபத்தில் நடந்து முடிந்த ஜி20 உச்சி மாநாட்டில் ரஷ்யாவுக்கு எதிராக குற்றங்கள் சுமத்திய பல நாடுகள் இந்தியா, சீனா கொண்டு வரும் வர்த்தக மேன்மைக்கும் முக்கிய காரணம் ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகள் என்பதை புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டனர். அதன் வெளிப்பாடாய் அமெரிக்காவும் எதிர்பார்க்காத வகையில் ரஷ்யாவை கடுமையாக சாடும் பல குற்றச்சாட்டுகளை தளர்த்தி விட்டது. இறுதி ஒப்பந்தத்தில் ரஷ்யாவை குற்றஞ்சாட்டுவதை குறைத்து கொண்டதை உலகத் தலைவர்கள் நேரடியாக பார்த்து இந்தியாவின் பங்கை பாராட்டத் துவங்கி விட்டனர். எப்படி சீனாவும் இந்தியாவும் பெல்லோ ரஷ்யாவும் வளைகுடா நாடுகளும் ரஷ்யாவுடன் வர்த்தக தொடர்புகளை தொடர்கிறார்களோ, அதே நிலைப்பாட்டை வடகொரியாவும் மேற்கொண்டு வருகிறது.

அணு ஆயுத ஆராய்ச்சிகள், சக்தி வாய்ந்த ஏவுகணைகள் பரிசோதனை என்பதற்கு மட்டுமே தலைப்புச் செய்தியாக இருக்கும் வடகொரியா பல ஆண்டுகளாகவே அமெரிக்க கெடுபிடி அரசியலை எதிர்த்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தங்களைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதி நாடுகளின் அச்சுறுத்தல்களுக்கும் அமெரிக்க ராணுவ வலிமையை எதிர் கொள்ளவும் வடகொரியா தயாராக இருப்பது தான் உண்மை. ஆனால் அமெரிக்கா, ஐரோப்பிய ஊடகங்களோ வடகொரியாவை சதிகார நாடாக சித்தரித்து உலக எதிர்ப்பை நிலை நிறுத்தி அதன் வளர்ச்சியை முற்றிலும் தகர்த்து வருகிறது.

ஆம், இது கிட்டத்தட்ட கியூபா, வெனிசுலோவா, சிரியா மீது நடத்திய பொருளாதார முற்றுகைக்கு சமம். ஈராக், வியட்நாம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் ஏற்படுத்திய நாசங்களுக்கும் இணையானதே. வடகொரியா இதுவரை என்ன தவறு செய்தது? அப்படி நாச சக்தி ராணுவ தளவாடங்கள் பெற்றிருந்தால் அதை ஏன் உறுதியாக அதிகாரப்பூர்வ ஆதாரங்களை வெளியிட்டு ஐநா சபையை நடவடிக்கை எடுக்க கோரவில்லை? எது எப்படியோ, எதிரிக்கு எதிரி நண்பர்கள் ஆகி விடுவது தான் உலக வாடிக்கை, அந்த வகையில் ரஷ்யாவின் தொழில்நுட்ப வல்லமைக்காகவும் வர்த்தக உறவுகளுக்காகவும் ரஷ்யாவுக்கு வடகொரிய தலைவர் கிம் குண்டு துளைக்காத கவச ரெயிலில் ரகசிய பயணமாக சென்று விட்டார். அவருடன் ராணுவ தளபதிகள், அணு ஆயுத தொழில்நுட்ப வல்லுநர்கள், அதிமுக்கிய அமைச்சர்களும் கிம்முடன் விசேஷ ரெயில் சீனாவின் ஒப்புதலுடன் ரஷ்யாவின் கிழக்கு எல்லை பகுதிக்கு சென்று விட்டனர்.

ஜப்பானின் கடல் எல்லைகளில் இருக்கும் ரஷ்யாவின் துறைமுக நகரான வல்டிவோஸ்டாக்கில் புதினுடன் நேரடிப் பேச்சு வார்த்தைகள் நடத்திட ஆயத்தமாகி விட்டனர். ஜப்பானும் மேற்கத்திய நாடுகளும் இது என்ன வம்பா போச்சு, எங்களுக்கு ஆபத்து என குரல் கொடுத்து வருகிறார்கள். இதனால் வடகொரியா பல புதுப்புது ராணுவ தளவாடங்களை பெற்று எங்களுக்கு ஆபத்தாக மாறும் என்று கூறுகிறார்கள். இது தான் அமெரிக்காவின் சதியின் பின் விளைவு, ரஷ்யாவின் வலிமை அதன் வளங்களில் புதைந்திருக்கிறது.அதனால் எந்தக் கட்டத்திலும் மீண்டும் எழும் வலிமை பெற்ற நாடாக ரஷ்யா திகழ்கிறது. சீனாவுடன் பொருளாதார உறவுகளைப் போல் வடகொரியாவுடன் உறவுகள் வலுக்குமேயானால் வடகொரியா அமெரிக்க ஏகாதிபத்திய ஆதிக்கம் கொண்ட ஜப்பானும் தென்கொரியாவும் தனிமைப்படுத்தப்பட்டு தவிக்கையில் எப்படி அப்பகுதிகளில் வளர்ச்சிகள் தொடரும் என்ற அச்சம் எழுகிறது. இந்தியாவின் நிலை பெரிய வீழ்ச்சிக்குச் செல்லாது தப்பித்துக் கொள்ள பிரிக்ஸ், எஸ்சிஓ சமீபத்தில் ஆப்பிரிக்க யூனியனின் ஆதரவுகள் இருப்பதை மறந்து விடக் கூடாது.

ஆர். முத்துக்குமார்

error: Content is protected !!